தீர்வு காண வேண்டும்
கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவது பிணையில் வெளிவர முடியாத தண்டனைக்குரிய குற்றம் என்று கூறப்பட்டாலும், அது பின்பற்றப்படுவதில்லை.
கடந்த பத்து ஆண்டுகளில் கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியின்போது பலியானோரின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்கிற அதிர்ச்சித் தகவலை தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணையம் அண்மையில் வெளியிட்டுள்ளது.
கைகளால் மலத்தை அள்ளக் கூடாது எனக்கூறும் மத்திய, மாநில அரசுகள் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகள் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு சுகாதாரக் கேடுகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறதா என்றால் கேள்விக்குறிதான்.
Advertisement
Advertisement
பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில் ஒப்பந்தப் பணியாளர்கள் என்கிற போர்வையில் கையுறைகூட இன்றி சாக்கடை கால்வாய்களுக்குள் இறங்கி மனிதக் கழிவுகள் மட்டுமின்றி, நச்சுத் தன்மைமிக்க மருத்துவமனை கழிவுகளைக்கூட அகற்றி வருகின்றனர்.
மத்திய அரசின் 'தூய்மை பாரத இயக்கம், தூய்மை சேவை இயக்கம்', தமிழக அரசின் 'நம்ம ஊரு சூப்பரு' இயக்கம், 'மீண்டும் மஞ்சப்பை' இயக்கம் எனப் பல தூய்மை இயக்கங்கள் செயல்பாட்டில் உள்ளன. இது தொடர்பாக விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டாலும், தினமும் பல்வேறு இன்னல்களைச் சந்தித்துவரும் தூய்மைப் பணியாளர்கள் குறித்து வெளி உலகுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது யார் என்ற நிலைதான் தொடர்கிறது.
மலக்குழி மரணம் எனும் கொடிய மரணத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை நாட்டிலேயே உத்தர பிரதேசம்தான் முதலிடத்தில் இருந்தது; தற்போது, தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது வருத்தத்துக்குரியது.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்தபோது, விஷ வாயு தாக்கி மூச்சுத் திணறி 100 பேர் பலியாகி உள்ளதாகவும், உத்தர பிரதேசத்தில் 98 பேரும், குஜராத்தில் 86 பேரும் பலியாகியுள்ளதாக தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணையம் தெரிவிக்கிறது.
மனிதக் கழிவுகளை மனிதன் அள்ளுவது தடை செய்யப்பட்டிருப்பதாக மத்திய, மாநில அரசுகள் கூறினாலும், ஆங்காங்கே கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்யும் பணியின் போது விஷ வாயு தாக்கி தொழிலாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன.
சாக்கடைக் கழிவுகளை அகற்றுதல், கழிவுநீர்த் தொட்டிகள் போன்றவற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவோரில் பெரும்பாலானோர் பட்டியல் ஜாதியினர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
மலக்கழிவுகள் அள்ள இயந்திரம் வந்துவிட்டாலும், சிலர் குறைந்த கூலிக்காக தூய்மைப் பணியாளர்களைப் பயன்படுத்தி, குழிக்குள் போதிய பாதுகாப்பு வசதியின்றி இறங்க வைக்கும்போதுதான் இத்தகைய மரணங்கள் நிகழ்கின்றன. இதிலும் துயரம் என்னவென்றால், ஒருவர் முதலில் இறங்கி விஷவாயு தாக்கி தொட்டிக்குள் விழுந்து உயிரிழக்கும்போது, அவரைக் காப்பாற்றுவதாக மற்றவர்களும் முயன்று உயிரிழப்பதுதான்.
உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு சட்டம் நிர்ணயித்திருக்கும் ரூ.10 லட்சம் இழப்பீடு கிடைக்கிறதா என்றால் அதுவும் பலரின் குடும்பத்தினருக்கு கிடைப்பதில்லை என்ற புகாரும் உள்ளது. இது போன்ற சம்பவங்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டாலும், அதில் உண்மையில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
உலகெங்கும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடுகளில்கூட இயந்திரங்களைப் பயன்படுத்தித்தான் கழிவுநீர்த் தொட்டிகள் சுத்தப்படுத்தப்படுகின்றன. கைகளால் கழிவு அகற்றுவோர் பணி நியமித்தல், உலர் கழிப்பறைகள் கட்டுதல் தடைச் சட்டம், 1993 மற்றும் கையால் மனிதக் கழிவு அகற்றுவோரை பணியமர்த்த தடை மற்றும் அவர்களது மறுவாழ்வுச் சட்டம் 2013 என இரு சட்டங்களும் இயற்றப்பட்டிருந்தாலும், அவை ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளை மீட்டெடுப்பதில் செயலற்ற நிலையில்தான் உள்ளன.
ஜாதிய மனநிலை கொண்ட சிலரும் இந்த மரணங்களுக்கு காரணமாகின்றனர் என்பதையும் தெளிவுபடுத்துகிறது தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணையம். இந்தத் தொழிலை மேற்கொள்ளும் நபர்களைக் கண்டறிந்து அவர்களை அரசு மீட்டெடுத்து, அவர்களுக்கு கண்ணியமான மாற்றுத் தொழிலை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். மேலும், அவர்களின் மறுவாழ்வை உறுதி செய்யும் வகையில், அவர்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வி, தொழில் பயிற்சி கிடைத்திடும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவது பிணையில் வெளிவர முடியாத தண்டனைக்குரிய குற்றம் என்று கூறப்பட்டாலும், அது பின்பற்றப்படுவதில்லை.
சட்டத்தை மீறி கழிவுநீர்த் தொட்டிக்குள் தொழிலாளர்களை இறங்க வைப்பவர்களுக்கு முதல் கட்டமாக ரூ.50,000 அபராதமோ அல்லது ஓராண்டு சிறை தண்டனையோ வழங்க வேண்டும். அப்போதுதான், இந்தத் தொழில் சமுதாயத்தின் பிடியில் இருந்து விரட்டியடிக்கப்படும்.
ஒடுக்கப்பட்டோருக்காக கொண்டுவரப்பட்ட சட்டங்களைக் கடுமையாக்கி அமல்படுத்துவதில் காலதாமதம் இருக்கக் கூடாது. மேலும், இதைத் தொடர்ந்து கண்காணிக்க தனியாக குழு அமைக்க வேண்டும்.
இயந்திரங்களைப் பயன்படுத்தி மட்டுமே கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும் என்ற நடைமுறையை முழுமையாகக் கொண்டு வரவேண்டும். இதுபோன்ற முன்னெடுப்புகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்தால் மட்டுமே அவர்களின் வாழ்வில் மலர்ச்சி ஏற்படும். இல்லையெனில், இந்த இழிநிலை தொடந்துகொண்டேதான் இருக்கும்.