FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

உலகை நிலைக்கச் செய்யும் ஆயுதம் !

பல்லுயிர் பெருக்கம் என்பது வெறும் அதிகரிக்கப்படும் உயிரிகளின் எண்ணிக்கை மட்டுமல்ல, அது உலகை நிலைக்கச் செய்யும் ஆயுதம்.

Updated On : 28 மே 2026, 6:36 am IST
பல்லுயிர் பெருக்கம் - IANS
பகிர்:

பல்லுயிர் பெருக்கத்தின் அவசியம் மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் உலக பல்லுயிர் பெருக்க தினம் அண்மையில் (மே 22) கடைப்பிடிக்கப்பட்டது. உலக அளவில் சுமார் 87 லட்சம் உயிரினங்கள் தற்போது புவியில் இருப்பதாக அறிவியல் ஆய்வாளர்களின் ஆய்வுகள் மற்றும் கணக்கீட்டின்படி தெரியவந்துள்ளது. இவற்றில் விலங்கினங்கள் மட்டும் 77 லட்சமாக உள்ளது; தாவரங்கள், சிறு உயிரினங்கள், பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகள் என அனைத்தும் இவற்றில் உள்ளடங்கியுள்ளன.

பல்லுயிர்கள் என்பது புவியின் சுற்றுச்சூழல், இயற்கை வளம், புவியின் சமநிலை, புவி சுகாதாரம் என புவியின் அனைத்துப் பணிகளையும் செய்வதில் ஒன்றுக்கொன்று மிகுந்த தொடர்புடையதாக உள்ளன. பல்லுயிர் பெருக்கத்தின் காரணமாகவே இன்று அனைத்து உயிரினங்களும் தங்கள் பாரம்பரியத் தன்மை மாறாமல் பூமியில் நிலைபெற்றிருக்கும் சூழல் உள்ளது.

உணவுச்சங்கிலி, உணவு வலை போன்ற அனைத்துக் காரணிகளும் பல்லுயிர் சார்ந்த நிகழ்வாகவே உள்ளது. இது பூமியில் உயிரினங்களின் சமநிலை மற்றும் வாழ்வின் தொடர்ச்சியை நீடிக்கும் காரணியாக உள்ளது.

Advertisement

Advertisement

பல்லுயிர் பெருக்கத்துக்கு நாம் இடையூறு ஏற்படுத்தும்போது சில உயிரினங்கள் தங்கள் பாரம்பரிய தன்மைகளை இழந்து அவை முற்றிலும் அழிந்துபோகும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. பல்லுயிர் பெருக்கத்தின் விளைவு என்பது ஒன்றுக்கொன்று தொடர்புடையது. எடுத்துக்காட்டாக, மோரீஷஸ் நாட்டில் காணப்பட்ட "டோடோ' பறவைகளின் முக்கிய உணவு கல்வாரி என்ற மரங்களின் இலைகள் மட்டுமே; இன்று "டோடோ' பறவைகளும் இல்லை; அவை உண்டு வந்த கல்வாரி மரங்களும் இல்லை. காட்டில் மான்கள் மட்டுமே பெருகுவது என்பது தாவர இனத்துக்கு அழிவு. தாவரங்கள் மட்டுமே அதிகரித்தால் அது கரியமில வாயு மற்றும் பிராணவாயு சமநிலையைப் பாதித்து உயிரினங்களுக்கு ஆபத்தாக முடியும். புலிகள், சிங்கங்கள் மட்டுமே பெருகி வருவது என்பது, மற்ற உயிரினங்களுக்கு ஆபத்தாக அமையும்.

இதுபோன்று ஒவ்வொரு உயிரினமும் தங்கள் உணவு மற்றும் பிற தேவைகளில் மற்ற விலங்கினங்களைச் சார்ந்திருப்பதால்தான் உலகின் இயற்கை வளம் இன்றளவும் ஓரளவு பாதுகாக்கப்பட்டு வருகிறது. பல்லுயிர் பெருக்கத்தில் மிக முக்கியமானது, பாக்டீரியாக்கள் வகையைச் சார்ந்த நுண்ணுயிரிகள் ஆகும். இவை மண்ணின் வளத்தைப் பாதுகாப்பதுடன் மண்ணில் கலக்கும் பல்வேறு உயிரினங்களைச் சிதைத்து அவற்றை மண்ணோடு மட்கச்செய்து மண்ணை வளமாக்குகின்றன. இது பல்வேறு தாவரங்களுக்கு ஊட்டச்சத்தாகவும் அமைகிறது.

மண்ணில் பாக்டீரியாக்கள் இல்லாத சூழலில் மண்வளம் பாதித்து சுகாதாரச் சீர்கேடுகள் உருவாகக்கூடும். எனவே, பல்லுயிர் பெருக்கம் என்பது, அவற்றின் எண்ணிக்கையை மட்டும் அதிகரிப்பது இல்லாமல், அதன் சமநிலையை எந்த விதத்திலும் பாதிக்காமல் பராமரிப்பதிலும் நமது கடமை உள்ளது.

பல்லுயிர் பெருக்கத்தில் உலக அளவில் பிரேசில் முதலிடத்தில் உள்ளது.

இந்தியா 8-ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இமயமலை, மேற்குத் தொடர்ச்சி மலை, இந்தோ-பர்மா பகுதி மற்றும் அந்தமான் நிகோபார் தீவிலுள்ள சுண்டாலேண்ட் போன்றவை பல்லுயிர் பெருக்கப் பகுதிகளாக உள்ளன. இதற்கேற்ப பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்தும் நோக்கமாக தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையம் கடந்த 2003}ஆம் ஆண்டு இந்திய அரசால் நிறுவப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் நாட்டின் வளமான உயிரியல் வளங்களைப் பாதுகாப்பது மற்றும் நிலையான பயன்பாட்டை உறுதி செய்வது என்பதாகும்.

தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையமானது பல்லுயிர் பெருக்கத்துக்காக ரூ. 6.2 கோடியை 5 மாநிலங்களுக்கு கடந்த 11.12.2025 அன்று விடுவித்தது. இது 5 மாநிலங்களில் செம்மரங்களைப் பாதுகாப்பதுடன், வனப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்துக்கும் உதவும் வகையில் அமைந்தது குறிப்பிடத்தக்கது. பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்புக்காக கடந்த டிசம்பர் 2025 வரை மொத்தம் ரூ.127 கோடியை தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையம் விடுவித்தது.

இதே போன்று தமிழ்நாட்டிலுள்ள தமிழ்நாடு பல்லுயிர் வாரியம் மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் சுமார் 193.215 ஹெக்டேர் பரப்பளவை பல்லுயிர் மண்டலமாக அறிவித்துள்ளது. இது சுமார் 250 வகையான பறவைகள், எறும்புத்திண்ணி, தேவாங்கு போன்றவற்றின் வாழ்விடமாகத் திகழ்கிறது. மேலும், பாண்டவர் காலத்தில் கட்டப்பட்ட ஆனைகொண்டான் குளம் மற்றும் பல நீருற்றுகள் பாதுக்கப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் காசம்பட்டி வீரக்கோயில், ஈரோடு மாவட்டம் எலத்துர் ஏரி (37.42 ஹெக்டேர்), நாகமலை குன்றுகள் முக்கிய பல்லுயிர் பாரம்பரியத் தலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. நாகமலை குன்றுகளில் சுமார் 32.22 ஹெக்டேர் பரப்பளவில் பல தரப்பட்ட பறவையினங்கள், பூச்சிகள், தேனீக்கள், தட்டான்கள், அரிய வகை தவளைகள் என சுமார் 349 வகையான பல்லுயிர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

பல்லுயிர் பெருக்கத்துக்காக அரசு பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. இதற்கேற்ப பல்லுயிரின் ஒரு பகுதியான பொதுமக்களாகிய நாம் பிற உயிரினங்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும். வன அழிப்பு, நெகிழிப் பயன்பாடு, எரிபொருள், புவி வெப்பமயமாதல் போன்றவற்றைக் குறைக்க வேண்டும். இது போன்ற செயல்கள் மூலமாகவே நாம் பல்லுயிர் பெருக்கத்தைக் காக்க முடியும். பல்லுயிர் பெருக்கம் என்பது வெறும் அதிகரிக்கப்படும் உயிரிகளின் எண்ணிக்கை மட்டுமல்ல, அது உலகை நிலைக்கச் செய்யும் ஆயுதம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments