முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

பிரதமருக்கு தமிழ் வணக்கம்

தமிழ்மொழி, பண்பாடு, பாரம்பரியம், இலக்கியச் செழுமை ஆகியவற்றின் மீது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பெருமதிப்பும் அன்பும் கொண்டிருக்கிறார்.

Updated On : 12 ஜூன் 2026, 6:31 am IST
பகிர்:

குடியரசு துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன்

உலகில் தாய்க்கு நிகராக ஒருவரும் இல்லை. ஆனாலும், பிறந்த மண்ணையும் மொழியையும் தாய்நாடு, தாய்மொழி என்று கொண்டாடுகிறோம். அன்னை மொழிக்கும் மண்ணுக்கும் சிறப்புச் செய்பவர்கள் எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

""தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற - எங்கள்

Advertisement

Advertisement

தாயென்று கும்பிடடி பாப்பா!

அமிழ்தில் இனியதடி பாப்பா! - நம்

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -

அதைத்

தொழுது படித்திடடி பாப்பா!''

மகாகவி பாரதியாரின் வரிகள் எனக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. இந்த வரிகளை மதிப்பவர்கள் வணக்கத்துக்கு உரியவர்கள்.

தமிழ்மொழி, பண்பாடு, பாரம்பரியம், இலக்கியச் செழுமை ஆகியவற்றின் மீது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பெருமதிப்பும் அன்பும் கொண்டிருக்கிறார்.

2019-ஆம் ஆண்டு நியூயார்க்கில் ஐ.நா. மாநாட்டில் உரையாற்றியபோது, பாரதத்தின் பெருமையாக உலகின் மிக மூத்த மொழி தமிழ் இருப்பதாகவும், 3,000 ஆண்டுகளுக்கு முன்பே உலக மக்கள் அனைவரையும் உறவினர்களாகப் பார்த்த நாடு பாரதம் என்றும் பெருமிதத்துடன் சங்க இலக்கியத்திலிருந்து கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்றின், "யாதும் ஊரே யாவரும் கேளிர்' வரிகளை மேற்கோள் காட்டி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார்.

சித்தாந்தங்களிலும் கோட்பாடுகளிலும் உலகின் முன்னோடிகளாக விளங்கியவர்கள் நாம் என பெருமையால் தமிழக இளைஞர்கள் நெஞ்சம் நிமிர்த்தி மகிழ்ந்த நாள் வரலாற்றின் பக்கங்களில் என்றும் மிளிரும்.உலகம் முழுவதும் செல்லும் இடங்களில் எல்லாம் பாரதத்தின் பெருமையாகத் தமிழ் மொழியைக் கொண்டாடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கும் பிரதமர், அண்மையில் மலேசியாவில் உரையாற்றிய போதும் தமிழரின் வரலாற்றுப் பக்கங்களை நினைவு கூர்ந்தார்.

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடலோடிகளாக உலகம் சுற்றி வந்து நாகரிகம் பாராட்டிய மக்கள் இன்றும் உலகின் பல நாடுகளில் பல துறைகளில் சிறந்து விளங்குவது தமிழின் பெருமையை எடுத்துக்காட்டுவதாக பிரதமர் குறிப்பிட்டதில் தமிழக வரலாறு, தமிழர் வாழ்வியல் குறித்த பிரதமரின் புரிதலை வெளிப்படுத்தின.

மலேசியாவில் தமிழ் மொழி, கலாசாரத்தை மேலும் வளர்க்கும் நோக்கில், மலேசியப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் மையம் அமைக்கப்படும் என அறிவித்தார். தமிழ் இலக்கியம், பண்பாடு மற்றும் திருக்குறள் கருத்துகளை உலகம் முழுவதும் பரப்ப இந்த மையம் உறுதுணையாக இருக்கும் என்பதிலும் தமிழரின் ஆயிரம் ஆண்டுகாலப் புகழை எடுத்துச் சொன்னதிலும் தமிழ் நெஞ்சங்கள் நிறைந்து போயின.

திருவள்ளுவர் மையம் அமைப்பது குறித்த விஷயத்தை எழுதும் போதே பிரதமர் திருக்குறள் மற்றும் மகாகவி பாரதி மீது கொண்டுள்ள ஈடுபாடு பல நினைவுகளை அலையலையாய் எழுப்புகின்றன.

