FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வெளிநாட்டு பல்கலைக்கழகம்: மறுபரிசீலனை அவசியம்

தமிழ்நாட்டின் முதல் வெளிநாட்டுப் பல்கலைக்கழகமாக மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தை நிறுவ அனுமதி வழங்கப்பட்டுள்ளதைப் பற்றி...

26 அக்டோபர் 2026, 1:57 am
பகிர்:

தமிழ்நாட்டின் முதல் வெளிநாட்டுப் பல்கலைக்கழகமாக மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தை நிறுவ அனுமதி வழங்கப்பட்டு, அது சென்னை வேளச்சேரி பகுதியில் அமையவுள்ளது. இது மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாகும். இது வேறுபட்ட தீவுகளாக உயர் கல்வி வளாகங்களை உருவாக்குவதுடன், கல்வி உரிமையை வணிக நலன்களுக்கு அடகு வைப்பதாகவும் அமையும் என்பதால், இதைக் கல்வி வல்லுநர்கள் ஆரம்பம் முதலே எதிர்த்து வந்தனர். இப்போது இதற்கு தமிழக அரசும் அனுமதி தந்து வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை வரவேற்றுள்ளது.

தமிழ்நாட்டில் செயல்படும் 21 பல்கலைக்கழகங்களில் பாதிக்கும் மேல் நிரந்தர ஆசிரியர்கள் இல்லை. குறிப்பாக, சென்னைப் பல்கலைக்கழகத்தில் 515 ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் உள்ளன. ஆனால், 180 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 405 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 202 பேரே பணிபுரிந்து வருகின்றனர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 230 ஆசிரியர்களுக்கு 119 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். மேலும் 188 அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 7,198 காலியிடங்கள் இருப்பதாக தமிழக அரசின் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.

தமிழகத்தின் 90 சதவீத ஏழை, எளிய மாணவர்கள் உயர் கல்வி பயிலும் அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு கல்லூரிகளில் அடிப்படைக் கட்டமைப்புகளைத் தொடர்ந்து சீர்படுத்தாமல் வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தை தமிழக அரசு வரவேற்கிறது. மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், தமது இணையதளத்தில் தெரிவித்துள்ள முதலாம் ஆண்டு கல்விக் கட்டணங்கள், எளிய - நடுத்தர மாணவர்களுக்கு எட்டாத தொலைவில் உள்ளன.

Advertisement

Advertisement

எம்.பி.ஏ. படிப்புக்கு ரூ.23.10 லட்சம், செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு ரூ.17.93 லட்சம், வணிக மேலாண்மை படிப்புக்கு ரூ.14.52 லட்சம், தரவு அறிவியல் படிப்புக்கு ரூ.14.52 லட்சம் என முதல் ஆண்டுக் கல்விக் கட்டணங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. இது தவிர மற்ற கட்டணங்களும் உண்டு. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் கட்டணங்கள் மீது தலையிட மத்திய, மாநில அரசுகளுக்கு அதிகாரம் கிடையாது. இதனால், இது வரம்பற்ற கட்டண வசூலுக்கு வழிவகுக்கும்.

'தமிழக அரசின் இந்த உயர் கல்விக் கொள்கை சமூக நீதிக்கு எதிரானதாகும்' என்று தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஹரியாணா, கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரம் ஆகியவை ஏற்கெனவே வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை அனுமதித்து விட்டன. இப்போது தமிழ்நாடும் அந்தப் பட்டியலில் இணைகிறது.

தனியார் பல்கலைக்கழகங்களை ஊக்குவிக்கும் சட்டத் திருத்தத்தை தமிழ்நாடு அரசு கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் கொண்டுவந்தது. இப்போது வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்துக்கும் அனுமதி அளித்துள்ளது. ஒருபுறம், தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப மறுக்கிறது. அரசு கலைக் கல்லூரிகளில் 7,198 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் ஏழை, எளிய மாணவர்களின் கல்வி முடங்கும் அபாயம் உள்ளது.

தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்கள் தொடங்குவதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன. இதற்கான சட்ட மசோதா, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டு சட்டத்தின்படி பல்கலைக்கழகம் அமைக்க 100 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. இப்போது, இந்த நில வரம்பு குறைக்கப்பட்டிருக்கிறது. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் 12 ஏக்கரும், பிற மாநகராட்சிகள், நகராட்சிகளில் 18 ஏக்கரும், பிற பகுதிகளில் 25 ஏக்கரும் இருந்தால் தனியார் பல்கலைக்கழகம் தொடங்கலாம்.

100 ஏக்கர் என்ற நில வரம்பை 12, 18, 25-ஆகக் குறைப்பது உயர் கல்வி நிறுவனங்களை உருவாக்குவதற்கான நெருக்கடிகளைக் குறைக்கும் என்று கூறுகின்றனர். குறைந்த நிலரப்பரப்பில் பல்கலைக்கழகத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த முடியுமா?, புதிய பல்கலைக்கழகங்களின் தரத்தை அரசு எவ்வாறு கண்காணிக்கப் போகிறது?, அதைவிட முக்கியமாக இடஒதுக்கீடு, கட்டணக் கட்டுப்பாடு, ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு, ஏழை மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பு ஆகியவற்றுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்?- இப்படி பல கேள்விகள் எழுகின்றன. மாற்றம் வேண்டும் என்று விரும்பியவர்களுக்கே அதிர்ச்சியளிக்கும் வகையில், பல மாற்றங்கள் தமிழகத்தில் நிகழ்ந்து வருகின்றன.

அவற்றில் சட்டப்பேரவையின் இறுதி நாளில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவும் ஒன்றாகும். தனியார் கல்வி நிறுவனங்கள் பெருகிவிட்டால், அதில் மத்திய- மாநில அரசுகளால் தலையிட முடியாத நிலை ஏற்படும். இடஒதுக்கீடு, வேலைவாய்ப்பு, ஆராய்ச்சி, கல்வித் தரம், கல்வி உதவித்தொகை என எதுவும் முறையாக இருக்காது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு இடஒதுக்கீடு, உதவித்தொகை போன்றவற்றையும் எதிர்பார்க்க முடியாது. தனியார் பல்கலைக்கழகங்களை அதிகரிப்பதன்மூலம் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு நிகரான உள் கட்டமைப்பு, புதிய பாடப் பிரிவுகள், ஆராய்ச்சி உள்ளிட்டவை உருவாகும் என்று அரசு கூறுகிறது.

அப்படியானால், ஏற்கெனவே அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்தவும், முழுநேர ஆசிரியர்களை நியமிக்கவும், புதிய ஆய்வுக் கூடங்களை அமைக்கவும், ஆராய்ச்சிக்கும், காப்புரிமைக்கும் உதவவும் ஏன் இதே அளவிலான கவனம் செலுத்தப்படவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. முனைவர் பட்டம் பெறுதல், புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபடுதல் போன்றவற்றிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோரின் பங்கு தனியார் பல்கலைக்கழகங்களில் குறைவாகவே இருக்கும். அரசுப் பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டத்துக்கான ஓராண்டுக் கட்டணம் ரூ.15 ஆயிரம் என்ற நிலையில், தனியார் பல்கலைக்கழகங்களில் கலை, அறிவியல் படிப்புக்கே ரூ.40 ஆயிரம், ரூ.50 ஆயிரம் வரை இருக்கும்.

இத்தகைய கட்டணங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், இடஒதுக்கீட்டின் மூலம் உயர் கல்வி பெறும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின மாணவர்களுக்கும் எட்டாக்கனியாகவே இருக்கும். இதனால், பின்தங்கிய மாணவரின் பங்கேற்பு குறையவே செய்யும் என்னும் ஆபத்தும் இதில் அடங்கியுள்ளது.

பல்கலைக்கழகம் என்பது உயர் கல்வியை வழங்குவதுடன், ஆய்வையும் மேற்கொள்ளும் ஒரு கல்வி நிறுவனம் பல்வேறு துறைகளில் பட்டப் படிப்பையும், பட்ட மேற்படிப்பையும் இந்த பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன. இந்த கல்வி மருத்துவம், சட்டம், பொறியியல், அறிவியல், கலை உள்பட பல துறைகளில் பணிபுரிவதற்கு அடிப்படை அறிவாகக் கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்கள் மேலை நாட்டினரால் 19-ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழ்நாட்டின் முதல் பல்கலைக்கழகம் சென்னைப் பல்கலைக்கழகம் ஆகும். இது 1857-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-இல் தொடங்கப்பட்டது. அந்தக் காலம் இந்தியாவில் பிரிட்டிஷார் ஆட்சி செய்த காலம். இந்தியாவில் கல்வி வளர்ச்சிக்கு அவர்கள் பங்கு குறிப்பிடத்தக்கது. அவர்கள் ஆட்சி தொடர அலுவலர்கள், அதிகாரிகள் தேவைப்பட்டனர். ஆங்கிலம் அறிந்த எழுத்தர்களை உருவாக்குவதற்கு கல்வியும், கல்விக்கூடங்களும் உருவாக்கப்பட்டன. வணிகம் செய்ய வந்த பிரிட்டிஷார் ஆட்சி செய்ய ஆரம்பித்தனர்.

பள்ளிகளும், கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் உருவான கதை இதுதான். படிப்பறிவில்லாத பாமர மக்களுக்கு படிப்பும் கிடைத்தது. வேலையும் கிடைத்தது; அடிமைத் தனத்திலும், அறியாமையிலும் மூழ்கிக் கிடந்த இந்திய மக்கள் விழித்தெழுந்தனர். இப்போது தமிழக அரசு கொண்டுவந்துள்ள மாற்றம் என்பது தேசிய கல்விக் கொள்கையின் மறைமுக மாற்றமாகும். இது போன்று கல்வி நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டால் இடஒதுக்கீடு, கட்டணக் கட்டமைப்பு, ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என்றே கல்வியாளர்கள் கவலைப்படுகின்றனர்.

இன்று அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் சுமார் 2 லட்சம் இடங்கள் இருக்கும்போது, அவற்றில் 69 சதவீத இடஒதுக்கீடு என்பது நம் மாணவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது; அவற்றில் படித்து பலர் தாய்நாட்டிலும், வெளிநாட்டிலும் வெற்றிகரமாக வலம் வருகின்றனர்.

அந்த அமைப்பையே தகர்த்து விட்டால் ஏழை மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். இந்தத் தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்தத்தின்மூலம் தமிழக அரசு தமது கட்டுப்பாடுகளை வலுப்படுத்த வேண்டும். இடஒதுக்கீடு இருக்க வேண்டும். அரசு நிர்ணயிக்கும் கட்டணக் கட்டமைப்பு இருக்க வேண்டும். மாணவர்களுக்கான இடஒதுக்கீடு, ஆசிரியர்களுக்கான ஊதியம், தகுதி என அனைத்து நிலைகளிலும் கட்டுப்பாடுகளையும், வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் அரசு கொண்டு வர வேண்டும்.

'கல்வி சிறந்த தமிழ்நாடு' என்று மகாகவி பாரதி பாடினார். அக்காலம் முதல் இக்காலம் வரை தமிழ்நாடு கல்வியிலும், சமயத்திலும் முன்னிலை வகித்து வருகிறது. சமண, பௌத்த, சைவ சமயக் கல்விக்காக உலக அறிஞர்கள் இங்கு வந்து போனதாக வரலாறு கூறுகிறது. இனிமேல் நாம் புதிய வரலாறு படைக்க வேண்டும்.

கட்டுரையாளர்: எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments