FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

சட்டப்பேரவையில் தமிழ் மொழி பற்றி அமைச்சர் மரிய வில்சன் பேசியதற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 10:28 am IST
மரிய வில்சன் / நயினார் நாகேந்திரன்
பகிர்:

சட்டப்பேரவையில் நேற்று பேசிய கடையநல்லூர் மதிமுக எம்எல்ஏ  ராஜேந்திரன், நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை வாசிக்கும்போது தமிழில் சில சொற்றொடர்களை பேசாமல் விட்டுவிட்டார் என்றும் சில சொற்றொடரில் இலக்கண பிழை இருந்தது என்றும் கூறியிருந்தார்.

மேலும், வரும் காலத்தில் நிதி அமைச்சர் பட்ஜெட் வாசிக்க நேர்ந்தால், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் மரிய வில்சன், "கொஞ்ச நாள்களாகவே உருவ கேலி செய்வது, சாதி தொடர்பாக, பெண்கள் தொடர்பாக.. என இப்போது மொழி தொடர்பாக வந்துவிட்டார்கள். எனக்கு என்னுடைய கிறிஸ்துவம் ஒன்றைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அன்பு, அமைதி, இரக்கத்தின் மொழி. இது தமிழ் படித்தவர்களுக்குக் கூடத் தெரியாது. 60 -75 நாள்களாக துறைரீதியாக கூட்டங்கள் வைத்தார்கள். அதில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். 15, 000 கோடி ரூபாய் கரூவூலத்திற்கு வந்திருக்கிறது.

Advertisement

Advertisement

அதைப்பற்றி எல்லாம் பேசாமல், 'நீங்கள் இப்படி பேசுங்கள்' என்று அறிவுரை கூற வேண்டாம். என்னுடைய தனித்துவம் இது. எனக்கு இப்படித்தான் பேச தெரியும். ஏற்றுக்கொண்டால் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்காக என்னை மாற்றிக்கொள்ள முடியாது. நான் அப்படிதான் பேசுவேன். என்னுடைய ஸ்டைல் இதுதான். கேலி பண்றீங்களா?” என்று கேட்டார்.

இதனால், சட்டப்பேரவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், அமைச்சர் மரிய வில்சன் பேசியதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில், “எம் தமிழ் மொழியின் ஆளுமையுடன், ஒரு மதத்தை ஒப்பிட்டு பேசுவது சரிதானா அமைச்சர் மரிய வில்சன் அவர்களே? இன்றைய சட்டமன்றத்தில் உங்கள் மொழியாற்றல் மீதான விவாதத்தின் போது, “எனது மதம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது” என்பதோடு நீங்கள் நிறுத்தியிருந்தால் அது உங்களின் தனிப்பட்ட அனுபவம். ஆனால், “எனது மதம் எனக்கு கற்று கொடுத்ததை, எத்தனை தமிழ் படித்தாலும் தெரிந்து கொள்ள முடியாது” என்று நீங்கள் கூறுவது, தமிழின் மீதான தாக்குதலாகத் தான் தெரிகிறது.

“அன்பு” என்ற வார்த்தைக்கு பல மதங்கள் கற்பித்த பல அர்த்தங்களை, "அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்” என்ற ஒற்றை வரியில் தூக்கி சாப்பிட்ட மொழி தான் நம் தாய் மொழி தமிழ். “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலாரின் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை விட, இரக்கத்தைப் பற்றி இவ்வுலகில் வேறு யாரால் நுட்பமாக எடுத்துரைக்க முடியும்? “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற புறநானூற்றுப் பாடலை நீங்கள் சரியாக படித்து புரிந்திருந்தாலே, “அமைதி” என்ற வார்த்தைக்கு தமிழ் மொழியில் உள்ள ஆழமான அர்த்தம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

பிறப்பால் நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால், உணர்வால் நாம் அனைவரும் தமிழர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய சட்ட மன்றத்தில் கூட உங்கள் கட்சி தலைமையும் அதைத் தானே சுட்டிக்காட்டினார்? அப்படியிருக்கையில் உங்கள் மதத்தை நீங்கள் உயர்த்திப் பிடிப்பதில் தவறில்லை. ஆனால், தமிழ் மொழியை நீங்கள் தாழ்த்துவதை ஒரு போதும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, இன்று உணர்ச்சி மிகுதியில் தமிழ் மொழி மீது வைத்த தவறான விமர்சனத்திற்கு நீங்கள் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

summary

Nainar Nagendran has condemned the remarks made by Minister Maria Wilson regarding the Tamil language in the Legislative Assembly.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments