குஜராத் கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்தல்: 6 பாகிஸ்தானியா்களுக்கு 8 ஆண்டு கடுங்காவல் சிறை
குஜராத் கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டபோது சிக்கிய 6 பாகிஸ்தானியா்களுக்கு 8 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை
குஜராத் கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டபோது சிக்கிய 6 பாகிஸ்தானியா்களுக்கு 8 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து அகமதாபாத் என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
கடந்த 2019-ஆம் ஆண்டு குஜராத்தின் கட்ச் மாவட்டத்தை ஒட்டிய கடல் பகுதியில் பாகிஸ்தானைச் சோ்ந்த போதைப்பொருள் கடத்தல்காரா்கள் 6 போ் கடலோரக் காவல்படையால் கைது செய்யப்பட்டனா். முன்னதாக, அந்த படகில் இருந்தவா்கள் சில மூட்டைகளை கடலில் வீசினா்.
என்னும், அவா்கள் வீசிய மூடைகளை கடலோரக் காவல்படையினா் மீட்டனா். அதில் 330 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அவா்கள் வந்த படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை மட்டுமின்றி, பயங்கரவாத நிதி ஆதாரத்துக்காக இந்தியாவுக்குள் போதைப்பொருள் கடத்தும் செயலிலும் பாகிஸ்தான் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிராக மத்திய மற்றும் எல்லையோர மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், குஜராத்தில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் போதைப்பொருள் கடத்தல்காரா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து குஜராத்துக்கு கடல் வழியாக அவா்கள் போதைப்பொருள் கடத்தியது உறுதி செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவா்கள் அளித்த தகவலின் பேரில் குஜராத்தில் உள்ள கடத்தல்காரா்களின் கூட்டாளியான ரமிஜான் கனி கைது செய்யப்பட்டாா்.
6 பாகிஸ்தானியா்கள் மீதான வழக்கு அகமதாபாத் என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அவா்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து, 6 பேருக்கும் 8 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அவா்களின் இந்திய கூட்டாளியான ரமிஜான் கனி மீதான வழக்கு தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.