FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அலைகடலும் ஆழ்கடலும் அவர்கள்தான்!

'எங்கேயோ அந்த போஸ்டரைப் பார்த்தேன். புலி ஒன்று ஆக்ரோஷமாக மானைத் துரத்தும் படம்.

22 ஆகஸ்ட் 2026, 9:59 pm IST
பகிர்:

'எங்கேயோ அந்த போஸ்டரைப் பார்த்தேன். புலி ஒன்று ஆக்ரோஷமாக மானைத் துரத்தும் படம். ' நீ மானாக இருந்தால், புலியைவிட வேகமாக ஓடு. நீ புலியாக இருந்தால், மானைவிட வேகமாக ஓடு...' அந்த வரிகள் என்னைப் பாதித்தது. ஏனென்றால், என் வாழ்க்கையே அதுதான்! ' - ஆழமாகவும் அழுத்தமாகவும் பேசுகிறார் சாம் சி.எஸ். தற்கால சினிமா இசையில் தவிர்க்க முடியாத பெயர்.

தனித்துவ இசையை விரும்பும் இயக்குநர்களின் 'குட் புக்'கில் இருக்கிறார். பெரும்பாலான படங்களில் சாம் சி.எஸ். பெயர் மிளிர்கிறது. 'விக்ரம் வேதா', 'கைதி', 'அடங்க மறு', 'சாணி காயிதம்', 'ராக்கெட்ரி', 'சுழல்' வெப் சீரிஸ் எனப் படத்துக்குப் படம் கவனிக்க வைப்பவரின் அண்மை ஹிட் 'ஹபிபீ', 'காளிதாஸ் 2'.

ஒவ்வொன்றிலும் தனித்துவம் தெரிகிறது. இது எப்படி?

Advertisement

Advertisement

அனைத்துக்கும் உணர்வுகள்தான் காரணம். உணர்வுகளை இதயத்துக்குள் கடத்துவதுதான் இசையின் வேலை. என் எல்லாப் படங்களிலும் அது நன்றாகவே நடந்திருப்பதாக உணர்கிறேன். 'விக்ரம் வேதா', 'கைதி' என எல்லாப் படங்களுக்குமே ஒரே உழைப்புதான்.

இதுவரை சிக்காத சூட்சுமம் பிடித்து வேலை செய்கிறேன். எல்லாப் படங்களுமே நிறைய ரசிகர்களை எனக்குக் கொண்டு வந்துள்ளது. அதைவிட புத்தம் புது இயக்குநர்கள் தயாரிப்பாளர்களிடம் போய் கதை சொல்லும் போதே, 'சார் இந்தக் கதைக்கு சாம் சி.எஸ். இசை இருந்தால் நன்றாக இருக்கும்' என்று சொல்லுகிறார்கள். இதை தயாரிப்பாளர்களே சொல்லும் போது, அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.

பின்னணி இசையில் அதி முக்கியத்துவம் கொடுக்கிறேன். பாடல்கள் பொருந்தி வந்தால், இன்னும் நல்ல மேஜிக் நிகழும். இப்போது 'ஹபிபீ' படத்தின் இசைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். ஆர்பார்ட்டம் இல்லாமல் ஆரம்பிக்கும் கதை. ஒவ்வொரு காட்சியிலும் தடதடத்து பயணிக்க வேண்டும்.

அதை உணர்ந்து அதற்குப் பின்னணி இசை கொடுத்தேன். இந்த வேளையில் வாய்ப்புக் கொடுத்த ஒவ்வொரு இயக்குநருக்கும் நன்றி. மற்றபடி எதையும் சாதித்து விட்டதாக பெருமிதம் ஒரு சதவிகிதம் கூட என்னிடம் இல்லை. நான் ஏதோ பெரிய ஆள் என நினைக்கவில்லை. உள்ளத்துக்கும் உலகத்துக்கும் உண்மையாக வாழ்ந்தால் அதுதான் வெற்றி.

ரொம்பவே தன்னடக்கத்துடன் பேசுகிறீர்களே?

என் உயரம் எனக்குத் தெரிவதுதான் இதற்குக் காரணம். இந்தத் துறைக்கு நான் வருவதற்கு எந்தத் திட்டமிடலும் கிடையாது. சிலர் சொல்லுவது போல், சினிமா, இசை என்பது எனக்கு விபத்துதான். கம்பம் அருகில் இருக்கிற நாராயணன் தேவன் பட்டி கிராமம். அங்கிருந்து சென்னை வந்ததே பெரிய கதை. நல்ல படிப்பு, ஐ.டி. துறையில் நல்ல சம்பளம் என போய்க் கொண்டு இருந்தது.

