முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

நிலவை நோக்கி மீண்டும் பயணம்!

ஏப்ரல் 1-இல் தொடங்கும் ஆர்டெமிஸ் 2 விண்வெளி வீரர்கள் நிலவைச் சுற்றி வருதல், ஆர்டெ மிஸ் 3 - நிலவில் மனிதர்களைத் தரையிறக்குதல்; இது 2027-இல் திட்டமிடப்பட்டுள்ளது.

Updated On : 31 மார்ச், 2026 at 12:34 AM
நிலவை நோக்கி மீண்டும் ஒரு பயணம் - AP
பகிர்:

பா. ஸ்ரீகுமார்

பூமியிலிருந்து 3.84 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ளது நிலவு. இந்த நிலவைச் சுற்றிவர அமெரிக்க விண்வெளி வீரர்களைத் தயாராக்கி வருகிறது 'நாசா'. நிலவை ஆய்வுசெய்யும் தனது ஆர்டெமிஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக, புதன்கிழமை (ஏப்.1) (அமெரிக்க நேரம் மாலை 6.24 மணி- இந்திய நேரம் ஏப்ரல் 2, அதிகாலை 3.54 மணி) விண்வெளி வீரர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இந்த விண்கலம் ஏவப்பட உள்ளது.

1972-ஆம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 54 ஆண்டுகளுக்குப் பின்னர் மனிதர்கள் மீண்டும் நிலவின் மேற்பரப்புக்குச் செல்லும் முதல் நிகழ்வாக இது அமையும். நிலவில் மனிதர்களின் நிலையான இருப்பிடத்தை உருவாக்குதல், புதிய தொழில்நுட்பங்களை புகுத்தியுள்ள ஓரியன் விண்கலம் போன்றவற்றை சோதித்தல் உள்ளிட்ட நிலவின் நீண்டகால ஆய்வுகளை நோக்கிய திட்டமாகும்.

ஆர்டெமிஸ் திட்டம் என்பது 'நாசாவின் முக்கிய விண்வெளித் திட்டமாகும். ஆர்டெமிஸ் 1 ஆளில்லா சோதனைப் பயணம் 2022-ஆண்டு நவம்பர் மாதம் வெற்றிகரமாக நடைபெற்றது. ஏப்ரல் 1-இல் தொடங்கும் ஆர்டெமிஸ் 2 விண்வெளி வீரர்கள் நிலவைச் சுற்றி வருதல், ஆர்டெ மிஸ் 3 - நிலவில் மனிதர்களைத் தரையிறக்குதல்; இது 2027-இல் திட்டமிடப்பட்டுள்ளது.

கிரேக்க புராணங்களின்படி, அப்பல்லோவின் இரட்டை சகோதரி மற்றும் நிலவின் கடவுள் ஆர்டெமிஸ் ஆவார். இப்போது, விண்வெளி வீரர்களை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்லும் நாசாவின் முயற்சிக்கும், அங்கு மேற்கொள்ளப்படும் புதிய அறிவியல் ஆய்வுகளுக்கும், தொழில்நுட்பச் சோதனைகளுக்கும் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பனிக்கட்டி வடிவில் நீர் இருக்க வாய்ப்புள்ள நிலவின் தென் துருவத்தை இந்தியாவின் சந்திரயான்-1 விண்கலம் முதல்முறையாகக் கண்டறிந்தது. இப்போது அதே பகுதியில் மனிதர்களை இறக்கி பல ஆய்வுகளைச் செய்ய நாசா திட்டமிட்டுள்ளது.

தென் துருவத்தில் உள்ள ஆழமான பள்ளங்களில் பல கோடி ஆண்டுகளாக சூரிய வெளிச்சமே படாமல் உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நீரை உருக்கி குடிநீராகப் பயன்படுத்தலாம். நீரைப் பிரித்து பிராண வாயு மற்றும் ராக்கெட் எரிபொருளுக்கான ஹைட்ரஜனைத் தயாரிக்கலாம். தென் துருவத்தின் சில உயரமான பகுதிகளில் எப்போதும் சூரிய ஒளி விழும். இது விண்வெளி வீரர்களின் சூரிய ஒளி மின்சாரத் தேவைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நான்கு விண்வெளி வீரர்கள் ஓரியன் விண்கலத்தில் நிலவைச் சுற்றி 10 நாள்கள் பயணிக்க உள்ளனர். இவர்கள் சுமார் 11 லட்சம் கி.மீ. பயணம் செய்வார்கள். மீண்டும் நிலவின் மேற்பரப்புக்குச் செல்வதற்கான அடுத்தடுத்த ஆய்வுகளுக்குத் தேவையான தொழில்நுட்ப அமைப்புகளை இந்தக் குழுவினர் உறுதி செய்வர்.

