FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

காவல் சீர்திருத்தம் - காலத்தின் கட்டாயம்!

காவல் துறையின் செயல்திறனை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிற தற்போதைய மாநில அரசு, காவல் துறையில் நிலவிவரும் சீர்கேடுகளைக் களைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

3 நவம்பர் 2026, 1:20 am
தமிழக காவல்துறை - பிரதிப் படம்
பகிர்:

இரவு- பகல் என்று பார்க்காமலும், மழை- வெயில் என ஒதுங்கி நிற்காமலும், பண்டிகைக் காலங்களில் தங்களது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடாமலும் பணியாற்றும் காவல் துறையினர், பெரும்பாலான சமயங்களில் பொதுமக்களின் அதிருப்தியை எதிர்கொள்கிற சூழல் நம் நாட்டில் நிலவி வருகிறது.

இந்திய அரசமைப்பின்படி, மாநிலப் பட்டியலில் காவல் துறை இடம்பெற்றுள்ளதால், அந்தந்த மாநில அரசின் கட்டுப்பாட்டில் காவல் துறை செயல்பட்டு வருகிறது. பணியிட மாற்றம், பதவி உயர்வு உள்ளிட்ட காவல் நிர்வாகத்தை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக 'தேர்தல் அரசியல்' பிடியில் நம் நாடு சிக்கி, தன்னுடைய ஜனநாயகத் தன்மையை மெல்ல மெல்ல இழந்து வருகிறது. ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள், தேர்தல் அரசியலில் தங்களுடைய வெற்றியைத் தக்கவைத்துக் கொள்வதற்கும், எதிர்க்கட்சியினரின் அரசியல் செயல்பாடுகளை முடக்குவதற்கும் காவல் துறையைப் பயன்படுத்துகிற நடைமுறை நம்நாட்டில் ஆழமாக வேரூன்றிவிட்டதைக் காணமுடிகிறது.

Advertisement

Advertisement

நம் நாடு சுதந்திரம் பெற்ற தொடக்கக் காலத்தில், காவல் நிர்வாகத்தில் அரசியல் தலையீட்டுக்கு அப்போது பணியில் இருந்த உயரதிகாரிகள் இடமளிக்கவில்லை. காலப்போக்கில் காவல் நிர்வாகம் விரிவடையத் தொடங்கியது. இந்தச் சூழலில், முக்கியத்துவம் வாய்ந்த உயர் பதவியைக் கைப்பற்றுவதற்காக, காவல் உயரதிகாரிகளில் சிலர் ஆளும் கட்சியின் கடைக்கண் பார்வைக்கு இணங்க செயல்படும் வித்தையைக் கற்றுக் கொண்டனர்.

கடந்த 60 ஆண்டுகளாக தமிழ்நாட்டை இரு திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்துவந்தன. ஒவ்வொரு பொதுத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும், முந்தைய ஆட்சியில் உயர் பதவியிலிருந்த காவல் உயரதிகாரிகள் ஓரம் கட்டப்பட்டு, முக்கியத்துவம் இல்லாத பதவிகளுக்கு மாற்றம் செய்யப்படுகிற நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டது. இதன் விளைவாக, அரசியல் சார்பு நிலைக்கு ஏற்ப, மாநிலத்திலுள்ள பெரும்பாலான காவல் உயரதிகாரிகள் இரு பிரிவுகளாகப் பிளவுபட்டுள்ளதைத் தற்போது காணமுடிகிறது.

இரு திராவிட கட்சிகளுக்கும் மாற்றாக, தற்போது நம் மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் தவெக அரசுக்கு, அரசியல் சார்பு முத்திரை இல்லாத, நேர்மையான காவல் உயரதிகாரிகளைத் தேர்ந்தெடுத்து, காவல் துறையின் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளுக்குப் பணி நியமனம் செய்வதில் சிரமம் இருப்பதைக் காணமுடிகிறது.

சீருடை அணிந்து பணிபுரியும் காவல் துறையினர் ஜாதி, மத வேறுபாடின்றி செயல்பட வேண்டும் என்பது விதி. ஆனால், களப் பணியாற்றும் காவல் துறையினரின் செயல்பாடுகளில் ஜாதிய உணர்வு நம் மாநிலத்தின் சில பகுதிகளில் கடந்த நூற்றாண்டின் இறுதியில் அதிக அளவில் வெளிப்பட்டது. அதுவே மாநிலத்தில் வெடித்த ஜாதிக் கலவரங்களைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்குத் தடையாக இருந்தது. இந்தச் சூழலில், ஒரு சில குறிப்பிட்ட ஜாதிகளைச் சேர்ந்த காவல் துறை அதிகாரிகள் ஒரு சில மாவட்டங்களில் பணியாற்றக் கூடாது என்ற நடைமுறையை 1990-களில் தமிழக அரசு கடைப்பிடிக்கத் தொடங்கியது.

ஆனால், இன்றைய காலகட்டத்தில் காவல் துறையை வழிநடத்தும் உயரதிகாரிகள் இடையேயும் ஜாதிய உணர்வு வெளிப்படுவதை காவல் நிர்வாகத்தில் காண முடிகிறது. இதன் நீட்சியாக, களப் பணியாற்றும் காவல் துறையினர் இடையே வெளிப்படும் ஜாதிய உணர்வு காவல் நிர்வாகத்தைப் பெரிதும் பாதிப்படையச் செய்கிறது. இது குறித்து கள ஆய்வு மேற்கொண்டு, உரிய மேல்நடவடிக்கை எடுப்பது இன்றைய சூழலில் அவசியம்.

சமுதாயத்தில் நிகழும் குற்றங்கள் மீது காலதாமதம் இன்றி வழக்குகள் பதிவு செய்து, முறையாக புலனாய்வு மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கச் செய்வதே சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதற்கும், குற்ற நிகழ்வுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் சிறந்த வழிமுறையாகும்.

தண்டனையில் முடிவடையும் குற்ற வழக்குகளின் எண்ணிக்கையானது, புலனாய்வின் தரத்தை வெளிப்படுத்தும் அளவுகோல் ஆகும். தமிழ்நாடு காவல் துறை புலனாய்வு மேற்கொண்ட குற்ற வழக்குகளில் தண்டனையில் முடிவுடைந்த வழக்குகளின் எண்ணிக்கை குறித்து பார்ப்போம்.

இந்திய தண்டனைச் சட்டத்தின்படி, தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மீதான நீதிமன்ற விசாரணையில், 1992, 2002, 2012 ஆகிய ஆண்டுகளில் முறையே 62.1%, 59.1%, 56.5% வழக்குகள் தண்டனையில் முடிவடைந்துள்ளன என மத்திய உள்துறை அமைச்சகம் மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு 2014-ஆம் ஆண்டில் பதிலளித்துள்ளது.

ஆனால் 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் நீதிமன்ற விசாரணையில் முறையே 17%, 16.0%, 15.5% வழக்குகள் மட்டுமே தண்டனையில் முடிவடைந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக்கூடத்தின் அறிக்கைகள் கூறுகின்றன.

நீதிமன்ற விசாரணையில் தண்டனையில் முடிவடையும் குற்ற வழக்குகளின் சதவீதம் தொடர்ந்து குறைந்து வருவது, குற்றப் புலனாய்வில் தமிழ்நாடு காவல் துறையின் செயல்திறன் தொடர்ந்து குறைந்து வருவதை வெளிப்படுத்துகிறது.

களப் பணியாற்றும் காவல் துறையினரின் திறனை மேம்படுத்துவதற்காக 15 'பணியிடைப் பயிற்சி மையங்கள்' தமிழ்நாட்டில் உள்ளன. மிகச் சொற்ப எண்ணிக்கையிலான பயிற்றுநர்களுடன் இயங்கிவரும் இந்த பயிற்சி மையங்களில் பணிபுரிபவர்களில் பலர், தங்களது பணிக்காலத்தை ஓய்வாகக் கழிப்பதற்காக, விருப்ப மாறுதலின் பேரில், அங்கு பணிபுரிகின்றனர். சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, குற்றப் புலனாய்வு போன்ற காவல் பணிகளில் போதிய அனுபவமும், பயிற்சி அளிப்பதில் ஆர்வமும் உள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து, பணியிடைப் பயிற்சி மையங்களில் பணியமர்த்துவது குறித்து காவல் தலைமையகமும், அரசும் பரிசீலனை செய்ய வேண்டும்.

காவல் துறையில் களப்பணியாற்றும் ஒரு சிலர், குற்றவாளிகளின் நட்பு வட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டு, குற்றங்கள் நடைபெறுவதற்கும், புலனாய்வுக்கு எதிராகவும் செயல்பட்ட சம்பவங்கள் அண்மைக் காலங்களில் நிகழ்ந்துள்ளன.

தமிழ்நாட்டில் 1959-1960-களில் பரபரப்பாகப் பேசப்பட்ட 'கள்ள நூறு ரூபாய் நோட்டு' வழக்கில் சி.பி.சி.ஐ.டி. புலனாய்வு மேற்கொண்டது. இந்த வழக்கில், காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் குற்றவாளிகளுக்கு உறுதுணையாக இருந்தார் என்பது புலனாய்வில் தெரியவந்தது. அந்த காவல் உதவி ஆய்வாளரும் அந்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர், ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையை அவர் அனுபவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்பாக சென்னை மாநகர காவல் நிர்வாகத்துக்குக் கிடைத்த புகார் மீது பல மாதங்களுக்குப் பின்னர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி, குற்றவாளிகளுடன் சமரசம் செய்து கொண்டு, அந்த வழக்கில் 'மேல் நடவடிக்கை கைவிடப்படுகிறது' என்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்கிற அளவுக்கு புலனாய்வின் தரம் தாழ்ந்துள்ளதைக் காணமுடிகிறது.

காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது விரைவாகவும், நேர்மையாகவும் நடத்தப்படும் விசாரணையானது, சமுதாயத்தில் நிகழவிருக்கும் பல குற்றங்களைத் தடுக்கவும், சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கவும் பெரிதும் துணைபுரியும். மனு விசாரணைக்கு முக்கியத்துவம் கொடுத்து, நேர்மையான முறையில் மனு விசாரணை மேற்கொள்ளப்பட்ட மாவட்டங்களில் கொலைகள், கொலை முயற்சிகள், பழி வாங்கும் செயல்பாடுகள் உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் கணிசமாகக் குறைந்ததைக் கடந்த காலத்தில் காண முடிந்தது.

அண்மைக் காலத்தில் காவல் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் மனு விசாரணை மீதான நம்பிக்கை பொதுமக்களிடம் குறைந்து வருகிறது. மனு விசாரணை என்ற பெயரில் ஒரு தரப்பினரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு, கட்டப் பஞ்சாயத்து செய்வதையும் காவல் துறையில் காண முடிகிறது. அதன் காரணமாக, பல லட்சம் மனுக்கள் முதல்வரின் தனிப் பிரிவுக்கு நடவடிக்கை கோரி கொடுக்கப்படுகின்றன. எனவே, காவல் நிலையங்களில் நடைபெறும் மனு விசாரணையை மேம்படுத்துவது குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

நம் நாட்டில் காவல் அமைப்பு ஏற்படுத்தப்பட்ட காலம் முதற்கொண்டு, பணியில் முறைகேடாகச் செயல்படும் காவல் துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளில் தமிழ்நாடு காவல் நிர்வாகத்தில் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை குறித்த புள்ளிவிவரங்கள் குறித்து பார்ப்போம்.

2010, 2011, 2012 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு காவல் நிர்வாகத்தில் காவல் துறையினர் மீது மேற்கொள்ளப்பட்ட துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளின் எண்ணிக்கை முறையே 1,937, 1,683 மற்றும் 2,024 ஆகும். ஆனால், 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் காவல் துறையினர் மீது மேற்கொள்ளப்பட்ட துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளின் எண்ணிக்கை முறையே 78, 92 மற்றும் 60 ஆகும். காவல் பணியில் முறைகேடாகச் செயல்படும் காவல் துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காவல் நிர்வாகம் தயங்குகிறது என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன.

காவல் துறையின் செயல்திறனை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிற தற்போதைய மாநில அரசு, காவல் துறையில் நிலவிவரும் சீர்கேடுகளைக் களைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments