தோனி ஒரு சகாப்தம்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி குறித்த நடுப்பக்கக் கட்டுரை.....
விளையாட்டு உலகில் பல சாதனையாளர்கள் உருவாகிறார்கள். ஆனால், சிலர் மட்டுமே தங்களுடைய விளையாட்டுத் திறமையால் மட்டுமல்லாது, தலைமைப் பண்பு, மன உறுதி, எளிமை, தன்னம்பிக்கையால் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் இடம் பிடிக்கிறார்கள். அத்தகைய மகத்தான விளையாட்டு வீரர்களில் ஒருவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி.
சச்சின் டெண்டுல்கர், கபில்தேவ், செüரவ் கங்குலி, விராட் கோலி போன்ற பல ஜாம்பவான்கள் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இருந்தாலும், தோனிக்கென்று தனி அடையாளம் உண்டு. ஆட்டத்தின் கடைசி நிமிஷம் வரை நம்பிக்கை இழக்காமல் எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் அமைதியாகச் செயல்பட்டு வெற்றியைத் தேடித் தரக்கூடியவர் என்பதுதான் அவருடைய தனிச் சிறப்பு. அதனால்தான் கிரிக்கெட் ரசிகர்கள் அவரை "கேப்டன் கூல்' என்று அழைக்கிறார்கள்.
சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாக வேண்டும் என்று தோனி கனவு கண்டார். ஆனால், அதை நனவாக்குவதற்கு அவருக்கு ஏராளமான சவால்கள் இருந்தன. அவர் தனது வாழ்க்கையின் தொடக்கத்தில் ரயில்வே துறையில் பயணச் சீட்டு பரிசோதகராகப் பணியாற்றினார். மேற்குவங்க மாநிலத்தின் காராக்பூர் ரயில் நிலையத்தில் பணிபுரிந்த அனுபவம் அவருடைய வாழ்க்கையில் குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
ஒருபுறம் அரசுப் பணி, மறுபுறம் கிரிக்கெட் கனவு இரண்டையும் சமநிலைப்படுத்திக் கொண்டு தனது இலக்கை நோக்கிப் பயணித்தார். இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ஒன்றுதான்; எந்தப் பின்னணியில் பிறந்தாலும், தெளிவான இலக்கும், விடாமுயற்சியும் இருந்தால் உயர்ந்த இடத்தை அடைய முடியும் என்பதற்கு தோனியும் ஓர் எடுத்துக்காட்டு.
2004-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக தோனி அறிமுகமானார். தொடக்கத்தில் அவர் எதிர்பார்த்த அளவுக்கு ரன்கள் எடுக்கவில்லை. ஆனால், 2005-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 148 ரன்கள் அடித்து அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு, இலங்கை அணிக்கு எதிராக ஜெய்பூரில் நடைபெற்ற போட்டியில் 183 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அந்த இன்னிங்ஸ் தோனியின் அதிரடி பேட்டிங் திறமையை உலககுக்கு வெளிப்படுத்தியது.
அவருடைய பேட்டிங் முறையில் தனித்துவம் இருந்தது. பந்தை அடிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் சரியான நேரத்தில் வலிமையாக அடித்து ரன்களைக் குவிப்பார். குறிப்பாக, "ஹெலிகாப்டர் ஷாட்' என்ற தனித்துவமான அடியின் மூலம் உலகக் கிரிக்கெட் ரசிகர்களை வியக்க வைத்தார்.
2007-ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அதே ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பை போட்டியின் இந்திய அணிக்குத் தலைமை வகித்தார். அப்போது, இந்திய அணியில் பல இளம்வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். அனுபவம் குறைந்த வீரர்களைக் கொண்ட அணியை தனது தலைமைப் பண்பாலும், தன்னம்பிக்கையாலும் வழி நடத்தினார்.
2007-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அது இந்திய கிரிக்கெட் வரலாற்றின் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. தோனியின் தலைமைப் பண்பு அன்றிலிருந்து உலக அளவில் பேசப்பட்டது.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் என்றும் மறக்க முடியாத நாள் 2011-ஏப்ரல் 2. இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், இலங்கையும் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் இலங்கை அணி முதலில் விளையாடி 274 ரன்கள் எடுத்தது. 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. தொடக்கத்தில் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவக் ஆகியோர் ஆட்டம் இழந்ததால் இந்திய ரசிகர்கள் கவலை அடைந்தனர்.
அந்தச் சூழலில் கேப்டன் தோனி ஒரு முக்கியமான முடிவை எடுத்தார். நல்ல ஆட்டத்தில் இருந்த யுவராஜ் சிங்குக்கு முன்னதாக தானே களம் இறங்கினார். அவர் கெüதம் கம்பீருடன் இணைந்து பொறுப்புடன் விளையாடினார். தோனி 91 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இறுதியில் நுவான் குலசேகரா வீசிய பந்தை சிக்ஸருக்கு அனுப்பி இந்திய அணிக்கு உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்தார். அந்த சிக்ஸர் இந்திய விளையாட்டு வரலாற்றின் அழியாத அடையாளமாக மாறியது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா மீண்டும் உலகக் கோப்பையை வென்றது. அந்த வெற்றி வெறும் கிரிக்கெட் வெற்றி அல்ல. ஒட்டுமொத்த இந்திய மக்களையும் ஒரே மகிழ்ச்சியில் இணைத்த தேசியக் கொண்டாட்டமாக அமைந்தது.
