FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

புத்தமும் தோனியும்... வீழா வீரனின் வாழ்க்கைப் பாடம்!

கிரிக்கெட் உலகின் தலைசிறந்த கேப்டன் எம்.எஸ். தோனியிடம் இருந்து கற்ற வாழ்க்கைப் பாடங்கள் குறித்து...

20 வினாடிகள் முன்பு
எம்.எஸ். தோனியின் புகைப்படங்கள் - படங்கள்: எக்ஸ் / சிஎஸ்கே
பகிர்:

கிரிக்கெட் உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராகப் புகழப்படும் மகேந்திர சிங் தோனி 45 வயதில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கிரிக்கெட் போட்டிக்குப் பிறகான எம்.எஸ். தோனியின் பேட்டிகள் (post match presentation) புத்தரின் போதனைகளுடன் பல நேரங்களில் ஒத்துப்போயிருக்கின்றன. வழக்கமான அவரது பேட்டிங், ஸ்டம்ப்பிங் போன்ற எண்களின் சாதனைகளைத் தவிர்த்து ஆளுமைத் திறனும் அவருடைய கருத்துகளும் பெரும்பாலான நேரங்களில் புத்தரைப் பிரதிபலிக்கின்றன.

Advertisement

Advertisement

முதல் ஐபிஎல் போட்டியை மொஹாலியில் ஏப்.19, 2008ல் தொடங்கிய தோனி, கடைசியாக அகமதாபாதில் மே 25, 2025ல் முடித்துள்ளார் (2026 சீசனில் காயம் காரணமாக விளையாடவில்லை). அறிமுக போட்டியில் வெற்றியுடன் தொடங்கி, இறுதிப் போட்டியிலும் வெற்றியுடன் முடித்துள்ளார்.

கேப்டனாக 2023ல் பொறுப்பைத் துறந்தபோது அவர் ஐபிஎல் கோப்பை வென்றிருந்தார். ருதுராஜ் காயம் காரணமாக விலக, தற்காலிக கேப்டனாக 2025ல் பாதியில் பொறுப்பேற்று வெற்றி பெற வைத்தார். தோனி மட்டும் எப்படி தலைசிறந்த கேப்டனாக இருக்கிறார்? அவரது மந்திரம் என்ன?

ட்ரஸ்ட் த பிராசஸ்

விளையாட்டு என்பது உடல் ரீதியான பலத்தை மட்டும் அல்ல மனரீதியான பலத்தையும் கடுமையாக சோதிக்கும். கிரிக்கெட்டில் அழுத்தம் என்பது மிகப் பெரிய காரணியாக இருக்கிறது. தோனியின் தாரக மந்திரம் ’Trust the process - ட்ரஸ்ட் த பிராசஸ்’. அதாவது நாம் கவனம் செலுத்த வேண்டியது செயல்முறையில் மட்டுமே எனக் குறிப்பிடுகிறார். வெற்றி தோல்வி என்பது அதன் பக்கவிளைவுகளே என்கிறார்.

தோனியின் இந்தத் தத்துவம் புத்தரின் முக்கியமான போதனைகளுள் ஒன்றான, ‘இலக்கை அடைவதைவிடப் பயணம் சிறப்பாக அமைவதே மேல்’ என்பதையே பிரதிபலிக்கிறது. 2019 இறுதிப் போட்டியில் வாட்சன் தனது முட்டியில் ரத்தம் வடிந்தாலும் விளையாடிய ஆட்டம் யாராலும் இன்று வரை மறக்க முடியாது. சில வெற்றிகளைவிட இந்த மாதிரியான தோல்விகள் காலத்தால் அழியாதவை.

வாட்சனின் வாழ்க்கை முடிந்ததாகப் பலரும் கூறினார்கள். தோனி தன் மீது வைத்த நம்பிக்கையே இப்படி விளையாட காரணம் என்று வாட்சன் கூறியுனார். அவர்தான் பின்னால் சிஎஸ்கேவுக்கு 2018ல் கோப்பை வென்று கொடுப்பார்.

கடைசியாக சிஎஸ்கே 2023 சீசனில் கோப்பை வென்றது. அம்பத்தி ராயுடு நேர்காணல் ஒன்றில், "இறுதிப் போட்டியில் நாம் வெல்லாவிட்டாலும் பரவாயில்லை, நாம் நேர்மையாக விளையாடி ஃபேர்பிளே விருதை (Fairplay award) வாங்கவேண்டும் என தோனி வீரர்களுக்கு கட்டளை இட்டார். இதனால், நாங்களும் வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தமில்லாமல் விளையாடினோம். கோப்பையும் கிடைத்தது. பின்னர் தோனியிடம் இதுபற்றிக் கேட்கும்போது அவர், "அழுத்தமில்லாமல் விளையாடினால் வெற்றி தானாகக் கிடைக்கும்” எனக் கூறினார்.

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகமுறை (2008, 2010, 2011, 2013, 2014, 2015, 2025) ஃபேர்பிளே விருதை வென்றதும் சிஎஸ்கே அணிதான். ஒழுங்காக இருந்தால் பலவற்றைச் சாதிக்கலாம் என்பதும் இந்த சாதனை மூலம் கற்றுக்கொள்ளலாம்.

திறமையைவிட தன்னம்பிக்கை சிறந்தது

தோனி பலமுறை நேர்காணலில் கூறியிருப்பது, “திறமையான வீரர்களைவிட தன்னம்பிக்கை உள்ள வீரர்களையே நான் தேர்ந்தெடுப்பேன்” எனக் கூறியுள்ளார். அதுபோல அவர் கண்டெடுத்தவர்தான் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா மற்றும் பலர்.

கிரிக்கெட் மட்டுமல்ல எந்தவொரு விளையாட்டிலும் திறமை மட்டும் இருந்தால் போதாது. தைரியமும் தன்னம்பிக்கையும் முக்கியம். அதனால்தான் தோனி தனது அணியில் மிகப் பெரிய நட்சத்திர வீரர்கள் இல்லாமலேயே பல கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.

கடவுள் நம்பிக்கையைவிட நமது வீரர்கள் மீது நம்பிக்கை வைக்கிறோம் என 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் தோனி பேசியிருந்தார். ”நாம் எதை நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்; உனக்கு நீயே ஒளி” போன்ற புத்தரின் போதனைகள் மறைமுகமாக இங்கு செயல்படுகின்றன.

நிகழ்காலத்தில் வாழ்தல்

கடைசி ஐபிஎல் போட்டியில் கேப்டனாக அவரது வெற்றிக்குப் பிறகு, “நான் இப்போதே விளையாடுவேன் என முடிவெடுக்க முடியாது. எனக்கு 4 - 5 மாதங்கள் இருக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள 15 சதவிகித கூடுதல் உழைப்பு தேவைப்படுகிறது. நான் முடித்துவிட்டேன் எனவும் கூறவில்லை; அதேசமயம் நான் திரும்ப வருவேன் எனவும் கூறவில்லை” என்று பேசியிருந்தார்.

புத்தரின் போதனைகளில் முக்கியமான மற்றொன்று, நிகழ்காலத்தில் வாழ்தல் (Being in the Present Moment / Mindfulness - விழிப்புணர்வு) என்பது மன அமைதிக்கும் துன்பங்களிலிருந்து விடுபடுவதற்கும் மிக முக்கியமான ஒரு தத்துவம். எம்.எஸ். தோனி மேலே சொன்னவற்றின் சாராசம்சமும் இதுதான். நிகழ்காலத்தில் இருக்க வேண்டும்.

நாம் எல்லோருமே மன நிம்மதி இல்லாமல் இருக்க காரணம் ஒன்று கடந்த காலத்தில் இருந்த மகிழ்ச்சியில் அல்லது துக்கத்தில் இருப்போம் அல்லது எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் இருப்போம். நம்மிடம் இருப்பது நிகழ்காலம் மட்டுமே. இதைத் தனது பட்டறிவின் மூலம் தோனி பல இடங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

வெற்றியும் தோல்வியும் ஒன்றுதான்

ஒவ்வொரு வெற்றிக்கும் பிறகு பல வீரர்கள் ஆக்ரோஷமாக கொண்டாடுவதைப் பார்க்கலாம். சிலர் ஒரு கேட்ச் மூலம் விக்கெட் எடுத்ததற்கே எதிரணியிடம் சென்று சண்டையிடுவதை எல்லாம் பார்த்திருக்கிறோம்.

தோனி இதுபோல கொண்டாட்டங்களில் ஈடுபடுவதில்லை. மிகவும் அரிதாகவே தனது வெற்றியைக் கொண்டாடுவார். பஞ்சாபுக்கு எதிரான முக்கியமான வெற்றியின்போது ஹெல்மட்டில் குத்துவதுதான் அவரது கடைசி ஆக்ரோஷமான கொண்டாட்டம். அதுவும் அவர் தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும் ஒரு பாராட்டாகவே இருந்தது.

வெற்றிக்குப் பிறகு அமைதியாக கூட்டத்தில் இருந்து விலகி நிற்பார். ஏன் இதில் ஈடுபடுவதில்லை என்று கேட்டதற்கு, “வெற்றி - தோல்வி இரண்டுமே ஒன்றுதான். நாம் செய்ய வேண்டியதை சரியாக செய்தால் அதற்கேற்ப பலன் கிடைக்கும். சோ, ட்ரஸ்ட் த பிராசஸ்” என்பார்.

இரண்டு அம்புகளின் கதையும் - ஒரே தவறுகளும்

புத்தர் தன் சீடர்களிடம், "ஒருவன் மீது அம்பு பாய்ந்தால் வலிக்குமா?" என்று கேட்டார். சீடர்கள் "ஆம்" என்றனர். "அதே இடத்தில் இரண்டாவது அம்பும் பாய்ந்தால் இன்னும் அதிகமாக வலிக்குமா?" என்று கேட்டதற்கும் "ஆம்" என்றனர்.

முதல் அம்பை நம்மால் தடுக்க முடியாது, ஆனால் இரண்டாவது அம்பை நாமே நம் மீது எய்து கொள்ளாமல் தவிர்க்க முடியும். இதேபோல் தோனியும் கூறியுள்ளார்.

”சர்வதேச கிரிக்கெட்டில் நாம் நீண்ட நாள் இருக்க வேண்டும் எனில் ஒரே தவறை மீண்டும் செய்யக் கூடாது. 7-9 மாதங்கள் ஆவது இடைவெளி விட வேண்டும்” என தோனி தனக்கு அறிவுரை கூறியதாக விராட் கோலி நேர்காணல் ஒன்றில் கூறியிருப்பார்.

பொறுமையும் கோபமும்

நாம் புத்தரை நேரடியாகப் பார்க்கவில்லை. ஆனால், தோனியை துல்லியமான கேமராவினால் பார்த்து வந்திருக்கிறோம். அவரும் கோபம் அடைந்து பார்த்திருக்கிறோம். அதேசமயம் அவர் அது பற்றி கூறும்போது, “கோபத்தில் எதுவும் பேசாதீர்கள். எந்த முடிவையும் எடுக்காதீர்கள். கோபத்தில் யாராலுமே சரியான முடிவை எடுக்க முடியாது” என்கிறார். தலைசிறந்த கேப்டனாக இருக்க வேண்டுமானால் சரியான முடிவை எடுக்க வேண்டும்.

டி20 கிரிக்கெட், ஐபிஎல் போன்ற வேகமான போட்டிகளில் மூளை சூடேறினாலும் சரியான முடிவை எடுத்தாக வேண்டும். அதற்குப் பொறுமையாக இருந்தால் மட்டுமே சாத்தியம். எம்.எஸ். தோனி இந்தப் பழக்கத்தை வளர்த்துக்கொண்டாரா அல்லது தன்னியல்பகாவே அவரிடம் இருந்ததா என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்.

மாற்ற முடியாதவை மீதான கவலையின்மை

நாம் பல நேரங்களில் நம்மால் சரிசெய்ய முடியாத பிரச்னைகளைப் பற்றியே சிந்தித்து நேரத்தை வீணாக்குவோம். அதனால் மன நிம்மதி இழந்ததுதான் பரிசாக இருக்கும். தோனி இதுதொடர்பாக, “நாம் எப்போதும் நம்மால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்கள் (uncontrollable) மீது கவலைப்படக் கூடாது. நம்மால் எதைக் கட்டுப்படுத்த முடியுமோ (controlable) அதில்தான் கவனம் செலுத்த வேண்டும்” என்பார்.

