இதுவா காந்தியின் தேசம்?
இந்தியக் குடியாட்சி பற்றிய நடுப்பக்கக் கட்டுரை......
நம்முடைய குடியாட்சி முறை வெள்ளைக்காரன் வழியாக அறியப்பட்டஒன்றுதான்!
1919-இல் அளவான அதிகாரங்களை நமக்கு அளித்து, மக்கள் வாக்கெடுப்பின் மூலம், தேர்வு செய்கிற முறையை நமக்குப் பழக்கப்படுத்தினான்!
அதற்காக 1937-இல் அரசியல் சாசனம் ஒன்றை வகுத்தளித்தான்!
Advertisement
Advertisement
அதன் அடிப்படையில்தான் நாம் விடுதலை பெற்ற இந்தியாவின் அரசமைப்பு சாசனத்தை உருவாக்கிக் கொண்டோம்!
குடியாட்சி முறையை ரோமர்களைப் போல இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னரே நாம் அறிந்திருக்கவில்லை என்றாலும், சோழர்கள் காலத்து குடவோலை முறை கிராமத் தலைவர்களைத் தேர்வு செய்யும் முறையை நமக்குக் கற்பித்திருந்தது!
குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவனோ, அதனோடு தொடர்புடைய ஒருவனோ தேர்தலில் போட்டியிட முடியாது என்பதுதான், நம்முடைய இன்றைய வளர்ச்சியடைந்த குடியாட்சி முறைகூட அறிந்திராத, இன்றுவரை நாம் கடைப்பிடிக்க முடியாத, சோழக் குடியாட்சி முறையின் சிறந்த ஒன்று!
ஒரு கயவனிடம் அதிகாரம் போனால், கயமைதான் கோலோச்சும்! "பாம்பு தின்கிற ஊருக்குப் போனால், நடுத்துண்டம் நமக்கு' என்பது பொதுவிதியாக்கப்படும்!
குடியாட்சியில் மேன்மையானவர்கள் ஆட்சியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவது அரிதினும் அரிது ! சாதி, மதம் என்றெல்லாம் பிளவுபட்டும், அறியாமையிலும், வறுமையிலும் வாழும் மக்கள் எது சிறந்தது? யார் சிறந்தவர்? என்று அறிய வல்லவர்களில்லை!
விதிவிலக்காக நேரு, வல்லபபாய் படேல், இராசாசி, காமராசர் போன்ற அறிவில் முதிர்ந்த, நேர்மையில் சிறந்த, ஒரு கூட்டம் ஒரு தலைமுறைக் காலம் நாடாள முடிந்திருக்கிறது!
அதற்குக் காரணம் மகாத்மாகாந்தி! தியாகத்தையும், நேர்மையையும் பொதுவாழ்வின் இலக்கணங்களாகக் கற்பித்தது மட்டுமின்றி, தானே அவ்வாறு வாழ்ந்தும் காட்டினார்!
காசுமீரிலிருந்து கன்னியாகுமரி வரை ஊருக்குப் பத்துப் பேர் அவ்வாறு உருவானார்கள்! தன்னலமானவர்கள் குடும்பம் நடத்தட்டும்; பொது நல உணர்வுடையவர்கள் பொது வாழ்க்கைக்கு வரட்டும் என்று அப் பெருமகன் சொன்னான்!
வசதி மிக்க வாழ்க்கை; மனைவியால் அடையும் உயிரைத் தளிர்க்கச் செய்யும் இன்பம்; தன்னைச் சாவு தடமின்றி அழித்து விடப் பார்க்கிறது என்று அதை வெல்வதற்குப் பிள்ளைகளைப் பெற்று, அப்பிள்ளைகளின் வழியாகத் தன்னுடைய இருப்பையும், நீட்சியையும் உறுதி செய்து கொள்ளும் இயல்பான வாழ்க்கை முறை; இவ்வளவையும் இழந்து, குடும்பத்தைத் துறந்து அல்லது தவிக்கவிட்டு, சிறைகளை வாழ்விடமாகக் கொள்ளும் ஒரு தன்னலமற்ற சிறு கூட்டத்தை வெற்றிகரமாக உருவாக்கி எம்மான் காந்தி "வெறுங் கையால்' வெள்ளைக்காரனையே விரட்டிவிட்டானே!
அவ்வாறு பயிற்சி பெற்ற ஒரு கூட்டத்தின் கையில் நாட்டின் அதிகாரம் அவர்கள் காலமாகும் காலம்வரை முப்பது ஆண்டுகளுக்கு இருந்ததே!
அத்தகைய பொற்காலத்திற்குப் பிறகு, தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் உருவாக்கிய மனிதர்கள் தலையெடுத்தார்கள்!
கக்கனும், காட்டுப்பட்டி இராமையாவும் இருந்த அதிகார நாற்காலிகளில், குற்ற வழக்குக்கு ஆட்பட்ட ஒரு சிறைக் கைதி, சிறையிலே மந்திரியாகலாம் என்னும் புதிய குடியாட்சி முறை மலர்ந்தது!
ஒரு குடியாட்சி எவ்வளவு கேவலமான எல்லை வரை செல்ல முடியும் என்பதற்கு இது கட்டியங்கூறி நின்றது!
கிரிமினல் குற்றவாளி சிறையில் மந்திரியாவது வரை எல்லாமே சட்டப்படிதான் நடந்திருக்கிறது என்பதால், இதுதான் நாம் போற்றும் சட்டத்தின் ஆட்சி !
சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை! "நோ படி இஸ் அபவ் லா' என்பது நம்முடைய நீதியரசர்கள் அடிக்கடி சொல்லும் முதுமொழி! அது உண்மையா என்பதுதான் கேள்வி!
காவல் துறையினர், நீதிபதிகள் என்று இவர்களெல்லாம் குற்றத்தைச் செய்பவர்களாக இருந்தாலும், பணத்திற்காக அந்தக் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவதில்லை.
அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதியரசர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் எரிந்த நிலையில் எடுக்கப்பட்டது! எரியாத பணத்தின் அளவே திகைக்க வைக்கும் நிலையில் இருந்தும், நாடாளுமன்றம் அவரை இலஞ்சக் குற்றவாளி என்று கூறியும், அவர் இன்று பதவியில் இல்லை என்பதற்கு மேலான எந்தத் தண்டனையும் இல்லை!
எம்ஜிஆர் ஆட்சியின் தொடக்க காலத்தில் காரைக்குடியில் இரவுப் பேருந்தை விட்டுவிட்டு, ஒரு பார்ப்பனப் பெண்ணான, மாத்தூர் கோயில் அர்ச்சகரின் தங்கை, இனி காலையில்தான் போக முடியும் என்னும் நிலையில் பேருந்து நிலையத்திற்குள்ளேயே இருக்கும் காவல் நிலையத்தைத் தஞ்சம் அடைந்தாள்!
துணை ஆய்வாளர் நல்லவர்; காவல் நிலைய வராந்தாவில் படுத்துக் கொள்ளச் சொல்லி விட்டுப் போய்விட்டார்! இரவு இரண்டாம் ஆட்டம் முடிந்து, ஊர் அடங்கிய பிறகு, வன்முறையில் அந்தப் பெண்ணைக் கெடுத்து இரண்டு காவலர்களும் அவளை நாசமாக்கி விட்டனர்!
காலையில் துணை ஆய்வாளரிடம் அந்தப் பெண், தன் உயிரெல்லாம் ஒடுங்கி, நடந்ததைச் சொன்னாள்! இந்த நிலையில் மேலதிகாரிகள் தலையிட்டு காவல் துறையின் மதிப்பு மக்களிடம் குலைந்துவிடும் என்று சொல்ல, அந்த வழக்கு அழுத்தி மூடப்பட்டது.
நாங்கள் வெகுண்டெழுந்தோம் ! "காவல் நிலையமா?, காம நிலையமா?' என்று கண்டனப் பொதுக்கூட்டம் போட்டோம். நான் பேசிக் கொண்டிருந்த போது, காவல் துறை தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தது! பொதுக்கூட்டத்திற்குப் பின் சனதாவின் மாநிலச் செயலாளராக இருந்த நான், மாவட்டத் தலைவர் சே. நா. விசயராகவன், தொண்டர் இராசாமணி மூவரும் மதுரைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தோம்!
இதற்கிடையே அந்தப் பெண் மாத்தூர் கோயில் ஊரணியில் இறந்து கிடந்தாள்!
சனதா கட்சி மைய ஆட்சியில் இருந்தது. அமைச்சர் பா.ரா. சொல்லி, சேம்சு அதைச் சட்டமன்றத்தில் கிளப்பினார்!
எம்ஜிஆர் அந்தப் பெண் மனநிலை சரியல்லாதவள் என்று சொல்லி, காவல் துறையின் வழிகாட்டுதலில் காவல் துறையைக் காத்ததோடு, அந்தப் பெண்ணும் ஊரணியில் விழுந்து இறந்து விட்டதாகக் சொல்ல, அந்த வழக்கும் அத்துடன் மூடப்பட்டது!
"குற்றம்' செய்த காவலர்களை விட்டுவிட்டுத் தட்டிக் கேட்ட எங்களைக் சிறைப்படுத்துகிறீர்கள்! இது என்ன நீதி என்று கொதித்தோம்?
அதிகார நாற்காலியில் இருப்பவர்கள் வதைப்பதை, ஆட்சி முறையாகக் கொள்ளும்போது, அந்த வதையை ஏற்றுக் கொள்ளுங்கள்; பிணையில் வரவேண்டாம் என்னும் மகாத்மா காந்தியின் போதனையின்படி பிணையில் வருவதில்லை என்று முடிவெடுத்தோம்! இப்படி ஆறு மாதம் மதுரை மத்தியச் சிறையில் மூவரும் இருந்தோம். காலம் செல்லச் செல்ல மைய அமைச்சர்கள், தலைவர்கள் என்று மாறிமாறி, எங்களைப் பார்க்க வந்தனர்!
செய்தித்தாள்களில் அவை வெளிவந்ததால், பிணையில் நாங்கள் வர மறுத்ததும், அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் அவள் வாழ்வு சாவில் முடிந்ததும் உயிர்ப்புடன் இருந்தன!
பிறகு எம்ஜிஆரால் விடுவிக்கப்பட்டு ஆறுமாதம் கழித்து வீடு வந்து சேர்ந்தோம்!
குற்றம் செய்த காவலர்கள் வெளியில்; குற்றத்தைத் தட்டிக் கேட்ட நாங்கள் சிறையில்; அந்தப் பெண் புதைகுழியில்!
காவலர்கள் தண்டிக்கப்பட்டால், காவல் துறையின் மீதான அச்சம் போய்விடும் என்பதும், நீதியரசர்கள் தண்டிக்கப்பட்டால் நீதிமன்றங்கள் மதிப்பிழந்து போய்விடும் என்பதும் அறியாமை!
இத்தகைய வாதங்கள் சட்டத்தைக் கையில் வைத்திருப்பவர்கள் சட்டத்தை மீறுவதற்குத் துணை போகின்றன!
முக்கால் நூற்றாண்டில் நம் நாட்டில் விரல் விட்டு எண்ணத்தக்க வெகு சிலர்தான் நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்!
பிகாரின் லல்லுப் பிரசாத் யாதவ், அரியானாவின் செüட்டாலா, தமிழ்நாட்டின் சசிகலா இப்படி எண்ணி விடலாம் !
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், நீதித் துறையினர் என இவர்கள் குற்றம் செய்யாதவர்கள் அல்லர்!
செய்த குற்றம் மூடி மறைக்கப்படாமல், அவை அப்பட்டமாக வெளிப்படுமானால், அந்தத் துறைகள் மக்களிடம் மதிப்பற்று விடும் என்று கவைக்குதவாத வாதத்தை வைத்துத் தங்களைத் தண்டனையிலிருந்து காத்துக் கொள்ளும் முறை தறிகெட்ட முறை! தற்குறிகளின் முறை!
"கண்ணகியின் சிலம்பை என் அதிகாரத்தால் கவர்ந்த நான்தான் திருடன்' என்று சொல்லி, தன் உயிரை மாய்த்துக் கொண்டான் பாண்டியன் நெடுஞ்செழியன்!
அவனுடைய வளைந்த செங்கோலைப் பாண்டியனின் உயிர் நிமிர்த்தி விட்டுச் சென்றது என்கிறான் இளங்கோ!
தன் கணவனைக் கொன்ற பாண்டியனை, அவனுடைய நீதி முறைமையினை எண்ணி, தன் தந்தை என்று போற்றினாள் கண்ணகி!
அறம் தன்னை ஒறுக்கும் என்னும் அச்சம், நம் அரசர்களுக்கு இருந்தது! சட்டம் தன்னை ஒறுக்கும் என்னும் அச்சம், ஆட்சி அமைப்பின் எந்த அதிகாரப் பிரிவுக்கும் இல்லை!
ஒன்றுக்கொன்று காவலாகவும், எதிராகவும் உருவாக்கப்பட்ட ஆளுந்தரப்பு, அதிகார வர்க்கம், நீதி முறைமை, செய்தித் துறை என்னும் நான்கில், நீதித் தரப்பு நீங்கலாக மற்ற மூன்றும் ஒன்றுக்கொன்று கூட்டாக அமைந்துவிட்ட காரணத்தால், நம்முடைய குடியாட்சி நாறுகிறது!
இதுவா மகாத்மா காந்தியின் தேசம்?
கட்டுரையாளர்:
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.