குறைகள் களையப்பட வேண்டும்!
அண்மைக்காலமாக அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள் குறித்து நாம் கேள்விப்படுகிற செய்திகள், நம்மைக் கவலையில் ஆழ்த்துவதை மறுப்பதற்கில்லை.
அரசு மருத்துவமனைகள் குறித்த புகார்கள் என்பது தமிழக மக்களுக்குப் புதிதான ஒன்றல்ல. ஆயினும், அண்மைக்காலமாக அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள் குறித்து நாம் கேள்விப்படுகிற செய்திகள், நம்மைக் கவலையில் ஆழ்த்துவதை மறுப்பதற்கில்லை.
குறிப்பாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் விஷம் அருந்திய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்குச் செலுத்தப்படவேண்டிய சலைன் எனப்படும் உப்புநீருக்கு பதிலாகக் குழாயிலிருந்து சேகரிக்கப்பட்ட சாதாரண தண்ணீர் செலுத்தப்பட்டதாக வந்த செய்தியை யாராலும் எளிதாகக் கடந்துவிட முடியாது. அந்தத் தண்ணீரும் மருத்துவ ஊழியரல்லாத தாற்காலிக தினக்கூலி ஊழியர் ஒருவரால் அந்த மருத்துவமனையின் கழிப்பறைக் குழாயில் பிடித்துவரப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை.
செவிலியர்களுக்குரிய பணிகளைத் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட இதர ஊழியர்கள் கவனிப்பதாக வரும் செய்திகள் இது முதல்முறையல்ல. கடந்த ஆகஸ்டு மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு அந்த மருத்துவமனையின் தூய்மைப் பணியாளராகிய பெண் ஒருவர் ரத்த அழுத்தம் பரிசோதிப்பது, ஆக்ஸிஜன் குழாய் பொருத்துவது போன்றவற்றைச் செய்திருப்பதாக வெளியான காணொலி பரபரப்பை ஏற்படுத்தியது.
Advertisement
Advertisement
கடந்த ஜூலை மாதம் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட பெண்ணின் கணவரிடம் அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த ஒப்பந்தப் பணியாளர்களாகிய பெண் உதவியாளர்கள் இருவர் லஞ்சம் கேட்ட விவகாரம் பேசுபொருளாகி, விசாரணையின் இறுதியில் அவ்விருவரும் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.
தனியார் மருத்துவமனைகளில் பிரசவத்துக்காக சேர்க்கப்படுபவர்களிடம் அதிகக் கட்டணம் கேட்கப்படுகிறது. இந்நிலையில் போதிய வருமானம் இல்லாத அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்கள் தங்களின் பிரசவத்துக்காக அரசு மருத்துவமனைகளை நாடிவருகின்றனர். அவர்களிடம் லஞ்சம் கேட்பதென்பது எவ்வகையிலும் சகித்துக்கொள்ள முடியாத விஷயம். அதிலும், ஆண் குழந்தைகள் பிறந்தால் இரட்டிப்புத் தொகை லஞ்சமாகக் கேட்கப்படுவதாகவும் அறிகிறோம்.
இது ஒருபுறமிருக்க, சில நாள்களுக்கு முன்பு புதுக்கோட்டை அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண்கள் இருவரில் ஒருவருக்குப் பெண் குழந்தையும், மற்றொருவருக்கு ஆண் குழந்தையும் பிறந்ததாக முதலில் அறிவித்த செவிலியர், பின்னர் அதை மாற்றிக் கூறியதால் இருதரப்பு உறவினர்களும் வாக்குவாதம் செய்தனர். அதன் பிறகு, அந்தக் குழந்தைகள் தத்தமக்குரிய தாயார்வசம் ஒப்படைக்கப்பட்டன.
குழந்தைகளை மாற்றிக் கூறிய இந்த நிகழ்வானது, வேண்டுமென்றே செய்யப்பட்டது என்று கூறுவது சரியாக இருக்காது. ஆயினும், இந்தத் தவறு சம்பந்தப்பட்ட ஊழியரின் கவனக்குறைவால் நிகழ்ந்தது என்று நிச்சயமாகக் கூற முடியும்.
தனியொரு மருத்துவர் ஒரே நாளில் பலநூறு நோயாளிகளைப் பரிசோதிக்க வேண்டியிருப்பது, விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களுக்கு இரவு-பகல் எந்நேரமானாலும் சிகிச்சையளிக்கத் தயாராக இருக்க வேண்டிய பணிச்சூழல் ஆகிய சிரமங்கள் அரசு மருத்துவர்களுக்கு இருக்கவே செய்கின்றன. அதே நேரம் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்தபடியே, தனிப்பட்ட முறையில் கிளினிக் எனப்படும் சிறு மருத்துவமனைகளை அமைத்துக்கொண்டு மருத்துவம் பார்ப்பது என்ற புகார் காலம் காலமாகத் தொடர்கிறது.
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள வரையிலும் தங்களின் அன்றாடப் பணிகளில் எத்தனையோ சிரமங்களைச் சந்திக்கின்றனர் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அரசு மருத்துவமனைகளுக்குள் அத்துமீறிப் புகுந்து தாக்குதல் நடத்துபவர்கள், சிகிச்சை பலனளிக்காமல் இறக்க நேர்கின்ற நோயாளிகளுடைய உறவினர்கள் வெளிப்படுத்தும் ஆக்ரோஷம் போன்றவற்றையும் தங்கள் பணிக்காலத்தில் இவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
கரோனா தீநுண்மிப் பரவல், டெங்கு பரவல் போன்ற காலங்களில் அவர்கள் அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்களின் உயிரையே பணயம் வைத்துப் பல்லாயிரக்கணக்கானவர்களின் உயிரைக் காப்பாற்றினர்.
ஒரு சிலருடைய பேராசையின் வெளிப்பாடாகிய லஞ்சம் உள்ளிட்ட புகார்களுக்கு இடமின்றியும், ஏழை, எளிய மக்களிடம் இன்முகம் காட்டியும் மருத்துவ சேவை புரிய முன்வருவோர் அனைவரையும் தேவதைகளாகக் கருதி மதிப்பளிக்க நாம் தயாராக இருக்கிறோம்.
அதே சமயம், இன்றைய மக்கள்தொகை பெருக்கத்தைக் கணக்கில் கொண்டு போதிய அளவிலான மருத்துவப் பணியார்களை நியமிப்பது, தற்காலிக மருத்துவ ஊழியர்களை நிரந்தரம் செய்வது ஆகியவற்றின் மூலம் நமது அரசு மருத்துவமனைகளின் பணித் திறனை அதிகரிப்பதும் தமிழக அரசின் கடமையாகும்.
'நோய் நாடி நோய் முதல் நாடி' என்ற தெய்வப்புலவர் திருவள்ளுவரின் வாக்குக்கு இணங்க, நமது அரசு மருத்துவமனைகளில் காணப்படும் பிரச்னைகளின் மூல காரணங்களைக் கண்டறிந்து, அவற்றை உடனடியாகக் களைவது மட்டுமே ஏழை நோயாளிகளின் மறுவாழ்வுக்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.