FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஜெஃப்ரி ஆர்ச்சர்!

ஆங்கிலப் புனைவு இலக்கிய உலகத்தில் வணிக ரீதியாக மாபெரும் வெற்றிகளைக் குவித்த எழுத்தாளர் ஜெஃப்ரி ஆர்ச்சர்.

16 அக்டோபர் 2026, 6:02 am IST
ஜெஃப்ரி ஆர்ச்சர்
பகிர்:

அண்மையில் ஆர்ச்சர் மறைந்தார். ஆங்கிலப் புனைவு இலக்கிய உலகத்தில் வணிக ரீதியாக மாபெரும் வெற்றிகளைக் குவித்த எழுத்தாளர். தீவிர இலக்கியகர்த்தாக்கள் அவரை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. அவரும் அவர்களைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

தன் 86-ஆவது வயதில், அவர் வீட்டில், அமைதியாகக் காலத்தில் கரைந்து போனார். அவர் பாணியில் சொல்வதென்றால், அன்று அவருக்கு மரண தேவதையோடு அப்பாயின்ட்மென்ட்.

அதற்கு அடுத்த நாள்தான் அவரது மாபெரும் படைப்பான "ஆடம் அண்ட் ஈவ்' வெளி வர இருந்தது. "இதுதான் என்னுடைய நிறைவான நாவல்' என்று அவர் சொல்லியிருந்தார்.

Advertisement

Advertisement

ஒரு வெற்றிகரமான வாழ்க்கை எப்படியெல்லாம் இருக்க முடியும் என்பதற்கும், அதே வாழ்வில் சரிவு வந்தால், அதையும் ஒரு வாய்ப்பாக எடுத்து நிமிர முடியும் என்பதற்கும் ஆர்ச்சரின் 86 ஆண்டு வாழ்க்கை ஒரு சாசனம்.

2009-ஆம் ஆண்டு, சென்னையின் புகழ்பெற்ற லேண்ட்மார்க் புத்தகக் கடையில் ஜெஃப்ரி ஆர்ச்சரை நான் சந்தித்தேன். அவர் இந்தியா வந்திருந்தது, "பாத்ஸ் ஆஃப் க்ளோரி' என்ற தனது புத்தகத்தை வெளியிடுவதற்காக. ஆர்ச்சரின் நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்த புனைவுகளில் ஒன்று அது.

பிரிட்டிஷ் மலையேற்ற வீரர் ஜார்ஜ் மாலரி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும்போது, காணாமல் போன மர்மமான உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட அந்த நாவலை அறிமுகப்படுத்துவதற்காக, அவர் இந்தியாவின் ஐந்து அல்லது ஆறு நகரங்களுக்கு பயணம் செய்தார். நான் பணியாற்றிய வங்கியும் அந்த நிகழ்ச்சியின் ஆதரவாளர்களில் ஒன்றாக இருந்தது. அதனால், அங்கு வந்திருந்த பெரும் கூட்டத்துக்கு நடுவிலும் நான் முண்டி அடித்து அவரிடம் எனது புத்தகத்தில் கையொப்பம் வாங்க முடிந்தது. அந்தக் கணத்தில், பள்ளியின் இறுதி ஆண்டுகளிலிருந்தே தனது புத்தகங்களால் என்னைப் பைத்தியமாக்கிய எழுத்தாளரின் அருகில் நின்றிருந்த ஒரு ரசிகையாக, சற்று பதற்றமாகவே இருந்தேன்.

பள்ளிப் பருவத்திலிருந்து கல்லூரி வரை, என் வாழ்க்கையில் ஒரு மாதம்கூட ஆர்ச்சரின் சிறுகதையையோ நாவலையோ படிக்காமல் கடந்திருக்காது. அவரது கதை சொல்லும் பாணியின் உச்சமே அவர் கதைகளில் வைக்கும் எதிர்பாராத திருப்பங்கள் தாம். ஐந்து தசாப்தங்களுக்கும் மேலான எழுத்துப் பயணத்தில், உலகம் முழுவதும் வாசகர்களை உருவாக்கியவர் அவர். அவரது புத்தகங்கள் 114 நாடுகளிலும், 47-க்கும் மேற்பட்ட மொழிகளிலும் வெளியாகியுள்ளன; 300 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியுள்ளன.

"கேன் அண்ட் ஏபெல்' மட்டும் 37 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றிருக்கிறது. இத்தகைய வெற்றியின் உச்சத்தை அவருக்கு முன்னிருந்தவர்களோ, அவருடைய சமகால எழுத்தாளர்களோ, அவருக்குப் பின்னால் வரப்போகிறவர்களோ யாராவது தொட்டிருக்கிறார்களா, தொட முடியுமா என்று நான் வியக்கிறேன்.

