FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஐரோப்பியர்கள் எழுப்பும் கேள்வி

ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வரும் போராட்டங்கள் பற்றிய நடுப்பக்கக் கட்டுரை.....

29 அக்டோபர் 2026, 4:25 am
கோப்புப்படம்.
பகிர்:

ஐரோப்பாவின் வீதிகள் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஒரு வலிமையான, தெளிவான செய்தியை எடுத்துரைக்கின்றன; பொருளாதார பாதுகாப்பின்மையை காவல் துறை நடவடிக்கைகளால் ஒழித்துவிட முடியாது; பொதுச் சேவைகள் எதிர்கொள்ளும் நெருக்கடிக்குப் பொதுமக்களை ஒடுக்கும் நடவடிக்கைகள் மூலம் தீர்வு காணவும் முடியாது.

பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் கடந்த 17-ஆம் தேதி நடைபெற்ற போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வீடமைப்பு, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உரிமைகளுக்காக தொடர்ந்து நடைபெறும் போராட்டங்களும், தற்போதைய பொருளாதார மற்றும் அரசமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கை ஆழமாகச் சிதைந்து வருவதை வெளிப்படுத்துகின்றன.

இது வெறுமனே சட்டம்-ஒழுங்கு தொடர்பான பிரச்னை அல்ல. இது சமூக நீதி, பொருளாதார ஜனநாயகம் மற்றும் நலன்புரி அரசின் எதிர்காலம் தொடர்பான பிரச்னையாகும். குறைந்த செலவில் கிடைக்கக்கூடிய வீடுகள், கண்ணியமான ஊதியம், அனைவருக்கும் கல்வி, பாதுகாப்பான வேலைவாய்ப்பு மற்றும் பொதுச் சேவைகள் ஆகியவை கோரி மக்கள் வீதிகளில் இறங்கும்போது, அவர்களின் கோரிக்கைகளுக்குப் பின்னால் உள்ள அரசியல் முக்கியத்துவத்தை அரசுகள் உணர வேண்டும்.

Advertisement

Advertisement

செல்வந்தர்கள் மற்றும் அதிகாரம் படைத்தவர்களின் குரல்களுக்கு மட்டுமே செவிசாய்த்து, சாதாரண மக்களின் கோபத்தைச் சட்டம்-ஒழுங்குப் பிரச்னையாக மட்டும் கருதும் அரசு, தனது அடிப்படையான பொறுப்பையே மறந்துவிட்டதாகும். ஜனநாயக அரசின் கடமை, சட்டம்-ஒழுங்கைப் பேணுவதுடன் முடிந்துவிடுவதில்லை; மக்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்குத் தேவையான சமூக மற்றும் பொருளாதாரச் சூழல்களை உருவாக்குவதும் அதன் பொறுப்பாகும்.

பிரான்ஸில் நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பாக வெளியான செய்திகளில் குறிப்பிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, 5,50,000-க்கும் அதிகமானோர் பங்கேற்றதாக அந்நாட்டு அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். கல்வி நிலைகள் மோசமடைதல், பொதுச் சேவைகள் மீதான அதிகரிக்கும் அழுத்தம் மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வு ஆகியவற்றுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள், சில இடங்களில் மோதல்கள், கொள்ளைச் சம்பவங்கள், தீவைப்புகள் மற்றும் காவல் துறையுடனான நேரடி மோதல்களாகவும் மாறின.

பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடுகளில்கூட இவ்வளவு அதிகமான மக்கள் தங்களின் எதிர்காலம் குறித்து ஏன் அதிகரித்துவரும் நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்கின்றனர்?

வளர்ச்சியையும் லாபத்தையும் கொண்டாடுகிற அதே நேரத்தில், அதன் பலன்களை நியாயமான முறையில் பகிர்ந்தளிப்பதில் அடிக்கடி தோல்வியடையும் பொருளாதார அமைப்பின் அடிப்படையான பலவீனங்களையே இந்த முரண்பாடுகள் அம்பலப்படுத்துகின்றன.

ஐரோப்பா முழுவதும் உள்ள அரசுகள் இந்த நெருக்கடிக்குப் பதிலளிக்கும் விதமே, நிலைமை மேலும் மோசமடையுமா அல்லது ஜனநாயகத்தைப் புதுப்பிப்பதற்கான வாய்ப்பாக மாறுமா என்பதைத் தீர்மானிக்கும்.

பிரான்ஸ், பெல்ஜியம், ஸ்பெயின், அல்பேனியா, செர்பியா, கிரீஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் கைது நடவடிக்கைகள், மோதல்கள் மற்றும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்த செய்திகள், மக்களின் கோபம் குடிமக்களுக்கும் அரசுக்கும் இடையிலான நீடித்த மோதலாக மாறுவதன் ஆபத்துகளைச் சுட்டிக்காட்டுகின்றன.

பொது பாதுகாப்பைப் பேணுதல், வன்முறையைத் தடுத்தல், உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாத்தல் ஆகியவை அரசுகளின் நியாயமான பொறுப்புகளாகும். ஆனால், அந்தப் பொறுப்புகள் சட்டத்துக்கு உட்பட்டு, தேவைக்கும் சூழலுக்கும் ஏற்ற அளவில், வெளிப்படைத் தன்மையுடனும் பொறுப்புணர்வுடனும் நிறைவேற்றப்பட வேண்டும். கண்மூடித்தனமான வன்முறைப் பயன்பாடு, அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்குப் பொதுவான தடைகளை விதித்தல், எதிர்ப்புக் குரல்களைக் குற்றமாக்குதல் ஆகியவற்றால் நீடித்த சமூக அமைதியை ஏற்படுத்த முடியாது.

இன்று ஐரோப்பாவுக்கு தீர்க்கமான சமூக மற்றும் பொருளாதார மறுசீரமைப்புத் திட்டம் அவசியமாகிறது. ஊதியங்களும் ஓய்வூதியங்களும் கண்ணியமான வாழ்க்கைத் தரத்தை உறுதிசெய்ய வேண்டும். தொழிற்சங்க உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; தொழிலாளர்களுக்கு நடைமுறையில் பலனளிக்கும் பாதுகாப்புகள் வழங்கப்பட வேண்டும்.

பொது சுகாதார சேவைகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளுக்குப் போதுமான, தொடர்ச்சியான நிதி முதலீடு அவசியம். முற்போக்கான வரிவிதிப்பு, வரி ஏய்ப்பு மற்றும் வரி செலுத்துவதைத் தவிர்க்கும் நடைமுறைகளுக்கு எதிரான பயனுள்ள நடவடிக்கைகள், வலுவான போட்டிக் கொள்கைகள் ஆகியவற்றின்மூலம் செல்வந்தர்களும் வலிமைமிக்க பெருநிறுவனங்களும் சமூகத்துக்கு தங்களின் நியாயமான பங்களிப்பை வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும்.

கல்வியை இடைவிடாமல் தனியார்மயமாக்குவதும் வணிகமயமாக்குவதும் அரசின் பொறுப்பிலிருந்து தீவிரமாக விலகிச் செல்லும் செயலாகும். ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வியை உறுதிசெய்வதற்குப் பதிலாக, தனியார் லாப வேட்டைக்கான சந்தையாக மாற்றுவதற்கு அரசுகள் அதிக அளவில் அனுமதிக்கின்றன. மாறாக, பொதுக் கல்வி நிறுவனங்களை அரசுகள் வலுப்படுத்த வேண்டும்.

பொது நிதி எந்த முன்னுரிமைகளின் அடிப்படையில் செலவிடப்படுகிறது என்பது குறித்த நேர்மையான விவாதத்தையும் இந்த நெருக்கடி கோருகிறது. அத்தியாவசிய பொதுச் சேவைகள் போதிய நிதியின்றித் தவிக்கும் நிலையில், ராணுவ விரிவாக்கம், வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் தலையீடுகள் மற்றும் புவிசார் அரசியல் போட்டிகள் ஆகியவற்றுக்காக ஏன் பெரும் நிதி ஒதுக்கப்படுகிறது? என்பதை ஐரோப்பிய அரசுகள் விளக்க வேண்டும்.

தேவையற்ற ராணுவத் தலையீடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்குப் பதிலாக, நயதந்திர நடவடிக்கைகள், அமைதியான முறையிலான மோதல் தீர்வுகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பொதுமக்களின் பணம் மனிதவள மேம்பாட்டுக்கும் சமூக நலனுக்கும் பயன்பட வேண்டும்; பெருநிறுவனங்களின் நலன்களுக்காகவோ புவிசார் அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டும் நோக்கங்களுக்காகவோ பயன்படுத்தப்படக் கூடாது.