2013-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலும் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை இந்தியா வீழ்த்தியது. இதன்மூலம் உலகக் கிரிக்கெட் வரலாற்றின் மூன்று முக்கியமான ஐசிசி கோப்பைகளையும் வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றார்.
2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒரு நாள் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி இந்த மூன்று வெற்றிகளும் தோனியின் தலைமைப் பண்புக்கு மிகப் பெரிய சான்றுகளாக அமைந்தன. இன்றுவரை இந்தச் சாதனை அவருடைய பெயருடன் தனித்துவமாக இணைந்துள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டியில் தோனியின் பங்களிப்பு மிக முக்கியமானது. 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்றார்.
தமிழக மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்ற அவர், சென்னையின் அடையாளமாகவே மாறினார். சென்னை அணிக்கும், தோனிக்கும் இடையிலான உறவு வெறும் விளையாட்டு உறவல்ல. அது ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் இடையிலான உணர்வுபூர்வமாக மாறியது. சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை 2010, 2011, 2018, 2021, 2023 என ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனாக்கியதில் தோனியின் தலைமைப் பண்பு முக்கியமானது.
குறிப்பாக, 2018-ஆம் ஆண்டு இரண்டாண்டு தடைக்குப் பிறகு, சென்னை அணியில் மீண்டும் களம் இறங்கி கோப்பையை வென்றது ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. ஆகவேதான் சென்னை ரசிகர்கள் அவரை அன்புடன் "தல' என்றே அழைக்கிறார்கள். தோனி களத்தில் இறங்கும்போது எழும் ரசிகர்களின் ஆரவாரம் அவருக்குக் கிடைத்திருக்கும் மக்கள் செல்வாக்கைக் காட்டுகிறது. சென்னை அணியின் வெற்றிகளுக்கு மட்டுமல்ல, இளம் வீரர்களை உருவாக்குவதற்கும் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
தோனியை ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக மட்டும் பார்க்க முடியாது. அவரை ஒரு சிறந்த நிர்வாகியாகவும், தலைவராகவும் பார்க்க வேண்டும். நிதானத்துக்கு எடுத்துக்காட்டு- வெற்றி கிடைக்கும்போது அளவுக்கு அதிகமாக மகிழ்ச்சி அடைவதில்லை. தோல்வி ஏற்படும் போதும் மனம் தளர்வதில்லை. சரியாக முடிவெடுக்கும் திறனுக்கான முன்னுதாரணம். எந்த வீரரை எப்போது பயன்படுத்த வேண்டும்?, எந்தப் பந்து வீச்சாளருக்கு எப்போது வாய்ப்பு வழங்க வேண்டும்? என்பதைச் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்வார்.
அணிக்கு முன்னுரிமை - தனிப்பட்ட சாதனைகளைவிட, அணியின் வெற்றிக்கு முக்கியத்துவம் கொடுப்பார். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு - புதிய வீரர்களை நம்பி அவர்களுக்கு வாய்ப்பளிப்பார். அவர்களுடைய தவறுகளை பொறுமையுடன் அணுகுவார். தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் - தோல்வி ஏற்பட்டால் பொறுப்பை ஏற்றுக் கொள்வார். வெற்றி கிடைத்தால் அணியினருக்கு பெருமை வழங்குவார். ஆகவேதான், அவரை எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது 2008, பத்மஸ்ரீ 2009, பத்மபூஷன் 2018, ஐசிசி கிரிக்கெட் ஹால் ஆப் ஃபேம் என்று ஆகச்சிறந்த விருதுகள் அவரைத் தேடி வந்தன.
90 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்ட அவர் 4,876 ரன்கள் எடுத்திருக்கிறார். 350 ஒருநாள் போட்டிகளில் 10,773 ரன்கள் , 98 டி20 சர்வதேச போட்டிகளில் ,1617 ரன்களை எடுத்திருக்கிறார். மேலும் ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பராக 123 ஸ்டம்பிங் செய்து உலக சாதனை படைத்துள்ளார். ஒருநாள் போட்டியில் விக்கெட் கீப்பராக அதிகபட்சமாக 183 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில்தான் 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தற்போது ஐபிஎல்லில் இருந்து ஓய்வு என்ற கேப்டன் தோனியின் அறிவிப்பு மேலும் ஓர் உணர்ச்சிகரமான சம்பவமாக மாறி விட்டது.
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் ஆலோசனைப் பொறுப்பை ஏற்கும் அவர், எண்ணற்ற வெற்றிகள், சவாலான காலங்களில் அவர் செயல்பட்ட தருணங்கள் நம் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும். இளம் வீரர்களுக்கு வழிகாட்டுகிற "தல' எப்போதும் நமது அடையாளத்தின் ஓர் அங்கமாகவே என்றும் இருப்பார். தோனி ஒரு சகாப்தம்; தோனி ஒரு வரலாறு; தோனி ஒரு பாடம்.
கட்டுரையாளர்:
முன்னாள் அமைச்சர்.