இந்த வரலாற்றுப் பயணத்தில் நான்கு முக்கிய வீரர்கள் பங்கேற்கின்றனர். அமெரிக்க கடற்படையின் விமானியான கமாண்டர் ரீட் வைஸ்மேன் இந்தப் பயணத்தை வழிநடத்துவார். பைலட்டாக விக்டர் குளோவர் செயல்படுவார். இவர் நிலவுக்குச் செல்லும் பயணத்தில் இடம்பெறும் முதல் கருப்பின விண்வெளி வீரர். இந்தத் திட்டத்தின் நிபுணரான கிறிஸ்டினா ஹம்மாக் கோச் நிலவுக்குச் செல்லும் முதல் பெண் விண்வெளி வீரர் என்ற பெருமையை இதன்மூலம் பெறுவார். திட்டத்தின் மற்றொரு நிபுணரான ஜெர்மி ஹான்சன் கனடா விண்வெளி முகமையின் (சிஎஸ்ஏ) சார்பில் பங்கேற்கிறார். அமெரிக்கர் அல்லாத ஒருவர் நிலவுப் பயணத்தில் இணைவது இதுவே முதல்முறை.

ஆர்டெமிஸ் 2 திட்டத்தில் நிலவைச் சுற்றி வரப்போகும் முதல் பெண்மணியான கிறிஸ்டினா கோச், விண்வெளியில் மிக நீண்ட காலம் (328 நாள்கள்) தங்கியிருந்த பெண் என்ற உலக சாதனையை ஏற்கெனவே படைத்துள்ளார்.

விண்கலத்தின் வேகத்தைக் குறைக்க வரிசையாகப் பல பாராசூட்டுகள் விரியும். இது விண்கலத்தின் வேகத்தை மணிக்கு 40,000 கி.மீ.லிருந்து வெறும் 30 கி.மீ.-ஆகக் குறைக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆர்டெமிஸ் 2

விண்கலம் கலிஃபோர்னியா கடற்கரைக்கு அருகே பசிபிக் பெருங்கடலில் வந்து விழும். அமெரிக்கக் கடற்படை மற்றும் நாசா குழுவினர் கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் தயார்நிலையில் இருப்பார்கள். அவர்கள் விண்கலத்தையும் வீரர்களையும் பாதுகாப்பாக மீட்பார்கள். விண்வெளி வீரர்கள் சுமார் 18 மாதங்களுக்கும் மேலாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விண்கலத்தை இயக்குவது மற்றும் அவசர காலங்களில் (என்ஜின் கோளாறு அல்லது தகவல் தொடர்பு துண்டிப்பு) எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை தத்ரூபமான கணினி உருவகப்படுத்துதல்கள் மூலம் அறிந்து செயல்படுகின்றனர். விண்வெளியில் எடையற்ற தன்மையை உணர, அவர்கள் பிரம்மாண்டமான நீச்சல் குளங்களில் விண்கல மாதிரிகளுடன் பயிற்சி பெறுகின்றனர்.

நீண்டகால விண்வெளிப் பயணம் மனித உடலில் ஏற்படுத்தும் மாற்றங்களைக் கண்காணிக்க பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர். இதில் ஐரோப்பா, ஜப்பான் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் விண்வெளி ஆய்வாளர்களும் இணைந்து செயல்படுகின்றனர்.

எஸ்எல்எஸ் ராக்கெட் உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட் ஆகும். ஓரியன் விண்கலத்தை பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து வெளியேற்ற இது பயன்படுத்தப்படுகிறது. ஆர்டெமிஸ் திட்டத்தின் முதுகெலும்பாக விளங்குவது இந்த எஸ்எல்எஸ் ராக்கெட் ஆகும். இது சுமார் 322 அடி உயரம் கொண்டது (சுமார் ஒரு 30 மாடி கட்டடம்போல). இது விண்ணில் கிளம்பும்போது சுமார் 88 லட்சம் பவுண்டு உந்துவிசையை உருவாக்கும். இது புகழ்பெற்ற சாட்டர்ன் வி ராக்கெட்டைவிட 15 சதவீத அதிக வலிமை கொண்டது. இது ஓரியன் விண்கலத்தை மணிக்கு 39,400 கி.மீ. வேகத்தில் நிலவை நோக்கித் தள்ளும் திறன் கொண்டது.

வீரர்கள் தங்குவதற்கும் பயணிப்பதற்கும் வடிவமைக்கப்பட்ட நவீன விண்கலம் ஓரியன் விண்கலமாகும். தற்போது, விண்கலத்தை ஏவுவதற்கான இறுதிக்கட்ட சோதனைகள் நடைபெற்று வருகின்றன. பூமிக்குத் திரும்பும்போது இந்த விண்கலம் மணிக்கு சுமார் 25,000 மைல் (40,000 கி.மீ) வேகத்தில் பயணிக்கும். சுமார் 10 நான்கள் பயணத்துக்குப் பிறகு ஓரியன் விண்கலம் பூமிக்குத் திரும்பும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.