இந்த அமைதியின்மையை குடியேற்றம் மற்றும் இஸ்லாமியவாதம் ஆகியவற்றின் கண்ணோட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்க முயன்றதாகவும், மக்களின் அதிருப்திக்கு இந்தப் பிரச்னைகளே காரணம் எனக் குறிப்பிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. பிரான்ஸ் அதிபர் இந்த விளக்கத்தை நிராகரித்ததுடன், டிரம்ப் உள்ளிட்ட சில உலகத் தலைவர்கள் பொதுமக்களைத் தவறாக வழிநடத்த முயல்வதையும் விமர்சித்தார்.

இந்தப் போராட்டங்களை புரட்சிகர இயக்கமாக மிகைப்படுத்திப் போற்றவும் கூடாது; அதேவேளையில், வன்முறையின்மூலம் ஒழித்துவிடக்கூடிய கலவரங்களாக அவற்றை நிராகரிக்கவும் கூடாது. தனித்தனியான கோரிக்கைகளைக் கொண்ட வெவ்வேறு போராட்டங்களாக இவை இருந்தாலும், பொருளாதார பாதுகாப்பின்மை மற்றும் சமூக ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை மையமாகக் கொண்டு இவை வெளிப்படுத்தும் பொதுவான போக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கையை முன்வைக்கிறது.

மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் முடிவுகள் அவர்களின் பங்கேற்பின்றி எடுக்கப்படுகின்றன என்றும், பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் ஒரு சில சலுகை பெற்றவர்களுக்கே அளவுக்கு அதிகமாகக் கிடைக்கின்றன என்றும் மக்கள் நம்பத் தொடங்கும்போது, ஜனநாயக நிறுவனங்களின் நம்பகத்தன்மை சிதைகிறது.

சமூகப் பாதுகாப்பின்மையின் அடிப்படைக் காரணங்கள் தீர்க்கப்படாமல் இருக்கும் வரை, சமூக அமைதியை உறுதிசெய்ய முடியாது என்பதே தெளிவான பாடமாகும். வீதிகளைக் காலி செய்வது ஒரு நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்குச் சமமானதல்ல. போராட்டக்காரர்களின் குரலை ஒடுக்குவது அவர்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளிப்பதற்குச் சமமானதல்ல.

ஐரோப்பாவின் உழைக்கும் மக்களும் இளைஞர்களும் அடிப்படையான கேள்விகளை எழுப்புகின்றனர். பொருளாதார வளர்ச்சியால் பயனடைவது யார்?, சிக்கன நடவடிக்கைகளின் சுமையைச் சுமப்பவர்கள் யார்?, அத்தியாவசிய சேவைகள் ஏன் வணிக நலன்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகின்றன?- இவற்றுக்குப் பதில்கள் வழங்கப்பட வேண்டும்.

மக்களின் குரல்களைக் கேட்பதும், தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்வதும், அவற்றை நடைமுறைப்படுத்துவதும் அரசுகளின் பொறுப்பாகும். அச்சம், அடக்குமுறை மற்றும் விரிவடைந்து வரும் சமூகப் பிளவுகள் ஆகியவற்றின் மீது ஐரோப்பாவின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப முடியாது. கண்ணியமான வேலைவாய்ப்பு, மலிவான வீடுகள், அனைவருக்கும் கல்வி, எளிதில் அணுகக்கூடிய சுகாதார சேவைகள் மற்றும் சாதாரண குடிமக்களின் ஜனநாயகப் பங்கேற்பு ஆகியவற்றின் மீதே அந்த எதிர்காலம் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

நீண்டகாலமாகப் பலரின் குரல்கள் புறக்கணிக்கப்பட்டு வந்ததால்தான் இன்று வீதிகள் "பேசுகின்றன'. அந்தக் குரல்களுக்கு அரசுகள் செவிசாய்ப்பதே விவேகமான செயலாகும். வீதிகளைக் காலி செய்வதன்மூலம் மட்டும் சமூக நீதிக்கான போராட்டம் முடிவுக்கு வந்துவிடாது; மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும்போதுதான், அந்தப் போராட்டம் முடிவுக்கு வரும்.

கட்டுரையாளர்:

அகில இந்திய ஃபார்வர்டு பிளாக்

மத்தியக் குழுவின் பொதுச் செயலாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments