சிங்கப்பூரில் தமிழ் - தமிழர்!
சிங்கப்பூரில் தமிழும் தமிழரும் சிறப்புறத் திகழ்வதற்கு அங்குள்ள தமிழர்தம் முயற்சியும் அரசின் கொள்கைகளும்...
மலேசிய நாட்டின் ஒரு மாநிலமாக சிங்கப்பூர் இருந்த 1950-களில் சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு தன்னாட்சியுடன் விளங்கியது சிங்கப்பூர். அப்போது, சிங்கப்பூரின் முதல்வராக இருந்தவர் டேவிட் மார்ஷல். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் பிற்காலத்தில் 'சிங்கப்பூரின் சிற்பி' என்று போற்றப்பட்ட லீ குவான் யூ. சிங்கப்பூரின் முதல்வர் டேவிட் மார்ஷல் 'சட்டப்பேரவையில் விவாதங்கள் நடத்துவதற்கான சட்டப்பேரவை மொழியாக ஆங்கிலம், மலாய், மேண்டரின், தமிழ் ஆகியவை இருக்க வேண்டும்' என்ற முக்கிய தீர்மானத்தை முன்மொழிந்தார்.
இந்த தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் லீ குவான் யூ வழிமொழிந்தார். இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. இதுவே சிங்கப்பூரில் தமிழுக்குக் கிடைத்த முதல் முக்கிய அங்கீகாரம். 1965-இல் மலேசியாவிலிருந்து பிரிந்து சிங்கப்பூர் தனி நாடானது. மலாய், மேண்டரின், தமிழ், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளும் அதிகாரத்துவ மொழிகளாக விளங்கும் என்றும், மலாய் மொழி தேசிய மொழியாகத் திகழும் என்றும் சட்டம் இயற்றப்பட்டது.
மக்கள்தொகையில் பெரும்பான்மையினர் சீனர்கள். அவர்களின் மொழி மேண்டரின். 2024-ஆம் ஆண்டு அரசு எடுத்த கணக்கெடுப்பில் சீனர்கள் 75.6%, மலாய்காரர்கள் 15.1%, இந்தியர்கள் 7.6%. இதில் தமிழர்கள் மொத்த மக்கள்தொகையில் 4.9 %. நான்கு மொழிகளும் அதிகாரத்துவ மொழிகள் என்பதும் சம உரிமை பெற்றவை என்பதும் சட்டம். ஒப்பீட்டு அளவில் தமிழர்களின் சதவீதம் குறைவு என்றாலும், அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றாக தமிழ் இடம்பெற்றதற்கான காரணங்களை விளக்கியுள்ளார் லீ குவான் யூ. சிங்கப்பூர் நாட்டின் சுதந்திரத்துக்கும், கட்டுமானத்துக்கும், வளமைக்கும் அன்றிருந்த தமிழர்களின் உழைப்பு அளப்பரியது.
Advertisement
Advertisement
இதை முழுமையாக அங்கீகரித்தவர் லீ குவான் யூ. அத்துடன் அங்குள்ள ஆட்சியாளர்களின் பரந்த நோக்கும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் உயரிய பண்பும் காரணம். அனைத்து அரசு அறிக்கைகளும் அறிவிப்புகளும் நான்கு மொழிகளிலும் வெளியிடப்படுகின்றன. அரசு அலுவலகங்களின் பெயர்கள், கல்வி நிலையங்கள், அனைத்து அரசு சார்ந்த அமைப்புகளின் பெயர்கள் நான்கு மொழிகளிலும் உள்ளன.
சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் தமிழில் உரையாற்றலாம். பிரதமர் விடுக்கும் தேசிய தினச் செய்திகளும் உரைகளும் நான்கு மொழிகளிலும் வெளியிடப்படுகின்றன. அரசுக்கு தமிழில் யாரேனும் கடிதம் எழுதினால் அவர்களுக்கு உரிய பதில் கிடைக்கும். தமிழ் வானொலி, தொலைக்காட்சிகளை நடத்துவதற்கு அரசு அனுமதி தருவது மட்டுமல்ல, மானியமும் தருகிறது. நூலகங்களில் தமிழ்ப் பிரிவு என்று தனித்த முக்கியத்துவத்துடன் தமிழ் நூல்கள் இடம் பெறுகின்றன. விரைவு ரயில்களில் தமிழிலும் அறிவிப்பு செய்யப்படுகிறது. ரயில் பயணச் சீட்டுகளில் தமிழ் இடம்பெறுகிறது.
வங்கிகள், மருத்துவமனைகளில் தானியங்கி இயந்திரங்களில் தமிழ்ச் சேவை உள்ளது. சிங்கப்பூர் பணத்தாள்களிலும் நாணயங்களிலும் 'சிங்கப்பூர்' எனும் நாட்டின் பெயர் தமிழ் உள்பட நான்கு மொழிகளிலும் உள்ளது. தமிழ் மொழி எவ்வாறெல்லாம் சமமாக மதிக்கப்படுகிறது என்பதை 'வாமனத்தீவு' என்ற சிங்கப்பூர் வரலாற்று நூலில் பட்டியலிட்டுள்ளார் சிங்கப்பூர் நா. ஆண்டியப்பன். தேசிய கலை மன்றம் என்ற அமைப்பு அரசின் அங்கம். இந்த அமைப்பு மூலம் அரசு நான்கு அதிகாரத்துவ மொழிகளில் கலை, இலக்கிய வளர்ச்சிக்கு உதவிகளைச் செய்து வருகிறது. இந்த அமைப்பு ஆண்டுதோறும் எழுத்தாளர் விழாவை உயிர்ப்புடன் நடத்தி வருகிறது.
எழுத்தாளர் விழாவையொட்டி, இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நான்கு மொழிகளிலும் சிறுகதை மற்றும் கவிதைப் போட்டிகள் நடத்தி 'தங்க முனைப் பரிசு' வழங்கப்படுகிறது. முதல் பரிசு 6,000 சிங்கப்பூர் வெள்ளி. இந்தியப் பணத்தில் ரூ. 4,50,000. நான்கு மொழிகளுக்கும் சமமாகப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இவை தவிர, நூல் வெளியீட்டு நிகழ்வுகளுக்கும் இலக்கிய நிகழ்வுகளுக்கும் பல வழிகளிலும் நிதி உதவி அரசால் வழங்கப்படுகிறது. சிறந்த நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இவையல்லாமல் உயரிய விருதாக 'கலாசார விருது' வழங்கப்படுகிறது. சிங்கப்பூர் அதிபரின் கரங்களால் வழங்கப்படும் இந்த விருதை இதுவரை பல கலை, இலக்கியத் தமிழ் ஆளுமைகள் பெற்றுள்ளனர். 'லிட்டில் இந்தியா' என்ற பகுதியில் 'இந்திய மரபுடைமை நிலையம்' உள்ளது. இதில் இந்தியா பற்றி ஏராளமான வரலாற்று, பண்பாட்டுச் செய்திகள், சின்னங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
சொற்பொழிவுகளுக்காக சிங்கப்பூர் சென்றபோது இந்திய மரபுடைமை நிலையத்தைப் பார்வையிடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளேன். அதில் பாதி தமிழகத்தைப் பற்றியும் சிங்கப்பூருக்கு தொடக்க காலத்தில் வந்த தமிழர்களைப் பற்றியும் அரிதான தகவல்கள் உள்ளன. ஆட்சியாளரிடமும் அங்குள்ள மக்களிடமும் அனைத்து மொழிகளையும் பண்பாட்டையும் உளப்பூர்வமாக மதிக்கும் பன்மையுணர்வு வியாபித்திருப்பதை உணர முடிகிறது.
ஆண்டுதோறும் தமிழர்கள் நடத்தும் பொங்கல் விழாக்களில் தமிழர் ஆடைகளான பட்டு வேட்டி, துண்டு, புடவைகளுடன் சீன முக்கிய அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்று அங்குள்ள தமிழர்களுடன் தாங்களும் மாட்டு வண்டியில் பயணிப்பது, உரலில் தானியங்களை இடிப்பது, மண் சட்டியில் பொங்கல் வைப்பது உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு தாங்களும் அவற்றைச் செய்து மகிழ்கின்றனர்; தமிழர்களை மகிழ்விக்கின்றனர்.
சிங்கப்பூரில் சிறிதும் பெரிதுமாக முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் செயல்பாடுகள் அந்நாட்டின் தமிழ் மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகின்றன. 'தமிழவேள்' கோ. சாரங்கபாணியால் 1935-இல் தொடங்கப்பட்ட 'தமிழ் முரசு'' இன்று வரை தமிழில் சிங்கப்பூரில் வெளிவரும் ஒரே நாளேடாக விளங்குகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 'தமிழ் மொழி மாதம்' என்று அரசால் அறிவிக்கப்பட்டு அரசு உதவியுடன் தமிழ்மொழி விழாக்கள் தமிழ் அமைப்புகள் மூலம் நடைபெற்று வருகிறது.
சிங்கப்பூர் தமிழர்கள் தங்களது தாய்மொழியைப் பாதுகாக்க தனித்துவத்துடன் முயற்சிப்பதுடன், அங்குள்ள பிற மொழிகளையும் மொழியினரையும் பன்மைக் கோட்பாட்டையும் முழுமனதுடன் ஏற்றும் மதித்தும் நடக்கின்றனர். இதனால், அனைத்துத் தரப்பினரிடமும் நல்லிணக்கமும் ஒற்றுமையும் சாத்தியப்படுகிறது.
சிங்கப்பூரில் ஆங்கிலம் பயிற்று மொழி. தாய்மொழிப் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இரண்டாம் மொழிப்பாடமாக தமிழ் அங்குள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கற்றுத் தரப்படுகிறது. தொடக்க காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட தமிழாசிரியர்களால் பள்ளிகளில் தமிழ் கற்றுக் கொடுக்கப்பட்டது. தற்போது அங்குள்ள தேசிய ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழாசிரியர்களுக்கான பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகள் உள்ளன. சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகமும் தமிழ்மொழி ஆராய்ச்சிக் கழகமும் தமிழில் மேலும் பல இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டங்களை வழங்குகின்றன.
சிங்கப்பூரில் தற்போது 700-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் தமிழ் மொழி கற்பிக்கப்படுகிறது. தொடக்கப் பள்ளிகளில் சுமார் 15,000 பேரும், உயர்நிலைப்பள்ளிகளில் 7,500 பேரும், புதுமுக வகுப்புகளில் 300 முதல் 400 பேர் வரையிலும் தமிழ் பயில்கின்றனர். கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள அனைத்து பாலர் பள்ளிகள் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது.
தற்போது சிங்கப்பூரில் சுமார் 750-க்கும் மேற்பட்ட தமிழா சிரியர்கள் உள்ளனர். உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் போன்ற சிறப்பு மையங்களாலும் சில பள்ளிகளில் செயல்பட்டு வரும் 'தமிழ் மொழி சிறப்பு திட்டம்' மூலமும் தமிழ் இலக்கியம் மற்றும் மொழித்திறன் மேம்படுத்தப்படுகிறது.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவன் பெரும்பான்மை மொழியான மேண்டரின் மொழியை இரண்டாம் பாடமாக எடுத்துப் படிக்க விண்ணப்பித்தால் மேண்டரின் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட கல்வி அதிகாரியே அந்த மாணவரை அழைத்து 'உன் தாய் மொழியை நீ தெளிவுறப் படிக்க வேண்டும்' என்று வலியுறுத்தும் மேம்பட்ட நிலை அங்குள்ளது. இத்தகைய அரசியல் மற்றும் சமூகச் சூழல்தான் எஸ்.ஆர். நாதன் என்ற தமிழர் இரண்டுமுறை மொத்தம் 12 ஆண்டுகள் சிங்கப்பூரின் அதிபராகத் திகழ வழிவகுத்துள்ளது. தற்போதைய அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூரில் பிறந்த இலங்கைத் தமிழர்.
அனைவரும் அவரவர் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது லீ குவான் யூ காலத்திலிருந்து சிங்கப்பூரின் கோட்பாடாக இருந்து வருகிறது. சிங்கப்பூரில் தமிழும் தமிழரும் சிறப்புறத் திகழ்வதற்கு அங்குள்ள தமிழர்தம் முயற்சியும் அரசின் கொள்கைகளும் அணுகுமுறையும் அந்நாட்டின் பன்மைக் கோட்பாடும் காரணங்களாகும்.
கட்டுரையாளர்: தலைவர், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.