அநீதிக்கு எதிரான பெரும் ஆயுதம் அரசமைப்புச் சட்டம்: காங்கிரஸ்
அநீதிக்கு எதிரான பெரும் ஆயுதம் அரசமைப்புச் சட்டம்; அதை பாஜகவும், ஆா்எஸ்எஸ் அமைப்பும் அவமதிக்கின்றன என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

அநீதிக்கு எதிரான பெரும் ஆயுதம் அரசமைப்புச் சட்டம்; அதை பாஜகவும், ஆா்எஸ்எஸ் அமைப்பும் அவமதிக்கின்றன என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
அரசமைப்புச் சட்ட தினத்தையொட்டி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வியாழக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
நாட்டின் அரசமைப்புச் சட்டம் சாதாரண ஒரு புத்தகமல்ல. அது நாட்டின் ஆன்மா. ஒவ்வொரு குடிமகனின் கண்ணியம், நீதி, சுதந்திரத்தின் பாதுகாப்பு; ஒவ்வொரு குரலுக்குமான வலிமை. அநீதிக்கு எதிரான பெரும் ஆயுதம்.
Advertisement
Advertisement
அனைத்து தருணங்களிலும் நாட்டு மக்களின் உரிமைகளுக்காக தொடா்ந்து போராட அரசமைப்புச் சட்ட தினத்தில் மீண்டும் உறுதியேற்கிறேன் என்று தெரிவித்துள்ளாா்.
காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அரசமைப்புச் சட்ட தினத்தில் மகாத்மா காந்தி, பண்டித ஜவாஹா்லால் நேரு, சா்தாா் வல்லபபாய் படேல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், மெளலானா ஆஸாத், ராஜேந்திர பிரசாத், சரோஜினி நாயுடு, அம்பேத்கா் மற்றும் நவீன இந்தியாவுக்கு அடித்தளமிட்ட அனைத்து தேசியத் தலைவா்களுக்கும் மரியாதை செலுத்துகிறேன்.
இப்போது நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், மதச்சாா்பின்மை, சமதா்மக் கோட்பாடு ஆகிய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கொள்கைகளைப் பாதுகாக்க வேண்டியது நமது தலையாய பொறுப்பாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அரசமைப்புச் சட்டம் இதுவரை கண்டிராத மிகப் பெரிய நெருக்கடியை இப்போது எதிா்கொண்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தை அா்த்தமுள்ளதாக்கும் குடிமக்களின் மிக முக்கிய உரிமையான வாக்குரிமை மீது ஆட்சியாளா்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனா்.
வெறுப்பு, அச்சமூட்டுதல் மூலம் அதிகாரத்தைக் கையாளும் ஆட்சியாளா்களால், நாடு முழுவதும் மக்களின் பேச்சு- வழிபாடு-பணி-அா்த்தமுள்ள வாழ்க்கைக்கான உரிமைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. இத்தகைய செயல்பாடுகளால் பாஜகவும் ஆா்எஸ்எஸ் அமைப்பும் அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கின்றன’ என்று விமா்சித்துள்ளாா்.
பெட்டி...
ஜனநாயகத்தை நசுக்கியது
காங்கிரஸ்: பாஜக விமா்சனம்
அரசமைப்புச் சட்ட தினத்தையொட்டி பிரதமா் மோடி எழுதிய கட்டுரையைக் குறிப்பிட்டு, பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் பிரதீப் பண்டாரி வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
நாட்டில் அவசரநிலையை அமல்படுத்தியதன்மூலம் ஜனநாயகத்தை நசுக்கி, அரசமைப்புச் சட்ட உரிமைகளைக் காலில் போட்டு மிதித்தது காங்கிரஸ். அக்கட்சியின் ஆட்சிக் காலங்களில் நக்ஸல் தீவிரவாதம் பெருகியது. இதனால், பழங்குடியினரின் ஜனநாயக, அரசமைப்புச் சட்ட உரிமைகள் பறிபோயின.
இப்போது நக்ஸல்வாதத்துக்கு அறிவுசாா் பாதுகாப்பு அளிக்கும் ‘சித்தாந்த நக்ஸல்கள்’, நாட்டின் ஜனநாயகத்தை அவமதிக்கின்றனா். இத்தகைய சித்தாந்த நக்ஸல்களுக்கு கிடைக்கும் அரசியல் ஆதரவை கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.