நூற்றாண்டு காணும் பராசரப் பேராற்றல்!
இந்தியாவின் சட்ட வரலாறு, அபூர்வமானதொரு சங்கமத்தைப் பதிவு செய்துகொண்டிருக்கிறது.
இந்தியாவின் சட்ட வரலாறு, அபூர்வமானதொரு சங்கமத்தைப் பதிவு செய்துகொண்டிருக்கிறது. செம்மாந்த பேரறிவு ஒரு புறம், கிஞ்சித்தும் கோடாத தார்மிகம் மறுபுறம் - பிற இடங்களில் எதிரெதிராக நிற்கும் இவையிரண்டும் ஒன்றோடொன்று கலந்து, பின்னிப் பிணைந்து, ஒருசேர நடந்து, நூறாண்டுப் பயணத்தை நிறைவேற்றியிருக்கின்றன.
2026, அக்டோபர் 9-ஆம் தேதியன்று, தம்முடைய நூறாவது ஆண்டில் பெருந்தகை, பன்முகப் பேரறிஞர், சட்ட நிபுணர் கே. பராசரன் அடியெடுத்து வைக்கும்போது, இந்த அபூர்வத்தின் அதிசயம் இதழ் விரிக்கிறது. ஈடு இணையற்ற பன்முக அறிஞரான இவர், விடுதலைக்குப் பிந்தையதான இந்தியாவில், நற்பண்புகளாலான வாழ்க்கை மற்றும் நீங்காத பங்களிப்புகளுக்காகப் போற்றப்படும் சீர்மிக்க ஆளுமைகளின் வரிசையில் சிறப்பிடம் பெறுகிறார்.
அரசமைப்பு நுண்ணறிவு, வழக்குமன்ற வாதத்திறன், கூர்த்த மெய்யறிவு, தொழில்முறை ஒழுக்கம், தன்னிலை எளிமை ஆகியவற்றின் அதிசயக் கலவை இவர். இத்தகைய பண்புகள், தினையளவு குன்றாமல் தொடர்ந்து செழிக்கின்றன என்பது அதிசயத்தின் அதிசயம். விருதுகளும் கெüரவங்களும் இவரைத் தேடி வந்தன; இவருடைய சட்டத் துறைப் பங்களிப்புகளின் ஆழமான வீச்சையும் வருங்காலத் தலைமுறை வழக்குரைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் இவரின் பெருமையையும் அவை உறுதி செய்துள்ளன.
Advertisement
Advertisement
புறந்தள்ளமுடியாத சாதனைகள் செறிந்த பராசரனின் பயணம், மலர்போன்ற புதுமையும் மலர்ச்சியின் பொருத்தமும் ஒருங்கே கொண்டது. பிரிட்டிஷ் ஆட்சியின் இறுதிக் காலங்களில், பரந்து விரிந்திருந்த ஆங்கிலேய சட்டச் சூழல் பின்னணியில், சட்டத் துறைச் சிறப்புகள் மேலோங்கியிருந்த சமூகப் பண்பாட்டுச் சூழலில் பராசரன் பிறந்தார். சூழலால் அன்றி, தம்முடைய தனித் திறன்களால், துறையின் உச்சநிலை உயர்வுகளை இயல்பாகத் தொட்டார்; அபரிமிதமான ஆற்றல், உயர் விழுமியங்கள், ஒழுக்கப் பண்புகள் ஆகியவற்றால் விண்தொட்ட விளக்காக ஒளி வீசுகிறார்; நூறாண்டுக்கொரு முறை மட்டுமே மலர்கிற அதிசய அரவிந்தமாக மணம் தருகிறார்.
பராசரனின் நுண்ணறிவு ஆளுமை, வினோதக் கலவை ஒன்றால் வியத்தகு மேன்மை கொள்கிறது; தனித்தனியாகச் செயல்படும் இரு வேறு உலகங்களின் இணையற்ற கலவை இது; நவீன அரசமைப்புச் சட்டத்தின் மதிநுட்பம், பாரத பண்பாட்டு மரபின் ஆழ்ஞானம்} எளிதில் சேராத இவ்விரண்டு துருவங்களும், இவரிடம் ஒன்றிணைந்து, ஒன்றுக்கொன்று விரவிக் கலந்து, வளமும் நலமும் காண்கிற வினோதத்தின் சிறப்பு.
இன்றைய நூற்றாண்டுத் தருணத்தில், நம்முடைய நினைவுகளைச் சற்றே பின்னோக்கித் திருப்புவோம். மதராஸ் சட்ட ஆளுமைகளில் தனித்துப் பிரகாசித்த கேசவ ஐயங்கார்} கே.பராசரனின் தந்தை - சிறந்த மகனைச்
சமுதாயத்துக்கு அளித்த சிறப்பான தந்தை! புது தில்லியில் செயல்பட்ட அப்போதைய இந்திய ஃபெடரல் நீதிமன்றத்தின் அரங்குகளில், கேசவ ஐயங்காரின் கம்பீரக் குரல், நுண்மாண் நுழைபுலத்துடன் ஒலிக்கும்.
1983-இல் லால் நாராயண் சின்ஹாக்குப் பின்னர், இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாகப் பராசரன் பொறுப்பேற்றபோது, பண்டைய தில்லித் தொடர்பு, தன்னைப் புதுப்பித்துக் கொண்டது. சென்னை மாநகரின் குறிப்பிட்ட சில பகுதிகளுக்குள்ளேயே தம்முடைய வாழ்க்கை நிறைவடைந்து விடும் என்று நம்பிக்கொண்டிருந்த ஒருவருக்கு, இந்த ஊர் மாற்றமானது உச்சத்தை உணர்த்தத் தலைப்பட்டது.
இந்தக் காலகட்டத்தின் சுவாரஸ்ய நிகழ்வுகள் பலவற்றை, நீதிமன்ற வளாகங்கள் இன்னமும் அலசிக் கொண்டிருக்கின்றன. 1980 மற்றும் 1990-களில் முக்கிய வழக்குகள் பலவற்றைப் பராசரன் கையாண்டார்; அபாரமான வாதத் திறமை மட்டுமல்லாமல், செம்மாந்த ஞானமும் சேர்ந்து, சட்ட நுணுக்கங்களுக்கே தனி மெருகைத் தந்தன. நீதிமன்றங்களில் வாதாடுவது மட்டுமே இவருடைய பணியாக இருக்கவில்லை - சட்ட ஆலோசனைகள், தக்க வழிகாட்டுதல்கள் ஆகியவற்றைத் திறம்படத் தந்தார்.
முழுமையான நோக்கும், முறையான துல்லியமும், மறுக்கப்பட முடியாத மகத்துவத்தை இவருடைய வாதங்களுக்கு வழங்கின. 1981-இல் நடைபெற்ற "முதல் நீதிபதிகள் வழக்கு' இவரின் திறமைக்கு வெளிச்சமிட்டது; பொதுமக்களிடையே பேசப்படும் பெயராக இவரின் பெயர் பிரபலம் கண்டது. சட்ட - நீதித் துறைகளில், தம்முடைய கடமைக்கான கர்ம}பூமியில் இவரின் தேர் பயணிக்கப் பயணிக்க, பாரத மாதா என்னும் ஜன்ம பூமிக்குத் தனிப் பெருமிதங்கள் சேர்ந்தன. 1990-களின் பிற்பகுதியிலும், 2000-களின் முற்பகுதியிலும், பெரிதும் நாடப்பெற்ற மூத்த வழக்குரைஞராகத் திகழ்ந்தார்.
2018-இல் "ராம ஜன்மபூமி' வழக்கில் ஆஜராகும் பொறுப்பு இவரிடம் வந்தது. "விதியின் செயல் இது' என்று இவரே இதைப் பற்றிக் குறிப்பிடுவதுண்டு. தம்முடைய தொழில் வாழ்க்கையின் பிற கட்டங்கள் பலவற்றில் வகித்த பொறுப்புகளும், நிலைகளும் இந்தச் சிறப்பு நிலைக்குக் காரணமாயின என்று கூறுவார். நூற்றாண்டுக்கு ஒருமுறை மட்டுமே நிகழக்
கூடிய இப்பேர்ப்பட்ட வழக்கில் ஆஜராகும் தகுதியை அவையெல்லாம் தமக்களித்தன என்றே எண்ணுகிறார். இப்படிப்பட்ட இயல்பான பணிவும் இறைவனின் விருப்பத்துக்குத் தம்மை முழுமையாக ஒப்படைத்துக் கொள்ளும் (பிரபத்தி) மனப்பான்மையும் மக்கள் மத்தியில் இவருக்கொரு தனியாசனம் இட்டுள்ளன; நீங்காப் புகழின் நிலையாசனத்தில் இவருக்கு மகுடம் சூட்டியுள்ளன.
மிகப் பெரிய சட்ட ஆளுமையான பராசரனிடம் காணப்படுகிற அரிய குணங்கள் - மனிதநேயம் மிக்க நட்பு, வியக்கத்தக்க எளிமை! நாட்டின் ஒட்டுமொத்த வழக்குரைஞர் சமுதாயமும் பாசத்தோடும் நேசத்தோடும் "வழக்குரைஞர் குடும்பத்தின் பிதாமகர்' என்று இவரைப் போற்றுவதற்கு இவையே பெரும் காரணங்கள். சட்ட மதி நுட்பமும் பண்பாட்டுச் செறிவும் நிறைந்த இவருடைய பேரறிவு, பலவகைப்பட்ட சூழல்களுக்கும் சிக்கல்களுக்கும் தீர்வு தருகிற ஞானக் களஞ்சியம் எனலாம். இணையச் சொல்லாடல்களில் அடிக்கடி மொழியப்படும் "ஓபன்-ஸோர்ஸ்' தளங்கள்போல், பலருக்கும் உதவக்கூடிய ஓபன்-ஸோர்ஸ் ஞானப் பொக்கிஷம் இது. பராசரன் வழங்குகிற ஆலோசனைகளும் அறவுரைகளும், கட்டணத்தால் கட்டப்பட்டவை அல்ல; கரிசனத்தாலும், களங்கமற்ற நுண்ணறிவாலும், கூர்த்த மெய்ஞானத்தாலும் கட்டுக்கோப்பை உறுதி செய்பவையாகும்.
கால தேச வர்த்தமானங்களுக்கேற்ப, சட்டத்தின் பரிணாமம் செழுமைப்பட்டுக் கொண்டேயிருக்கும். தம்முடைய நூறாவது ஆண்டில் பராசரன் அடியெடுத்து வைக்கும் இம்மகத்தான வேளையில், சட்ட மேதைமையின் நூறாண்டுகால வளர்ச்சியையும் பரிபக்குவத்தையும் மாத்திரம் நாம் கொண்டாடவில்லை; நீதிமன்ற வளாகங்களுக்குப் புத்தொளி தந்த பேரொளிப் பிரகாசத்தை, நீதி-சட்டத் துறைகளைச் செழுமைப்படுத்தியிருக்கும் பாண்டித்யத்தைக் கொண்டாடுகிறோம்.
தொழில்முறை வித்தகமும் தனி நபர் அறமும் பிரிக்கப்படவேண்டியவை அல்ல என்பதையும், இவை ஒன்றுக்கொன்று வலு சேர்க்கமுடியும் என்பதையும் நிரூபித்திருக்கிற நேர்மையைக் கொண்டாடுகிறோம். பாரத நாடு உலகுக்கு வழங்கிய ஒளி விளக்குகளில் ஒருவரான பராசரனின் பங்களிப்புகள், இடையறா முயற்சிகளின் இனிய மலர்ச்சிகளாகும். எதையும் உன்னிப்பாகக் கவனிக்கும் உயர்திறன் கொண்ட பராசரன், தக்க ஒப்பீடுகளையும் ஒப்புமைகளையும் உடனுக்குடன் உரைப்பதில் வல்லவர்; கீழை இலக்கிய எடுத்துக்காட்டுகளைக் கொடுக்கிற அதே வேகத்தில் மேலை இலக்கியச் சான்றுகளையும் விளங்கத் தருபவர்; கிழக்கையும் மேற்கையும் இணைத்துக் காட்டுகிற இவரின் ஒப்பீடுகளும், உபமானங்களும், ஞானம் எது? என்பதற்கான உண்மையான, நேர்மையான ஆன்மிக விளக்கத்தை உணர்த்தும்.
கே. பராசரன், காலத்தால் மாறாத, சீலத்தில் சோராத, வித்தக ஆளுமையின் விந்தைச் சான்றாவார். பாரம்பரியப் பண்பாட்டு வேர்களைத் துண்டித்துக்கொள்ளாமல், நவீன அடையாளத்தைத் தேடும் இளம் இந்தியாவுக்கு, ஒருங்கிணைந்த புத்தாக்கம் தருகிற தர்மசீலர் இவர்-இதுவே பராசரப் பேராற்றல்!
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம்-இளமையோடும் இனிமையோடும் அன்போடும் பண்போடும் அடியோமோடும் உம்மோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.