முன்னுரிமை பெற வேண்டும் முதியோர் நலன்!
இந்தியாவில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோர்களின் எண்ணிக்கை சுமார் 17.3 கோடியாக உள்ளது.
தற்போது இந்தியாவில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோர்களின் எண்ணிக்கை சுமார் 17.3 கோடியாக உள்ளது. இது நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 10.5% ஆகும். வரும் 2036-ஆம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை 23 கோடியாகவும், 2050-ஆம் ஆண்டிற்குள் 34.7 கோடியாகவும் (மொத்த மக்கள்தொகையில் 21%) உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2046-ஆம் ஆண்டுக்குள், இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த குழந்தைகளின் எண்ணிக்கையைவிட முதியோர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று ஐ.நா. சபையின் மக்கள்தொகை நிதியம் தெரிவிக்கிறது.
சர்வதேச அளவில் 50 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை 2050-இல் 200 கோடியைத் தாண்டிவிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் இருப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
மொத்த மக்கள்தொகையில் 2011-ஆம் ஆண்டு 10.6 சதவீதமாக இருந்த முதியோர்கள் 2031-ஆம் ஆண்டு 18.2 சதவீதமாக உயருவார்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பிற மாநிலங்களைவிட தமிழ்நாடு விரைவாக முதியோர் சமூகமாக மாறி வருகிறது. இந்தத் தகவலை தமிழக நிதி அமைச்சர் அண்மையில் அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், 2100-ஆம் ஆண்டளவில் தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் ஏறத்தாழ பாதி பேர் முதியோர்களாக இருப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
மருத்துவ வளர்ச்சி, ஊட்டச்சத்து மேம்பாடு, சுத்தம், மருத்துவ அறிவியல், சுகாதாரப் பராமரிப்பு, கல்வி போன்றவற்றால் முதியோர்களுடைய வாழ்நாள் உயர்ந்து கொண்டே வருவதாக உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இருப்பினும், முதியவர்களின் உடலில் நோய்த் தடுப்புச் சக்திகுறைந்து விடுவதால் அவர்களுக்கு எலும்பு சார்ந்த சிக்கல்கள், சர்க்கரை நோய், முதுமை மறதி, தூக்கக் கோளாறுகள், உடல் நடுக்கம் போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இவை அவர்களின் மன நலத்தையும் வெகுவாகப் பாதிக்கின்றன. இதனால், அவர்கள் பிறரைச் சார்ந்திருக்கும் நிலை, சமூகத்திலிருந்து விலகி வாழ்தல், குடும்ப உறுப்பினர்களால் புறக்கணிக்கப்படுதல் போன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன.
முதியோர்கள் தங்களின் ஆரோக்கியத் தேவைகளைப் புரிந்துக் கொண்டு நோய்த் தடுப்புக்கான பரிசோதனைகளைச் செய்து வர வேண்டும்.
அன்றாட உணவில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் புரதம், உயிர்ச்சத்து, தாதுச்சத்து, நார்ச்சத்து நிறைந்த சமச்சீர் உணவு ஆகியவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்வது அவசியம்.
மிதமான உடற்பயிற்சி, நடை, யோகா, தியானம் போன்றவை உடல் வலிமை, சமநிலை, நெகிழ்வுத்தன்மை போன்றவற்றை பேண அவர்களுக்கு உதவும். மேலும், அவர்கள் புகை, மது, புகையிலைப் பொருள்கள் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. உடலுக்குப் போதுமான உறக்கம் கொடுப்பது அவசியம். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பது, அவர்களின் மன நலனை நன்கு பாதுகாக்கும். மருத்துவர் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கு கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக மார்ச் 2020 முதல் ரயிலில் பயணச் சலுகை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இவ்வாறான புழக்கத்தில் இருந்த முதியோர்களுக்கான பல சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. தொற்று பாதிப்புகள் முழுமையாக நீங்கிவிட்ட நிலையிலும், இந்த சலுகைகள் முதியோருக்கு மீண்டும் வழங்கப்படவில்லை.
மோசமான பொருளாதார நிலையிலும் தற்போது மூத்த குடிமக்கள் அனைவரும் முழுக் கட்டணம் செலுத்தியே பயணிக்க வேண்டியுள்ளது. ரயில் கட்டணச் சலுகையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள மூத்த குடிமக்கள் அமைப்புகள் தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றன.
70 வயதுக்கும் மேற்பட்ட அனைத்து முதியோர்களுக்கும் அவர்களின் பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரையிலான ஆயுஷ்மான் பாரத் இலவச மருத்துவக் காப்பீடு திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால், எந்த மருத்துவமனையும் இந்தச் சலுகையை முதியோர்களுக்கு அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.
முதுமையில் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள் தனிப்பட்ட ஒரு முதியவரின் பிரச்னை மட்டுமல்ல, அது ஒரு சமூகம் தொடர்ந்து சந்திக்கும் ஒரு சவாலுமாகும். நாம் முதியோரை விலைமதிக்க முடியாத வளமாக அங்கீகரிக்க வேண்டும். அவர்களுடைய கவலைகளைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
இளமைக் காலத்தில் குடும்பங்களும், சமூகமும் முன்னேற உழைத்தவர்கள் இவர்கள். இவர்களில் பலர் முதியோர் இல்லங்களிலும், சமூகத்திலும் இழிநிலையில் வாழ்வது இனியாவது தவிர்க்கப்பட வேண்டும். அதிகமாக வாழும் தற்போதைய சமூகத்தில் அவர்களுடைய நலன்கள் காக்கப்பட வேண்டும். அதற்கு அரசும், குடும்பங்களும், சமூக ஊடகங்களும், சமூகமும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அவர்களின் நலன் காக்கும் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். தேர்தல் நேர வாக்குகளுக்காக மட்டும் அவர்களைப் பயன்படுத்திக் கொள்வது கூடாது. அவர்கள் இழந்த சலுகைகளை திரும்பப் பெற்று அவர்களும் கண்ணியத்துடன் சமூகத்தில் வாழும் நிலையைப் பெறுதல் வேண்டும். இதை சாத்தியமாக்க நாம் ஒன்றிணைவோம். அவர்கள் வாழ்வு சிறக்க பாடுபடுவோம். முதியோர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண 14567 என்ற இலவச உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.