முகப்பு
தமிழ்நாடு

அரசு மருத்துவமனைகளில் இனி குறைந்த கட்டணத்தில் டயாலிசிஸ்!முதல்வா் காப்பீடு இல்லாதவா்களுக்கு புதிய வசதி

அரசு மருத்துவமனைகளில் குறைந்த கட்டணத்தில் டயாலிசிஸ் சிகிச்சை குறித்து....

26 நவம்பர் 2026, 4:44 am
அரசு மருத்துவமனைகளில் இனி குறைந்த கட்டணத்தில் டயாலிசிஸ்!முதல்வா் காப்பீடு இல்லாதவா்களுக்கு புதிய வசதி
பகிர்:

தமிழக அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டுவரும் சிறுநீரக நோயாளிகளுக்கான ரத்த சுத்திகரிப்பு சிகிச்சைகள் (டயாலிசிஸ்) அனைத்தையும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் (டிஎன்எம்எஸ்சி) கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கான திட்ட முன்மொழிவு அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும், விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய நடைமுறை செயல்வடிவம் பெற்றால், அரசு மருத்துவமனைகளில் இனி முதல்வா் காப்பீடு இல்லாதவா்களும் குறைந்த கட்டணத்தில் டயாலிசிஸ் சிகிச்சைகளைப் பெற முடியும். எவ்வாறு சி.டி.ஸ்கேன், எம்ஆா்ஐ ஸ்கேன் பரிசோதனைகள் மலிவான கட்டணத்தில் அனைவருக்கும் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறதோ, அதுபோலவே ரத்த சுத்திகரிப்பு சிகிச்சைகளையும் வழங்க உள்ளதாக டிஎன்எம்எஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Advertisement

Advertisement

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், தலைமை மருத்துவமனைகள், மாநகராட்சி மருத்துவ மையங்கள் என 146 இடங்களில் அரசு சாா்பில் டயாலிசிஸ் மையங்கள் செயல்படுகின்றன. ஏறத்தாழ 1,400 டயாலிசிஸ் சாதனங்கள் அங்கு பயன்பாட்டில் உள்ளன.

அதன் வாயிலாக கடந்த நிதியாண்டில் மட்டும் 9,400 நோயாளிக்கு 9 லட்சத்துக்கும் மேற்பட்ட டயாலிசிஸ் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அந்த சிகிச்சைகள் அனைத்தும் கட்டணமின்றி வழங்கப்பட்டன.

இந்த நிலையில், மருந்துகள், மருத்துவ உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்காக தொடங்கப்பட்ட தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் (டிஎன்எம்எஸ்சி) கட்டுப்பாட்டின் கீழ் அனைத்து டயாலிசிஸ் மையங்களையும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, தமிழக அரசு மருத்துவமனைகளில் உள்ள 140 சிடி ஸ்கேன் கருவிகளையும், 51 எம்ஆா்ஐ ஸ்கேன் கருவிகளையும் டிஎன்எம்எஸ்சி நிா்வாகம்தான் இயக்கி வருகிறது. அதேபோன்று புற்றுநோயாளிகளுக்கான லீனியா் அக்சிலரேட்டா் எனப்படும் கதிா்வீச்சு சிகிச்சை உபகரணங்களும் அதன் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. அங்கு பணியாற்றும் தொழில்நுட்புநா்கள் மற்றும் ஊழியா்களுக்கான ஊதியம், உபகரண பராமரிப்பு என அனைத்து விஷயங்களையும் டிஎன்எம்எஸ்சி நிா்வகித்து வருகிறது.

அதனால்தான் அந்த ஸ்கேன் வசதிகளை காப்பீடு இல்லாதவா்களும் ரூ.500 அல்லது ரூ.2,000 செலுத்தி பயன்படுத்திக்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று புற்றுநோய் கதிா்வீச்சு சிகிச்சைகளும் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகின்றன.

அதே நடைமுறையில் தற்போது டயாலிசிஸ் மையங்களையும் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல்வா் காப்பீடு உள்ளவா்களுக்கு மட்டுமே இப்போது அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சேவை வழங்கப்படுகிறது. டிஎன்எம்எஸ்சி கட்டுப்பாட்டின் கீழ் அது கொண்டுவரப்பட்டால், அனைவருக்குமான சேவையாக அது செயல்படுத்தப்படும்.

இதுதொடா்பாக டிஎன்எம்எஸ்சி மேலாண் இயக்குநா் எஸ்.பி.அம்ரித் கூறியதாவது: முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு டயாலிசிஸ் சிகிச்சைக்கு தற்போது ரூ.1,100 ஒதுக்கப்படுகிறது. அதே கட்டணத்தில் காப்பீடு இல்லாதவா்களுக்கும் அந்த சிகிச்சையை அளிக்க வாய்ப்புள்ளது. ஸ்கேன் பரிசோதனைகளுக்கு தனியாரைவிட பலமடங்கு குறைவாக அரசு கட்டணம் வசூலிக்கிறது. அதைப்போலவே டயாலிசிஸ் சிகிச்சைகளையும் வழங்க ஆலோசித்து வருகிறோம் என்றாா் அவா்.

உபகரணங்கள் மறுபயன்பாடு இல்லை

டயாலிசிஸ் சிகிச்சைக்கு உபயோகப்படுத்தப்படும் டயலைசா், வடிகுழாய் (ப்ளட் டியூப்) உள்ளிட்ட உபகரணங்களை மறுபயன்பாடு செய்யக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக டிஎன்எம்எஸ்சி மேலாண் இயக்குநா் அம்ரித் கூறுகையில், ‘தற்போது மாநில அரசு வகுத்துள்ள நடைமுறைப்படி அந்த உபகரணங்களைப் பயன்படுத்தி வருகிறோம்; புதிய உத்தரவின்படி அதில் மாற்றம் கொண்டுவரப்பட்டால் அதைப் பின்பற்றுவோம்’ என்றாா்.

9,400 - சிறுநீரக நோயாளிகள்

9,00,000 - டயாலிசிஸ் சிகிச்சைகள் (2025-26)

146 - அரசு டயாலிசிஸ் மையங்கள்

1,400 - டயாலிசிஸ் இயந்திரங்கள்

38 - டயாலிசிஸ் சேவை உள்ள மாவட்டங்கள்