விளையாட்டில் எப்போதுமே நிகழ்தகவுகள் அதிகமாக இருக்கும். தோனியின் தலைசிறந்த அதேசமயம் பலராலும் பெரிதாக கண்டுகொள்ளாத மேற்கோள்களில் இதுவே முதலிடத்தில் இருப்பதாகவே சொல்லலாம்.

தனது முதல் காதலி இறந்த பிறகு தோனி அதிலிருந்து மீண்டுவந்தது ஒவ்வொருவருக்குமான ஒரு வாழ்க்கைப் பாடம். ’அன்புக்குரியவர்களின் இறப்பு’ என்ற க்ளிஷேவில் இருந்து மனிதர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதில்தான் அவர்களது மனோதிடம் இருக்கிறது. அதுதான் அவர்களை வாழ்க்கையில் வெற்றி பெற வைக்கிறது. உலகில் தோன்றிய அனைத்தும் மாற்றத்திற்கு உள்பட்டவை, நிரந்தரமற்றவை என்பதே புத்தரின் முக்கிய போதனையாகும்.

கால் விரல்களின் பலம் - தன்னை அறிதல்

சமீபத்தில் ஒரு பேட்டியில் தோனி தனது ஹெலிகாப்டர் ஷாட் எப்படி அடிக்கிறார் என்பதை ராயுடுவிடம் விளக்கியிருப்பார். அதில் அவர் எங்கிருந்து அதற்கான ஆற்றலை எடுக்கிறார் என்பதைப் பற்றி பேசிருப்பார். அதாவது தன் கால் விரல்களில் இருந்து அதற்கான ஆற்றலை எடுப்பதாக தோனி கூறியுள்ளார்.

எம்.எஸ். தோனி ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர், கேப்டன் மட்டுமில்லாமல் பயிற்சியாளராகவும் ஆவதற்கான எல்லா தகுதிகளையும் பெற்றுள்ளார். தோனி கேப்டனாக இல்லாமல் சிஎஸ்கே அணி ஒரு கோப்பையைக்கூட வெல்லாததே அவரது அணித் தேர்வு, வீரர்களை பயன்படுத்தும் விதத்துக்கு சான்றாக அமைகிறது.

எம்.எஸ். தோனி புத்தரின் போதனைகளையோ அல்லது புத்தமும் தம்மமும் நூலைப் படித்தாரோ என்று இதுவரை எங்கும் கூறவில்லை. ஆனால், அவரது செயல்பாடுகளில் புத்தரின் கோட்பாடுகள் இருக்கின்றன.

தன்னைத் தானே உற்றுநோக்குவதுதான் தம்மபதத்தின் சாராம்சம். தோனி கூறிய தத்துவங்கள் எல்லாம் அவர் அனுபவத்தின் வாயிலாக அவர் கற்றறிந்ததாகவே இருக்கின்றன.

தோனி என்ற கிரிக்கெட் வீரரிடம் இருந்து தொழில்நுட்பங்கள் மட்டுமில்லாமல் வாழ்க்கைத் தத்துவங்களும் கற்றுக் கொண்டுள்ளோம். இனிமேல் அவரது வியூகங்கள், நுட்பங்கள் களத்தில் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக ஆலோசகர் என்ற பெயரில் வெளிப்படும் என்பதுதான் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஆறுதலான விஷயம்.

தோனியின் ஓய்வை வருத்தமான செய்தியாகப் பார்க்க வேண்டியதில்லை; அவர் செய்த சாதனைகளையும் கற்றுத் தந்தவற்றையும் போற்றிக் கொண்டாடி, தோனி என்ற மாபெரும் வழிகாட்டியைப் பின்தொடர்வதலுக்கான வாய்ப்பாக மாற்றுவோம்!

summary

Buddham and Dhoni... Life Lesson from an Unvanquished Warrior

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.