முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

வளர வேண்டும் இணைய ஒழுக்கம்!

இன்றைய இணைய உலகில் உண்மை பேசுவது மட்டும் போதாது; உண்மையைச் சரிபார்த்து பகிர்வதும் ஒழுக்கம்.

Updated On : 6 மே 2026, 2:26 am IST
- பிரதிப் படம்
பகிர்:

ஒருகாலத்தில் நிலம் மனித வாழ்வின் மையமாக இருந்தது; பிறகு தொழில் வந்தது. அதன் பிறகு, உலகத்தை அறிவியல் மாற்றியது. இன்று இணையம் மனித வாழ்வின் வடிவத்தையே மாற்றிக் கொண்டிருக்கிறது.

இன்றைய மனிதன் விழித்தவுடன் கைப்பேசியைப் பார்க்கிறான்; இணையத்தின் வழியாக பல்வேறு செயல்பாடுகள் நிகழ்கின்றன. இணையம் இன்று ஒரு கருவி அல்ல; வாழ்வின் ஒரு பரப்பு. இந்தப் பரப்பில் மனிதன் எப்படி நடக்க வேண்டும் என்ற கேள்விதான் புதிய சமூக ஒழுக்கத்தின் மையக் கேள்வி.

முன்பு ஒழுக்கம் என்றால் குடும்பத்தில் மூத்தவர்களை மதித்தல், சமூகத்தில் பொறுப்புடன் நடப்பது, உண்மை பேசுதல், பிறருக்கு தீங்கு செய்யாமை போன்றவை. அவை இன்றும் பொருந்துகின்றன. ஆனால், இன்று அதே ஒழுக்கம் இணையத்துக்கும் வந்துவிட்டது. நாம் எழுதும் ஒரு கருத்து மற்றவரைக் காயப்படுத்தலாம். நாம் பகிரும் ஒரு பொய்த் தகவல் 1,000 நபர்களைத் தவறாக வழிநடத்தலாம்.

Advertisement

சுதந்திரம் என்பதைக் கட்டுப்பாடின்றி பேசுவதாய் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், சமூக ஒழுக்கம் சொல்வது, சுதந்திரத்துடன் பொறுப்பும் சேர வேண்டும் என்பதே. இந்த உண்மை இணையத்தில் இன்னும் முக்கியம். காரணம், நேரில் பேசப்படும் சொல் சிலருக்கே சென்று சேரலாம்; ஆனால், இணையத்தில் ஒரு சொல் உலகம் முழுவதும் பரவலாம். அதனால், பேசும் உரிமைக்கு இணையாக பொறுப்புடன் பேசும் கடமையும் வருகிறது. இது புதிய இணைய ஒழுக்கத்தின் முதல் பாடம்.

ஒருவர் சமூக ஊடகத்தில் ஒரு பொய்யான மருத்துவ ஆலோசனையைப் பகிர்கிறார். அதைப் பலரும் நம்புகிறார்கள். சிலர் உண்மையான சிகிச்சையைத் தவிர்க்கிறார்கள். இது வெறும் தகவல் பகிர்வு அல்ல; ஒழுக்கப் பொறுப்பின்மை. அதேபோல தேர்தல் நேரத்தில் போலிச் செய்தி பரவினால் அது ஜனநாயகத்தைப் பாதிக்கிறது. இங்கே தகவல் ஒழுக்கம் அரசியல் ஒழுக்கமாக மாறுகிறது.

இன்றைய இணைய உலகில் உண்மை பேசுவது மட்டும் போதாது; உண்மையைச் சரிபார்த்து பகிர்வதும் ஒழுக்கம். முன்பு "பொய் சொல்லாதே' என்பது ஒழுக்கப் பாடம். இன்று "சரிபார்க்காமல் பகிராதே' என்பதும் அதே அளவுக்கு முக்கியமான ஒழுக்கப் பாடம்.

இன்னொரு முக்கியப் பகுதி தனியுரிமை. முன்பு மனிதனின் தனியுரிமை வீட்டின் சுவர்களால் பாதுகாக்கப்பட்டது. இன்று கைப்பேசிக்குள் மனித வாழ்க்கையின் பெரும்பகுதி இருக்கிறது. குடும்ப உரையாடல்கள், புகைப்படங்கள், வங்கி விவரங்கள், மருத்துவத் தகவல்கள், தனிப்பட்ட சிந்தனைகள் - இவை அனைத்தும் எண்ம வடிவில் இருக்கின்றன. இதனால், தனியுரிமை என்பது இப்போது மனித மரியாதையின் ஒரு பகுதியாகிவிட்டது.

பலர் இலவசமாக செயலிகளைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், பல நேரங்களில் அவர்கள் பணம் செலுத்தவில்லை என்றாலும், தங்களது தரவை வழங்குகிறார்கள். அவர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்த நிலையைப் பல சிந்தனையாளர்கள் கண்காணிப்பு முதலாளித்துவம் என்று கூறுகின்றனர். அதாவது, மனித நடத்தை வணிகப் பொருளாக மாறுகிறது.

தொழில்நுட்பம் மனிதனுக்குச் சேவையாற்றுகிறதா அல்லது மனிதனைப் பயன்படுத்துகிறதா? இந்தக் கேள்வியே நவீன ஒழுக்கத்தின் இதயம்.

இன்று மனித முடிவுகளை மனிதர்கள் மட்டும் எடுக்கவில்லை. கணித அமைப்புகளும் முடிவு செய்கின்றன. வேலைவாய்ப்பு விண்ணப்பங்களைத் தேர்வு செய்யும் மென்பொருள், வங்கிக் கடன் மதிப்பீடு அமைப்புகள், சமூக ஊடகங்களில் எதை யார் பார்க்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் கணிமுறைகள் (அல்காரிதங்கள்) - இவை அனைத்தும் நம் வாழ்வில் மறைமுக ஆட்சிச் சக்திகளாக செயல்படுகின்றன. இங்குதான் கணிமுறை ஒழுக்கம் முக்கியமாகிறது.

நீங்கள் இணையத்தில் தேடிய ஒரு பொருளை மீண்டும் மீண்டும் விளம்பரமாகப் பார்க்கிறீர்கள். ஏன்? கணிமுறை (அல்காரிதம்) உங்களைப் புரிந்துகொண்டு உங்களிடம் தாக்கம் செலுத்த முயல்கிறது. இதனால், இன்று ஒழுக்கம் மனிதர்களுக்கு மட்டும் அல்ல; தொழில்நுட்பத்திலும் பேசப்படுகிறது.

இணைய உலகம் வளர்ந்த நாடுகளில் ஒரு விதமாகவும் வளர்ந்து வரும் நாடுகளில் வேறுவிதமாகவும் ஒழுக்கக் கேள்விகளை உருவாக்குகிறது. வளர்ந்த நாடுகளில் பெரும்பாலும் தனியுரிமை, தரவு உரிமை, செயற்கை நுண்ணறிவு பொறுப்பு போன்ற கேள்விகள் முக்கியம். ஐரோப்பாவில் மக்கள் தங்கள் தரவு உரிமையைப் பற்றி தீவிரமாக சிந்திக்கிறார்கள். அமெரிக்காவில் சமூக ஊடக நிறுவனங்களின் அதிகாரம் குறித்துக் கேள்விகள் எழுகின்றன.

ஆனால், வளர்ந்து வரும் நாடுகளில் இணைய ஒழுக்கம் வேறு பரிமாணம் பெறுகிறது. இங்கே இணைய அணுகல் சமமில்லை; தகவல் அறிவு சமமில்லை. பலர் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள்; ஆனால், அதன் ஆபத்துகளை அறியாமல் இருக்கலாம். இதனால், இணைய ஒழுக்கம் இங்கே கல்வி, சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றுடன் கலக்கிறது.

புதிய சமூக ஒழுக்கம் சொல்வது மிக எளிமையான ஒன்று: திரைக்குப் பின்னாலும் மனிதர் இருக்கிறார் என்பதை மறந்துவிடக் கூடாது. இது சாதாரண வாக்கியம்போலத் தோன்றினாலும் இணைய நாகரிகத்தின் அடிப்படை.

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் இந்த விவாதம் இன்னும் ஆழமாகிறது. இன்று செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) எழுதுகிறது, மொழிபெயர்க்கிறது, ஆலோசனை தருகிறது. நாளை அது முடிவெடுப்பிலும் பங்கு பெறலாம். அப்போது கேள்வி வரும்: மனிதத் தீர்ப்பு எங்கே? இயந்திரத் தீர்ப்பு எங்கே? இதற்கான ஒழுக்கம் இன்றே தேவை.

இதில் கல்வியின் பங்கு மிகப் பெரியது. பள்ளிகளில் இணையத்தைப் பயன்படுத்த கற்பிப்பது மட்டும் போதாது; இணையத்தில் எப்படி பொறுப்புடன் வாழ வேண்டும் என்பதையும் கற்பிக்க வேண்டும். உண்மை சரிபார்ப்பு, தரவுப் பாதுகாப்பு, இணைய மரியாதை, தொழில்நுட்ப விழிப்புணர்வு இவை எதிர்காலக் கல்வியின் அங்கமாக வேண்டும். புதிய சமூக ஒழுக்கம் பெரிய கோட்பாடுகள் மட்டும் அல்ல; அன்றாட நடைமுறைகள்.

சரிபார்க்காமல் பகிராதிருத்தல்; பிறரின் அனுமதி இல்லாமல் தகவல் பகிராதிருத்தல்; வெறுப்பைத் தூண்டாதிருத்தல்; தொழில்நுட்பத்தைக் கருவியாகப் பயன்படுத்துதல்; அதற்குள் அடிமையாவதைத் தவிர்த்தல்} இவை சாதாரண பழக்கங்கள் அல்ல; எதிர்கால நாகரிகத்தின் ஒழுக்க அடித்தளங்கள்.

இணைய உலகில் உருவாகும் புதிய சமூக ஒழுக்கம் குறித்துப் பேசும்போது சமூக ஊடகங்களின் தாக்கத்தைப் பிரித்துப் பார்க்க முடியாது. இன்று பலருக்கு உலகைப் புரிந்துகொள்வதற்கான ஜன்னல் செய்தித்தாளோ, நூலகமோ அல்ல; சமூக ஊடகமே.

இதன் நல்ல பக்கம் என்னவென்றால் குரலற்றவர்களுக்கு குரல் கிடைக்கிறது. ஒரு கிராமத்தில் நடந்த அநீதி இன்று உலகளாவிய விவாதமாக மாற முடிகிறது. இது இணையத்தின் ஜனநாயக ஆற்றல். ஆனால், இதே தளங்கள் வெறுப்பை பரப்பவும் பயன்படுகின்றன.

இன்றைய இளைஞர்கள் இணையத்தில் தங்கள் அடையாளத்தை உருவாக்குகிறார்கள். முன்பு மனிதனை அவன் குடும்பம், ஊர், வேலை, கல்வி ஆகியவை அடையாளப்படுத்தின. இன்று இணையப் பக்கமும் அடையாளமாகிறது. இணையத்தில் நாம் காட்டும் "நான்' உண்மையானதா அல்லது கட்டமைக்கப்பட்டதா?. இதுவும் ஒழுக்கப் பிரச்னை.

கல்வி உலகில் இணையம் பெரிய புரட்சி செய்துள்ளது. கிராமத்து மாணவர் உலகத் தரமான பாடங்களைப் பார்க்க முடிகிறது. ஆனால், அதே நேரத்தில் நகலெடுக்கும் பழக்கம், செயற்கை உதவியை தவறாகப் பயன்படுத்துதல், முயற்சி இல்லாத கற்றல் போன்ற சிக்கல்களும் வந்துள்ளன.

செயற்கை நுண்ணறிவு உதவியால் கட்டுரை எழுத முடிகிறது. சிந்தனை இல்லாமல் முழுவதும் அதன்மீது சார்ந்துவிட்டால் கற்றலின் திறன் குறையும். கருவி உதவியாக இருக்க வேண்டும்; சிந்தனைக்கு மாற்றாக அல்ல; இது எதிர்காலக் கல்வி ஒழுக்கம்.

வளர்ந்த நாடுகளில் இந்த விவாதங்கள் சட்டமாக மாறுகின்றன. செயற்கை நுண்ணறிவு எப்படி பயன்படுத்தப்பட வேண்டும், தரவு யாருடையது, குழந்தைகளின் இணையப் பாதுகாப்பு எப்படி இருக்க வேண்டும் - இவை கொள்கை விவாதங்கள். ஆனால், வளர்ந்து வரும் நாடுகளில் இவை சமூக விழிப்புணர்வு விவாதங்களாக அதிகம் இருக்கின்றன.

இந்தியச் சூழலை எடுத்துக்கொண்டால், இணையம் சமூக மாற்றத்துக்கும் சமூக மோதலுக்கும் இரண்டுக்குமான இடமாக உள்ளது. ஒருபுறம் மாணவர்கள் இலவசமாகக் கற்கிறார்கள். விவசாயிகள் தகவல் பெறுகிறார்கள். சிறு தொழில்கள் வளர்கின்றன. மறுபக்கம் பொய்யான செய்திகள், வெறுப்புச் செய்திகள், மோசடிகள், தரவுத் திருட்டு ஆகியவை அதிகரிக்கின்றன. இதனால் இணைய வளர்ச்சி மட்டுமே போதாது; இணைய நாகரிகமும் தேவை.

ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் கல்வி, மருத்துவ அணுகலுக்கு இணையம் பாலமாகிறது. இது தொழில்நுட்பத்தின் மனிதநேய முகம். அதே நேரத்தில் அணுகல் சமத்துவம் இல்லாவிட்டால் புதிய எண்மமயத்தால் ஏற்றத்தாழ்வும் உருவாகலாம்.

இணைய மோசடிகளும் ஒரு பெரிய சிக்கலாக உள்ளது. இதனால், இணையப் பாதுகாப்பு என்பது தொழில்நுட்பப் பிரச்னை மட்டுமல்ல; நம்பிக்கை ஒழுக்கம் தொடர்பான பிரச்னை.

மனிதனால் உருவாக்கப்பட்ட இணையம் மனிதனை மாற்றுகிறது. மனிதன் தன் உருவாக்கத்தை ஒழுக்கத்தால் வழிநடத்த வேண்டும். இல்லையெனில், உருவாக்கம் உருவாக்கியவனை ஆளத் தொடங்கும்.

வளர்ந்த நாடுகள் சட்டங்களால் இதைக் கட்டுப்படுத்த முயல்கின்றன. வளர்ந்துவரும் நாடுகள் விழிப்புணர்வால் இதைச் சமாளிக்க முயல்கின்றன. உண்மையான தீர்வு ஒழுக்கமே; சட்டம் கட்டுப்படுத்தலாம்; ஆனால், ஒழுக்கம் உள்ளே இருந்து வழிநடத்தும்.

ஒரு சமூகத்தின் உண்மையான வலிமை, அதன் தொழில்நுட்பம் அல்ல; அதன் மனிதநேயம். இணைய உலகில் புதிய சமூக ஒழுக்கம் என்பது மனிதனைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட விதி அல்ல. அது மனிதனை மனிதனாக வைத்திருக்க உருவாக்கப்பட்ட வழிகாட்டி.

தொழில்நுட்பமும் மனிதநேயமும் வளர்ந்தால்தான் இணைய உலகம் உண்மையான நாகரிக உலகமாக மாறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.