திடீரென்று எல்லாவற்றையும் விட்டு விட்டு இசை, கீ போர்டு என வந்து விட்டேன். ஆரம்பத்தில் விளம்பரப் படங்களுக்கு இசை அமைத்தேன். வருமானம் மிகவும் குறைவு. இருந்தாலும் அதிசயம் நிகழும் என்பது போல் காத்திருந்தேன். 'அம்புலி' படம் மூலம் சினிமா வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் வாய்ப்புகள் எதுவும் இல்லை. இருந்தாலும் காத்திருந்து, நீங்கள் கவனிக்கும் இடத்துக்கு வந்திருக்கிறேன். இதுதான் நான். வேறு என்ன இருக்கிறது நான் சொல்ல...

பின்னணி இசையைக் கவனிக்க வைக்கிறீர்கள்... அதில்தான் கூடுதல் கவனமோ?

இயக்குநர்கள் கதையை முதன் முறையாக விவரிக்கும் போதே, பின்னணி இசை குறித்த குறிப்புகள் என் மனதில் தோன்றிவிடும். கதாபாத்திரங்கள், களச் சூழல்கள், வசனங்கள், கதை நகரும் போக்கு, இசை முழுவதுமாக மௌனிக்கப்பட வேண்டிய நிமிடங்கள், பின்னணி இசைக்கு முக்கியத்துவம் உள்ள தருணங்கள்... ஆகியவற்றை துல்லியமாக அவதானித்த பிறகு, என்னுடைய இசைக் கோர்வையைத் தொடங்குகிறேன்.

இயக்குநர்களின் வேண்டுகோள் அல்லது படக்குழுவினரின் இசை சார்ந்த கோரிக்கை ஏதேனும் இருந்தால், அவற்றையும் கேட்டு பின்னணி இசையைத் தொடர்கிறேன். வித்தியாசமான ஒலிக்குறிப்புகள் மூலம் கதாபாத்திரத்தின் குணாதிசயங்களைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கவும் முயற்சிக்கிறேன்.

கதையும் திரைக்கதையும் அதனுடைய பின்னணி இசை எப்படி அமைய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது. எந்தப் பாணியிலான சினிமா என்பதையும் அவதானித்து, பின்னணி இசையை வழங்குகிறேன். ரசிகர்களின் ரசனையையும், அவர்களின் எதிர்பார்ப்பையும் கடந்து ஓர் ஒலியை வழங்கும் போது, அவர்களின் மகிழ்ச்சியை கரவொலியாக உணர்கிறேன்.

இசை ரசிகர்களின் காதுகளில் ஒலி சப்தமாகச் சென்றடையாமல் நாதலயத்துடன் இனிய ஒலியாகச் சேரவேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்துகிறேன். மெட்டமைத்த பிறகு பாடல்கள் உருவாவதும், பாடல்கள் எழுதப்பட்ட பிறகு மெட்டுகள் உருவாதும் இயல்புதான் என்றாலும், வெற்றிகரமான பாடல்கள் அமைய வேண்டும் என்பது தான் இறுதி இலக்கு.

அறைக்குள்ளேயே இசைப் பணியை முடித்துவிடுவீர்களாமே?

அதிகாலை எழுவது பள்ளி நாள்களில் இருந்தே பழகிவிட்டது. அதை மாற்றிக் கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதற்கெனத் தனிப் பழக்க, வழக்கம் எதையும் வைத்துக் கொள்வதில்லை. எல்லாம் கேள்வி ஞானம்தான். எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இந்த மூன்று பேரைத் தவிர இங்கே யாரும் கிரியேட்டர்கள் இல்லை. எல்லாவற்றையும் அவர்களே தொடங்கி முடித்துவிட்டார்கள்.

நமக்கு எல்லாமே இளையராஜாதான். பறவைகள் தடயங்களே இல்லாமல் போய் விடுகின்றன. அவற்றின் எச்சங்கள் மரங்களாவதைப் போலத்தான் இசையும், பாடல்களும். இசையின் எல்லா நுணுக்கங்களையும் எம்.எஸ்.வி., இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் மூவரும் தொட்டுவிட்டார்கள். அலைகடலும் ஆழ்கடலும் அவர்கள் என்றான பின், கரைகளும், நுரைகளும் என்னவாகும்?

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments