உள்ளங்கை உணர்ந்த கண்ணீர்!
'தினந்தோறும்' படம் வந்தபோது நாகராஜை உற்றுப் பார்த்தது தமிழ் சினிமா.
'தினந்தோறும்' படம் வந்தபோது நாகராஜை உற்றுப் பார்த்தது தமிழ் சினிமா. ஆனால், கனவுத் தொழிற்சாலையில் திடீரெனக் காணாமல் போனார். 'மின்னலே', 'காக்க காக்க' படங்களுக்கு பளீச்சென காதல் வசனங்கள் தீட்டியதோடு, மறுபடியும் காணாமல் போனார். பின்னர் தடம் மாறி நின்றார். சிறிது இடைவெளிக்குப் பின், மீண்டும் எழுந்து வந்து 'மத்தாப்பூ' என்ற படம் தந்தார். அதே இடைவெளியில் இப்போது 'ஆகாயம்' படத்தோடு வருகிறார்.
'ஆகாயம்' எந்த மாதிரியான படம்?
உறவுகளின் பேரன்பைத்தான் 'ஆகாயம்' என்று சொல்ல வருகிறேன். சாராயம்தான் போதை என்று பல பேர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அது தவறு. பணம், காதல், புகழ், படைப்பு, அதிகாரம், ஆன்மிகம் என ஒவ்வொன்றும் போதைதான். போதையை மாற்றிப் போட்டால் பாதையே மாறிப் போகும். உன் போதையை சாராயத்தில் இல்லை... நல்ல விஷயத்தில் போடு. இதுதான் இந்தப் படத்தின் ஸ்டோரி லைன்.
Advertisement
Advertisement
மனிதர்கள் ஒவ்வொருவரும் ஏதாவதொரு விஷயத்திற்கு அடிமையாக இருப்பார்கள். அப்படி போதைக்கு அடிமையான ஒருவனின் வாழ்க்கைதான் படத்தின் திரைக்கதை. 'மனிதன் அவன் நினைப்பதைக் காட்டிலும் அதிக ஒழுக்கமுடையவன். ஆனால், கற்பனை செய்து பார்க்க முடியாத கெட்டவன்' என்ற சிக்மண்ட் ப்ராய்ட் வாசகம்தான் படத்தின் கரு. சென்னையை களமாகக் கொண்ட கதை. அங்கே பயணமாகிற சிலரின் வாழ்க்கைக்குள் இந்தக் கதை ஊடுருவும்.
எப்படி இருக்கும் படத்தின் திரை வடிவம்?
எல்லாமே என் வாழ்க்கையில் நடந்த விஷயங்கள்தான். எனக்குள் நடந்த சில சம்பவங்களின் தொகுப்பு. யாரோ பேசின வார்த்தைகள், நம் உள்ளங்கை உணர்ந்த கண்ணீர், கண் கூடாகப் பார்த்த அம்சங்கள்... இது உண்மைக்கு நெருக்கமெல்லாம் இல்லை. இது உண்மையேதான். ஒரு சினிமா, இரண்டரை மணி நேரம்தான். ஆனால், ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் 24 மணி நேரம். 'வாழ்க்கைதான் யோசிக்க முடியாத சினிமா' என்பது டிஸிகோவின் மேற்கோள். இது எவ்வளவு உண்மை.
நாம் அனுதினமும் கவனிக்காமல் கடந்து போகிற ஒவ்வொரு எளிய மனிதனின் வாழ்க்கைதான் இது. கண்ணுக்குத் தட்டுப்படாத பிரியங்களின், கரிசனங்களின் குவியல்தான் இந்தப் படம். எங்கோ கோடி பேரில் ஒருவனுக்கு நடக்கிற கதை இல்லை. இது எல்லோருக்குமானது. உங்களைவிட என்னை விட எல்லோரும் சந்திக்கப் போகிற பிரச்னை. இந்தக் கோரத்தின் பிடியில் யாரும் சிக்கிக் கொள்ளலாம்... அதற்கான விழிப்புணர்வு இது.
கோடம்பாக்கம் முழுவதும் தெரியாத முகங்கள் இல்லை. இருந்தும் ஏன் இப்படி என்று யோசிப்பதுண்டா?
எனக்கு சினிமா பணத்தைத் தந்துகொண்டே இருந்தது. நான் பணியாற்றாத படங்கள் இல்லை. ஒரு கட்டத்தில் எது சந்தோஷமோ... அதுவே துயரம் தந்தது. போதையில் கிடைக்கிற ஞானம், எந்த மாற்றத்தையும் கொண்டு வந்துவிடாது என்று உணர்ந்த போது, எனக்கான அடையாளமாக எதுவுமில்லை.
மனைவி, மகனுக்கு ஏதோ வேலை பார்த்து காசு கொடுத்து விடுவேன். ஆனால், எனக்கான தேவை குடியாக மட்டுமே இருந்து விட்டது. சினிமாவை விட்டு வெகு தூரம் போன நான் வாழ்க்கையை விட்டும் ரொம்ப தூரம் போய் விட்டேன்.
சினிமாவில் இருந்து அழிந்து போனதற்கு நான் சான்றாக இருந்து விடக் கூடாதென சின்னதாக புத்திக்குள் ஒரு வெளிச்சம், நிறைய படிப்பினைகள் இப்போது பக்குவத்துக்கு அழைத்து வந்திருக்கிறது. ஸ்ரீராம் கார்த்தி, ஆலிஷா மிராணி, ஷீலா, சந்தானபாரதி, ஜெயப்பிரகாஷ் இப்படி நல்ல நடிகர்கள் துணைக்கு வந்தார்கள். தயாரிப்பாளர் டெல்டா டாக்கீஸ் ஜெயச்சந்திரன் கைக்கொடுத்து தூக்கிவிட்டார்.
கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவில், ரகுநந்தன் இசையமைக்கிறார். படம் அருமையாக வந்திருக்கிறது. முழுப் படத்தையும் கையில் வைத்திருக்கிற நம்பிக்கையில்தான் பேசுகிறேன். இப்போது அடுத்தப் படத்துக்கான வேலைகளையும் ஆரம்பித்து விட்டேன். இனி எல்லாம் நலமே!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.