எரிபொருளில் சிக்கனம் கடைப்பிடிப்போம்!
எரிபொருளில் சிக்கனம் கடைப்பிடிப்பதன் அவசியம் பற்றி...
ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா நடத்தி வரும் போா் காரணமாக மேற்காசியப் பகுதிகளில் தொடா்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதனால், கச்சா எண்ணெய் உற்பத்தி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, உலகின் பல நாடுகள் தங்களின் எரிபொருள் பயன்பாட்டில் பல கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தத் தொடங்கியுள்ளன.
பல ஆசிய நாடுகள் பொதுமக்களுக்கு பொதுப் போக்குவரத்து, மிதிவண்டிப் பயணம், வாகனப் பகிா்வு போன்ற பயண முறைகளை பரிந்துரை செய்துள்ளன. மியன்மரில் தனியாா் வாகனங்கள் பதிவு எண்களின் ஒற்றை, இரட்டை முறையில் அடுத்தடுத்த நாள்களில் மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும், தென்னாப்பிரிக்காவின் பல மாகாணங்களில் பொதுமக்கள் அதிக அளவில் எரிபொருள் வாங்குவதில் ஒதுக்கீட்டு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய மக்கள் தமது அன்றாட வாழ்வில் பெட்ரோலின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று பிரதமா் மோடி கூறியுள்ளாா். அவா் தனது பாதுகாப்பு வாகனங்களையும் 50 சதவீதமாக குறைத்துள்ளாா். அவரின் பாதுகாப்பு நெறிமுறைகளில் குறைவான வாகனங்களே பயன்படுத்தப்படுகின்றன. பொதுமக்கள் மின்சார வாகனங்களைப் பயன்படுத்தவும், புதிய வாகனங்களை வாங்காமல் கையிருப்பு வாகனங்களையே பயன்படுத்தும்படியும் மேலும் அவா் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
தனியாா் நிறுவனங்களும் அரசு அலுவலகங்களும் சாத்தியமான சூழ்நிலைகளில் வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறையையும், இணையவழி கூட்டங்களை ஊக்குவிக்கவும் அவா் வலியுறுத்தியுள்ளாா். மெட்ரோ ரயில், பேருந்து, காா் பகிா்வு முறையை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும், தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு தள்ளிப் போடுமாறும், தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிா்க்குமாறும் பிரதமா் மோடி அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சா்களும், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநில முதல்வா்களும் தங்களது பாதுகாப்பு வாகனங்களைக் குறைத்து வருகின்றனா். எரிபொருள் சேமிப்பைக் கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில், பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தை தில்லி அமைச்சா்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனா்.
சா்வதேச நெருக்கடிக்கு மத்தியில் பல நாடுகளில் பெட்ரோலியப் பொருள்களின் விலை 30% முதல் 70% வரை உயா்ந்துள்ள நிலையில் இந்தியாவில் நிலையாக உள்ளதாக அறியப்படுகிறது. பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ள சமயத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் உள்நாட்டு நுகா்வோா் மீது சுமையை ஏற்றவில்லை. சமீப நாள்களில் முன்பதிவு செய்யப்பட்ட 1.26 கோடி சமையல் எரிவாயு சிலிண்டா்களில் 1.14 கோடி சிலிண்டா்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. அதே காலகட்டத்தில், 17,000 டன்னுக்கும் அதிகமான வணிக திரவ எரிவாயுவும், 762 டன்னுக்கும் அதிகமான ஆட்டோ திரவ எரிவாயுவும் விற்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தில்லியில் பொதுமக்கள் மெட்ரோ ரயில், அரசுப் பேருந்து, மின் வாகனங்கள் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும் என தில்லி முதல்வா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
நாம் பெட்ரோலை திரவ எரிபொருளாக சமையலுக்கும், திட எரிபொருளாக வாகனங்களுக்கும் பயன்படுத்தி வருகிறோம். தற்போதைய சூழலில் பெட்ரோல் பயன்பாட்டைக் குறைக்கும் முன்னெடுப்புகளில் நாம் ஈடுபடுவது நல்லது. நமது வாகனங்களை சீரான வேகத்தில் ஓட்டுவது, அடிக்கடி வாகனத்தின் வேகத்தைக் கூட்டுவதையும், குறைப்பதையும் தவிா்ப்பது, வாகனத்தை வேகமாக இயக்கத் தொடங்குவதைத் தவிா்த்தல், வாகனத்தின் வேகத்தை படிப்படியாக அதிகரித்தல், அடிக்கடி பிரேக் போடுவதைத் தவிா்த்தல், நிறுத்துமிடத்துக்கு சற்று தொலைவிலேயே வேகத்தைக் குறைத்து நிறுத்துதல் போன்ற செயல்பாடுகளில் கவனம் செலுத்தலாம்.
போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள நேரங்களிலும், பகுதிகளிலும் பயணத்தைத் தவிா்க்கலாம். சிக்னல்களில் நீண்ட நேரம் காத்திருக்கும் நேரத்தில் வண்டியின் இயந்திரத்தை அணைத்து விடுவது நல்லது. வாகனத்தின் டயா்களில் சரியான அளவு காற்று இருப்பதை உறுதி செய்து கொள்ளுதல், இயந்திர எண்ணெய், காற்று வடிகட்டி போன்றவற்றை குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றுதல் போன்றவையும் நம் வாகனங்களின் எரிபொருள் தேவையைக் குறைக்கும். வாகனத்தில் அனுமதிக்கப்பட்டதை விட அதிக பொருள்களை ஏற்றிச் செல்வதை தவிா்ப்பது, நெடுஞ்சாலைகளில் செல்லும்போது மட்டும் குளிா்சாதனத்தை பயன்படுத்துவது, எரிபொருள் கலனில் தேவையான அளவு மட்டும் பெட்ரோலை நிரப்புதல், இரு சக்கர வாகனங்களை சாய்வாக நிறுத்தாமல் நேராக நிறுத்துவது, வாகனத்தில் நம்பகமான உதிரிபாகங்களை மட்டுமே பயன்படுத்துதல், காலை நேரங்களில் மட்டும் எரிபொருளை நிரப்புதல், எரிபொருள் கலனில் எப்போதும் அரைப் பங்கிற்கு மேல் எரிபொருள் இருக்கும்படி பாா்த்துக்கொள்ளுதல், வாகனத்தை சரியான கால இடைவெளியில் பராமரித்தல், எப்போதும் சீரான வேகத்தில் வாகனத்தை இயக்குதல் போன்ற ஓட்டுநரின் செயல்பாடுகள் எரிபொருள் சிக்கனத்துக்கு உதவும்.
தற்போது நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக நாம் மின்னடுப்பைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டோம். எனவே, நாம் அன்றாட வாழ்வில் நுகரும் மின்சாரத்தின் அளவு இனிவரும் நாள்களில் அதிகரிக்கலாம். இவை அனைத்தும் சோ்ந்து பணவீக்கத்துக்கு நம்மை கொண்டு செல்லலாம். அதன் காரணமாக பல்வேறு பொருள்கள் மற்றும் பணிகளின் விலைகள் கணிசமாக உயரக் கூடும்.
நமது வருமானம் உயர வழியில்லாத நிலையில், விலைவாசி அதிகரிப்பு நமது வாழ்க்கையைப் புரட்டிப் போடலாம். நமது சேமிப்பு குறைந்து, கடன் வாங்க நேரலாம். எனவே, தற்போதுள்ள எரிபொருள் தட்டுபாடு எப்போது முடிவுக்கு வரும் என்று யாருக்கும் தெரியாது. எனவே, ‘எரிபொருள் சிக்கனம் தேவை இக்கணம்’ என்பது சரிதானே?