அவரது கதைகளில் குறைந்தது பத்துக் கதைகளை உடனடியாக என்னால் நினைவுகூர முடியும்; அவற்றின் இறுதித் திருப்பம் நம்மை நாற்காலியிலிருந்து எழுந்து நின்றுவிடச் செய்யும். "க்ளீன் ஸ்வீப் இக்னேஷியஸ்' அவற்றில் ஒன்று. கதை இதுதான்; நைஜீரியாவின் புதிய நிதியமைச்சராகப் பொறுப்பேற்கும் இக்னேஷியஸ் அகாபி, ஊழலுக்கு எதிராகக் கடுமையான போராட்டத்தைத் தொடங்குகிறார். அவரது தீவிரத்தைக் கண்டு அதிகாரிகள்

நடுநடுங்கிப் போய் அவருக்கு "க்ளீன் ஸ்வீப் இக்னேஷியஸ்' என்று பெயர் வைக்கிறார்கள். நாட்டின் தலைவர் அவருக்கு தூதரக அந்தஸ்தையும், துப்பாக்கியுடன் வெளிநாடு செல்லும் அனுமதியையும் வழங்குகிறார். நைஜீரிய அதிகாரிகள் ஸ்விஸ் வங்கிகளில் ரகசியமாகப் பதுக்கி வைத்திருக்கும் லஞ்சப் பணத்தின் விவரங்களை வெளிக்கொணர வேண்டும் என்பதற்காக இக்னேஷியஸ் ஜெனீவா செல்கிறார். அங்கு இருக்கும் ஸ்விஸ் வங்கிகளில்தானே பல தேசங்களில் திரட்டப்பட்ட லஞ்சப் பணம் பதுங்கியிருக்கிறது!

ஒரு குறிப்பிட்ட வங்கியின் தலைமை அதிகாரியை அவர் சந்திக்கிறார். மிகக் கடுமையாகப் பேசி விவரங்களைக் கேட்கிறார், "எங்கள் நாட்டில் லஞ்சம் வாங்கி இங்கே பணம் போட்டிருப்பவர்களின் பட்டியலைக் கொடுங்கள்' என்கிறார். வங்கியின் ரகசியக் காப்புக் கொள்கையைச் சுட்டிக்காட்டி, எந்தத் தகவலையும் வெளியிட வங்கியாளர் மறுக்கிறார்.

அப்போது ஆக்ரோஷமான இக்னேஷியஸ், துப்பாக்கியை எடுத்துக் காட்டி, ஒத்துழைக்காவிட்டால் சுட்டுவிடுவதாக மிரட்டுகிறார். ஆனால், துப்பாக்கி முனையிலும் வங்கியாளர் தளரவில்லை. "சுட்டாலும் சொல்ல மாட்டேன்' என்கிறார் வங்கியாளர்.

இறுதியில் இக்னேஷியஸ் துப்பாக்கியை கீழே வைக்கிறார். புன்னகையுடன், "இந்த வங்கியின் ரகசியக் காப்பு இவ்வளவு உறுதியானது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்' என்று கூறுகிறார். பின்னர், "நீங்கள் எந்த விவரத்தையும் வெளியிடவில்லை. எனவேதான் - எனக்கு இங்கே ஒரு கணக்கு தொடங்க வேண்டும். ஐந்து மில்லியன் டாலர்களை அதில் போட விரும்புகிறேன்' என்கிறார்! இதுதான் ஜெஃப்ரி ஆர்ச்சர்.

இந்திய ஆங்கில எழுத்தாளர்களில் யாரை அவர் மிகவும் விரும்புகிறார் என்று கேட்டேன். ஒரு விநாடியும் தயங்காமல் ஆர்.கே. நாராயணின் பெயரைச் சொன்னார். இந்திய வாழ்க்கையின் இயல்பையும் மணத்தையும் ஆங்கிலத்தில் இவ்வளவு அழகாகக் கொண்டுவந்த எழுத்தாளர் வேறு யாருமில்லை. அவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும் என்று வருத்தப்பட்டார்.

ஆர்ச்சர் எனக்காக "பாத்ஸ் ஆஃப் க்ளோரி' புத்தகத்தில் கையொப்பமிட்டு அளித்தார். உடனே, அந்தப் புத்தகம் எனக்கு மிகவும் பிடித்ததாகிவிட்டது. "கேன் அண்ட் ஏபெல்', "தி ப்ராடிகல் டாட்டர்' ஆகியவற்றைக்கூட அது பின்னுக்குத் தள்ளிவிட்டது.

ஆர்ச்சரின் கதைகளை சிலர் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர். அண்மையில், நான் கதைகளைச் சொல்லி, காணொலிகளாக வெளியிட்ட போது எத்தனையோ பேர் அவரின் கதைகளின் வித்தியாசமான திருப்புமுனைகளால் அசந்து போனார்கள். ஆர்ச்சருக்கான புதுப் புது ரசிகர்கள் உருவாகி வந்தார்கள். ஆர்ச்சரின் எல்லாக் கதைகளுமே "திக் திக்' கதைகளல்ல.

பெரும்பாலும் பேசாத அப்பாக்களின் அன்பைச் சொல்லும் "அலாகார்ட்', ஒரு பெண் அமெரிக்க அதிபராகும் கனவை விதைத்த "ப்ராக்டிகல் டாட்டர்' - இவையும் இந்தக் கதை அரசனின் கிரீடத்தில் மின்னும் மரகதங்கள் தாம்!

ஆர்ச்சரின் சொந்த வாழ்க்கையும், எந்த நாவலாசிரியராலும் கற்பனை செய்ய முடியாத திருப்பங்கள் நிறைந்தது. புகழின் உச்சியில் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், பிரதமர் மார்கரெட் தாட்சரின் நெருங்கிய ஆதரவாளராகவும் இருந்தார். 2001-இல் நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்திய குற்றத்துக்காக நான்கு ஆண்டுகள் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விடுதலை செய்யப்பட்டாலும், அவரது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. ஆனால், ஆர்ச்சரின் கதை அங்கே முடியவில்லை.

சிறையில் இருந்த ஒவ்வொரு கணத்தையும் அவர் எழுத்தாகவும், பின்னர் பணமாகவும், மீண்டும் புகழாகவும் மாற்றிக்கொண்டார். சிறையில் 1,001 பக்கங்கள் கொண்ட நாட்குறிப்பை எழுதினார். அது பின்னர் "எ பிரிசன் டைரி' என்ற பெயரில், மூன்று தொகுதிகளாக வெளியானது.

விடுதலையான பிறகு "கேட் ஓ' நைன் டேல்ஸ்' என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியானது. அதில் சக கைதிகளிடமிருந்து கேட்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட பன்னிரண்டு கதைகள் இடம்பெற்றிருந்தன; இந்தக் கதைகள் மகத்தான வெற்றி கண்டன!

சிறைவாசம் அவரது இலக்கிய வாழ்க்கைக்கு இரண்டாவது அலை புகழைத் தந்தது. பொது அவமானத்தை பொன் முட்டையிடும் வாத்தாகவும், புனைவு இலக்கியத்தின் சூப்பர் பம்பராகவும் ஆர்ச்சர் மாற்றிக் காட்டினார்.

இதுதான் ஆர்ச்சரின் வாழ்க்கையில் என்னை மிகவும் கவரும் பகுதி. சாம்பலிலிருந்து எழும் ஒரு பறவையைப் போல, அவர் வீழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் எழுந்தார்.

அவரின் பைபிளைத் தழுவிய கதைகள் ரொம்ப பிரபலம். ஒரு கதையில் ஒரு வேலைக்காரர் பாக்தாதில் ஒரு சந்தையில் மரண தேவதையைப் பார்க்கிறார். அவள் அவரைப்பார்த்து புருவத்தை வளைக்கிறாள். வேலைக்காரர் எஜமானரிடம் ஒடி வந்து, " மரண தேவதை என்னைப் பார்த்து புருவத்தை வளைத்தாள். நான் எங்கேயாவது சமராவுக்கு ஓடுகிறேன். ஒரு குதிரை கொடுங்கள்' என்று கேட்டு குதிரையில் தப்பிப் போனார்.

அன்று மாலை முதலாளி மரண தேவதையைப் பார்க்கிறார்.

"ஏன் என் ஆளை பயமுறுத்தினாய்?' என்கிறார்.

"பயமுறுத்தவில்லை, ஆச்சரியப்பட்டு புருவத்தை தூக்கினேன்' என்றாள்.

"என்ன ஆச்சரியம்?'

"உன் ஆளுடன் எனக்கு இன்று இரவு சமாராவில் அப்பாயின்ட்மென்ட் இருக்கிறது . அவன் இங்கே என்ன செய்கிறான் என்று ஆச்சரியப்பட்டேன்' என்கிறாள்!

அவர் மறைந்த அன்று, ஆர்ச்சரோடு அப்பாயின்ட்மென்ட் எடுத்திருந்த மரண தேவதையின் பாதையில் அவர் என்னென்ன திருப்பு முனைகள் வைத்திருந்தாரோ, யாருக்குத் தெரியும்? அவர் அங்கிருந்து கதைகள் எழுதி, அந்த தேவதைகளை ஆச்சரியங்களில் ஆழ்த்துகிறாரோ என்னவோ!

கட்டுரையாளர்:

இலக்கியப் பேச்சாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments