நமது கூட்டணியின் வெற்றிக்கு பாமகதான் காரணம்: அன்புமணி
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து அன்புமணி தெரிவித்ததாவது...
சட்டப்பேரவைத் தேர்தலில் 35-க்கும் மேற்பட்ட இடங்களில் நமது கூட்டணி கட்சி வெற்றி பெற நாம்தான் காரணமாக இருந்திருக்கிறோம் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாட்டு அரசியலின் வழித்திசையை தீர்மானிக்கும் சக்தியாகவும், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் உரிமைக்குரலாகவும் விளங்கும் பாட்டாளி மக்கள் கட்சி வரும் ஜூலை 16 ஆம் நாள் 37 ஆண்டுகளை நிறைவு செய்து 38 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த தருணத்தில் உலகெங்கும் வாழும் பாட்டாளி சொந்தங்களாகிய உங்கள் அனைவருக்கும் நிறுவனர் மருத்துவர் அய்யா சார்பிலும், எனது சார்பிலும் உளமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Advertisement
Advertisement
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின, சிறுபான்மை சமூக மக்களின் முன்னேற்றத்தையும், மது ஒழிப்பையும் நோக்கமாகக் கொண்டு தான் சமூகநீதிக் காவலர் மருத்துவர் அய்யா 1989 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் நாள் கடற்கரை சீரணி அரங்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினார். மருத்துவர் அய்யாவின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான அவர் வகுத்துக் கொடுத்தப் பாதையிலிருந்து கொஞ்சமும் விலகாமல் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
ஓர் அரசியல் இயக்கத்தின் வெற்றி ஆட்சியைப் பிடிப்பது மட்டும்தானா என்றால் இல்லை. அதிகாரத்திற்கு வராமலேயே அரசு இயந்திரத்தையும், அதிகார மையத்தையும் இயங்கச் செய்வதுதான் ஓர் அரசியல் இயக்கத்தின் உண்மையான வெற்றி. அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சி தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. அடித்தட்டு மக்களில் தொடங்கி அரசு ஊழியர்கள் வரை அனைவரும் தங்களின் சிக்கல்களை பாட்டாளி மக்கள் கட்சி பேசினால், அதற்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புவது இதற்கு சான்று ஆகும்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் அங்கம் வகிக்கும் கூட்டணி தான் ஆட்சியைக் கைப்பற்றும் என்று உறுதியாக நம்பினோம். நான் பரப்புரைக்கு சென்ற இடங்களில் எல்லாம் கிடைத்த மக்களின் அமோக ஆதரவு நமது நம்பிக்கையை உறுதி செய்தது. ஆனால், எவருமே எதிர்பாராத அலை வீசியதால் தேர்தல் முடிவுகள் மாறின. ஆனாலும்கூட நாம் மலைபோல வலுவாக உள்ள பகுதிகளில் அந்த அலையால் எதுவும் செய்ய முடியவில்லை. 35-க்கும் மேற்பட்ட இடங்களில் நமது கூட்டணி கட்சி வெற்றி பெற நாம் தான் காரணமாக இருந்திருக்கிறோம். நாம் 4 இடங்களில் தான் வெற்றி பெற்றோம் என்றாலும் இன்றைய சூழலில் நாம் பெற்ற அந்த 4 இடங்கள் 40 இடங்களுக்கு சமமானது” என்று குறிப்பிட்டுள்ளார்.
PMK leader Anbumani has stated that we were the reason our alliance party won in more than 35 constituencies in the Assembly elections.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.