72-ஆவது சுதந்திர தினத்தன்று தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றிய போது மகாகவி பாரதியாரின் தேசபக்திப் பாடலான "பாரத சமுதாயம் வாழ்கவே' பாடலின், "எல்லாரும் அமரநிலையை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும்' என்ற உணர்வுமிக்க வரிகளை மேற்கோள் காட்டிப் பேசினார்.

காசி விஸ்வநாதர் ஆலய புனருத்தாரண நிகழ்வில் "காசி நகர் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்' என்று மகாகவி பாரதியாரின் ஒரே தேசம் என்ற சிந்தனையை வெளிப்படுத்தும் வரிகளை மேற்கோள் காட்டினார். பேச்சில் மட்டுமல்ல செயலிலும் மகாகவி பாரதிக்கும், தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கும் சிறப்புச் செய்வதை கடமையெனத் தொடர்கிறார்.

வாரணாசி பல்கலைக்கழகத்தில் பாரதியார் இருக்கை ஏற்படுத்தி தமிழுக்குச் சிறப்புச் செய்ததைப் பாராட்டுவதா?... முழுமையான காலவரிசைப் படுத்தப்பட்ட பாரதியாரின் படைப்புகளை வெளியிட்டு சிறப்புச் செய்த சிறந்த சேவையைப் புகழ்வதா...

பிரான்ஸ் நாட்டுப் பயணத்தின்போது, செர்ஜி நகரில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்று அறிவித்து திருவள்ளுவர் சிலை இன்றைக்கு தமிழின் பெருமையைப் பறைசாற்றிக்கொண்டு கம்பீரமாக நிற்கச் செய்திருப்பதை வாழ்த்துவதா...

அண்மையில் இலங்கை சென்ற பிரதமருக்கு அந்நாட்டின் உயரிய "மித்ர விபூஷண' விருது வழங்கப்பட்ட போது "செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல வினைக்கரிய யாவுள காப்பு' என்னும் குறளைச் சொல்லி நட்பு பாராட்டியதை எண்ணி மகிழ்வதா...

பிரதமரின் முயற்சியால் ஆண்டுதோறும் சிறப்பாக காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்படுகிறது. இதில் 2022-இல் பிரதமர், 13 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பைத் தானே முன்னின்று வெளியிட்டதைக் கொண்டாடுவதா...

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி, தமிழர்கள் பாரதத்தின் பண்பாட்டுப் பெருமையில் பெரும்பங்கு கொண்டவர்கள் என்ற பெருமித உணர்வை இளைய தலைமுறையின் மனதில் ஏற்படுத்தி வருவதை இந்த ஆண்டு ராமேசுவரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை சந்தித்த போது உணர்ந்தேன்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கலை, அறிவியலில் சிறந்திருந்தனர். அவை பாதுகாக்கப்பட வேண்டுமானால் கோயில்களில் அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்று கருதினர்.

கோயில்களே கலைப் பொக்கிஷங்களாக விளங்கின. அத்தகைய பொக்கிஷங்கள் அபகரிப்பு, திருட்டு எனப் பல காரணங்களால் பாரதத்தைக் கடந்து பல நாடுகளிலும் இருக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் இதுவரை 640-க்கும் மேற்பட்ட கலைப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவை கோயில் சிலைகள். 2014 ஜூலையில் ஸ்ரீ புரந்தான் நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டது, 2014 நவம்பர் மாதத்தில் 61 தொல்பொருள்கள், 2015 செப்டம்பரில் 19 தொல்பொருள்கள், 2016 ஜனவரியில் தேவி அம்மன் வெண்கலச் சிலை, 2016 நவம்பரில் 111 தொல்பொருள்கள் அமெரிக்காவிலிருந்து மீட்கப்பட்டன.

2017 ஏப்ரலில் 10 தொல்பொருள்கள் சிங்கப்பூரில் இருந்தும், 2018-ஆம் ஆண்டு 13-ஆம் நூற்றாண்டு சிற்பம் பிரிட்டனில் இருந்தும், 2019 ஜூலையில் 68 தொல்பொருள்கள் அமெரிக்காவில் இருந்தும், 2020-ஆம் ஆண்டு ஜனவரியில் 17 தொல்பொருள்கள் ஆஸ்திரேலியாவில் இருந்தும், 2020 அக்டோபரில் 157 தொல்பொருள்கள் அமெரிக்காவில் இருந்தும், 2021-இல் 23 தொல்பொருள்களும், 2022 ஜூலை மாதம் 70 தொல்பொருள்களும் அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டன.

2023 மார்ச்சில் 16 தொல்பொருள்கள் நெதர்லாந்தில் இருந்தும், 2023 ஜூலையில் 50 தொல்பொருள்கள் அமெரிக்காவில் இருந்தும், 2024 ஜனவரியில் 29 தொல்பொருள்கள் அமெரிக்காவில் இருந்தும், 2026 மே மாதத்தில் 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால ஆனைமங்கல செப்பேடுகள் நெதர்லாந்தில் இருந்தும் மீட்கப்பட்டுள்ளன.

ஆனைமங்கலச் செப்பேடுகளைப் பற்றிச் சொல்லும் போது, முதலாம் ராஜேந்திர சோழனின் நினைவைப் போற்றும் வகையில் பிரதமர் தமிழகத்தின் கங்கை கொண்ட சோழபுரம் வந்தது நினைவுக்கு வருகிறது. வாரணாசியில் இருந்து கங்கை நீரை எடுத்து வந்து பெருவுடையாருக்கு அபிஷேகம் செய்ய வைத்து வழிபட்டதும், ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டதும் பெருமைக்குரிய தருணங்களாக இருக்கின்றன.

இது ராஜராஜ சோழனின் மண் என்று கொண்டாடிய பிரதமர், "நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க' என்று மாணிக்கவாசக சுவாமிகளின் சிவபுராணத்துடன் தனது உரையைத் தொடங்கியது தமிழ் மீது பிரதமரின் பக்தியைச் சொல்லும் கணங்களாக மலர்ந்தன.

பாரதத்தின் பெருமையை தமிழரின் ஆற்றலை கடல்கடந்து உலக நாடுகளில் நிலைநாட்டிய சோழப்பேரரசின் மாமன்னர்களான ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் பெயர்கள் பாரதத்தின் அடையாளங்கள் என்று அவர் பெருமிதம் கொண்டதை நினைத்து உவகை அடைகிறேன்.

ஜனநாயக முறைப்படி குடவோலை முறையில் ஆட்சி செய்தவர்கள் சோழர்கள், இன்று உலகம் பேசும் நீர் மேலாண்மைக்கு முன்னோடிகள் சோழர்கள் என்று போற்றிய பிரதமர், திருமூலரை மேற்கோள் காட்டி "அன்பே சிவம்' என்னும் கருத்து எவ்வளவு தொலைநோக்கான பார்வை என்று மகிழ்ந்ததை என்ன சொல்லி வர்ணிப்பது?

சோழர்களின் பெருமையைப் புகழ்ந்த நினைவுகளைப் பகிரும் போதே, செங்கோலுக்குப் பிரதமர் வழங்கிய கௌரவம் மனதில் எழுகிறது. புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்ட போது, நாடு சுதந்திரம் பெற்ற நேரத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தால் வழங்கப்பட்ட செங்கோலை, நீதியின் அடையாளமாகத் தமிழர்கள் கண்ட செங்கோலை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கி மீண்டும் தனது கைகளில் பெற்று மரியாதையுடன் தாங்கிக் கொண்ட தருணத்தில் தமிழகம் நெகிழ்ந்து போனது.

பின்னணியில் தமிழ்க் கலைஞர்களால் தமிழ் இசைக் கருவியான நாகஸ்வரம் ஒலிக்க, தேவாரம், திருவாசகம் எனத் திருமுறைகள் பாட தமிழ்மண்ணின் துறவிகள் வாழ்த்த நாடாளுமன்றக் கட்டடத்தில் ஆலயத்தில் இறைவனை எழுந்தருளச் செய்வதைப்போல செங்கோலை ஸ்தாபிதம் செய்தது தமிழர் ஒவ்வொருவரையும் இறும்பூது கொள்ளச் செய்தது.

இங்ஙனம் எண்ணம், சொல், செயல் அனைத்திலும் தமிழைப் பெருமைப்படுத்திக் கொண்டிருக்கும் பிரதமருக்கு தமிழ் வணக்கத்தையும் வாழ்த்துகளையும் தெரிவித்து மகிழ்வோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.