சிஎஸ்கேவுக்கு ஆலோசகராகும் தோனி! கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு?
அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுகிறாரா தோனி...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
Advertisement
Advertisement
சென்னை அணிக்காக 5 ஐபிஎல் கோப்பைகளையும், 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும் தோனி பெற்றுக் கொடுத்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து 2023 ஆம் ஆண்டு வெளியேறிய தோனி, இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பொறுப்பை ஒப்படைத்தார்.
கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றாலும், காயம் காரணமாக ஒரு போட்டியில்கூட தோனி விளையாடவில்லை.
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து சமீபத்தில் தோனியிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, உடற்தகுதி தொடர்பான மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு டிசம்பர் இறுதிக்குள் முடிவை அறிவிப்பேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட நாளை (நவ. 17) கடைசி நாள்.
இதனிடையே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை விடுவிக்கவுள்ளதாகவும், அவர் அணியின் ஆலோசகர் பொறுப்பை ஏற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் தோனி ஓய்வுபெறவுள்ளாரா என்ற கேள்விக்கு நாளை (நவ. 17) மாலை விடை கிடைத்துவிடும்.