FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்

தமிழ் மொழி உச்சரிப்பு குறித்து பேசியது சர்ச்சையான நிலையில் அமைச்சர் மரிய வில்சன் பேரவையில் விளக்கம்...

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 12:26 pm IST
நிதியமைச்சர் மரிய வில்சன் - TN
பகிர்:

மொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது என்றும் நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான் என்றும் நிதியமைச்சர் மரிய வில்சன் பேரவையில் தெரிவித்தார்.

நிதியமைச்சர் மரிய வில்சன் தமிழைப் பிழையின்றி படிக்க வேண்டும் என்று மதிமுக எம்எல்ஏ ராஜேந்திரன் கூறியதற்கு மரிய வில்சன் ஆவேசமாகப் பதிலளித்தது சர்ச்சையானது.

இந்நிலையில் அதுபற்றி இன்று பேரவையில் பேசிய மரிய வில்சன், "நிதிநிலை அறிக்கை என்பது ஒரு பெரிய திட்டம். முதல்வர் எனக்கு அந்த பொறுப்பைக் கொடுத்தார்.

Advertisement

Advertisement

முந்தைய நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனையும் என்னையும் ஒப்பிட்டுப் பேசினார்கள்.

மொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது. அதை நான் மறுக்கவில்லை. நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான். என்னுடைய தாய் மொழி தமிழ்தான். ஆனால் நான் வளர்ந்தது திருவாரூர், பிறந்தது பாண்டிச்சேரி, படித்தது சென்னை. என்னை தத்தெடுத்தது ஆர்கே நகர். இந்த இடங்களை நான் சுற்றி சுற்றி வந்திருக்கிறேன். நான் ஓரிடத்தில் இல்லை.

இங்கு நிறைய படித்தவர்கள் இருக்கிறார்கள். இங்கு 234 பேர் இருக்கிறார்கள். மூத்த உறுப்பினர்கள் அனைவரும் பேசியதை நான் கவனிக்கிறேன். அது எல்லாமே எங்களுக்கு தகவல்கள்தான். நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

இது எங்களுக்கு முதல் முறை. நாங்கள் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்கிறோம். உங்களிடமிருந்து கற்றுக்கொள்கிறோம். வரும் நாள்களில் மீண்டும் வலிமையாக வருவோம்" என்று பேசினார்.

மதிமுக எம்எல்ஏ  ராஜேந்திரன் vs அமைச்சர் மரிய வில்சன்

முன்னதாக, கடந்த ஆக. 10 ஆம் தேதி பேரவையில் கடையநல்லூர் மதிமுக எம்எல்ஏ  ராஜேந்திரன் பேசுகையில், "நிதி அமைச்சர் பட்ஜெட்டை வாசிக்கும்போது நான் தமிழ் ஆர்வலர், சொற்பொழிவாளர் என்ற முறையில் அவரது பேச்சை உன்னிப்பாகக் கவனித்தேன். அவரின் ஆங்கில உச்சரிப்பு நேர்த்தியாக இருந்தது. தமிழில் சில சொற்றொடர்களை பேசாமல் விட்டுவிட்டார்கள். சில சொற்றொடரில் இலக்கண பிழை இருந்தது.

நான் குறையாகவோ குற்றச்சாட்டாகவோ இதனை அவையின் முன் வைக்கவில்லை. நிதி அமைச்சர் வரும் காலத்தில் பட்ஜெட் வாசிக்க நேர்ந்தால், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

அதற்கு அமைச்சர் மரிய வில்சன், "கொஞ்ச நாள்களாகவே உருவ கேலி செய்வது, சாதி தொடர்பாக, பெண்கள் தொடர்பாக.. என இப்போது மொழி தொடர்பாக வந்துவிட்டார்கள். எனக்கு என்னுடைய கிறிஸ்துவம் ஒன்றைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அன்பு, அமைதி, இரக்கத்தின் மொழி. இது தமிழ் படித்தவர்களுக்குக் கூடத் தெரியாது.

60 -75 நாள்களாக துறைரீதியாக கூட்டங்கள் வைத்தார்கள். அதில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். 15,000 கோடி ரூபாய் கரூவூலத்திற்கு வந்திருக்கிறது.

அதைப்பற்றி எல்லாம் பேசாமல், 'நீங்கள் இப்படி பேசுங்கள்' என்று அறிவுரை கூற வேண்டாம். என்னுடைய தனித்துவம் இது. எனக்கு இப்படித்தான் பேச தெரியும். ஏற்றுக்கொண்டால் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்காக என்னை மாற்றிக்கொள்ள முடியாது. நான் அப்படிதான் பேசுவேன். என்னுடைய ஸ்டைல் இதுதான். கேலி பண்றீங்களா?' என்று கேட்டார்.

உடனே பேரவைத் தலைவர் "நீங்கள் மக்கள் புரிந்துகொள்ளும் வகையில்தான் பேசினீர்கள். அவர் சொன்னதை நீங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். பெரிய பிரச்னையாக்க வேண்டாம். பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நிதி அமைச்சர் கோவப்படாதீர்கள்" என்றார்.

எனினும் மரிய வில்சன் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அவர் இன்று பேரவையில் இவ்வாறு பேசியுள்ளார்.

summary

Language is a barrier for me, It is true that I was furious that day: Maria Wilson

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments