FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

முற்றுப்புள்ளி எப்போது விழும்?

அமெரிக்க அதிபரானதில் இருந்தே உலகமே அதிர்ச்சிக்கும் பாதிப்புக்கும் உள்ளாகும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை டிரம்ப் மேற்கொண்டு வருகிறார்.

15 செப்டம்பர் 2026, 8:06 am IST
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - AP
பகிர்:

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவுக்கு சொந்தமான 6,500 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் வளத்தை அமெரிக்கா கட்டுப்படுத்துவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையொப்பம் ஆகியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த செப். 2-ஆம் தேதி அறிவித்தார்.

அமெரிக்க அதிபரானதில் இருந்தே உலகமே அதிர்ச்சிக்கும் பாதிப்புக்கும் உள்ளாகும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை டிரம்ப் மேற்கொண்டு வருகிறார்.

பல்வேறு நாடுகளுக்கும் மிதமிஞ்சிய அளவில் வரி விதித்தது, வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்களுக்கு எதிரான கடும் நடவடிக்கைகள், ஈரான் மீதான தாக்குதல் போன்றவற்றின் வரிசையில் வெனிசுலாவின் எண்ணெய் வளத்தின் மீது அமெரிக்கா நீண்ட நாள்களாக கண் வைத்திருந்தது.

Advertisement

Advertisement

வெனிசுலா உலகிலேயே அதிக எண்ணெய் வளம் கொண்டது. அமெரிக்கா 4% எண்ணெய் இருப்பைக் கொண்டது என்றால், உலகின் மொத்த எண்ணெய் இருப்பில் சுமார் 18% வெனிசுலாவில் உள்ளது. வெனிசுலாவில் 30,300 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது என்றால், அமெரிக்காவின் இருப்பு 5,500 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் மட்டுமே ஆகும்.

தன்னை சோஷலிச நாடாக வெளிப்படுத்திக் கொண்டதால், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகவே அந்த நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்க அரசுகள் எடுத்து வந்தன. வெனிசுலாவின் அதிபராக இருந்த நிக்கோலஸ் மடூரோவுக்கு போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக டிரம்ப் நிர்வாகம் நீண்ட நாள்களாகவே குற்றஞ்சாட்டி வந்தது. பென்டனைல், கொகைன் போன்ற போதைப் பொருள்கள் வெனிசுலாவிலிருந்து அமெரிக்காவுக்குள் கடத்தப்படுவதாக புகார் கூறி வந்தது.

இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்த மடூரோ, வெனிசுலாவின் பரந்த எண்ணெய் வளத்தைக் கைப்பற்றுவதற்காகத் தன்னை ஆட்சியிலிருந்து அகற்ற அமெரிக்கா முயற்சி செய்வதாகக் குற்றஞ்சாட்டி வந்தார்.

இந்தப் பின்னணியில், யாருமே எதிர்பார்க்காத வகையில் சர்வதேச சட்டங்களைப் பற்றி எள்ளளவும் கவலைப்படாமல் கடந்த ஜன. 3-ஆம் தேதி நள்ளிரவில் வெனிசுலா தலைநகர் கராகஸில் நுழைந்த அமெரிக்கப் படைகள் மடூரோவையும் அவரது மனைவியையும் கைது செய்து அமெரிக்காவுக்கு கடத்திச் சென்றுவிட்டது. இப்போது இருவரும் நியூயார்க்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வெனிசுலாவை அமெரிக்கா நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆட்சி செய்யும் என்றும் வெகு விரைவில் வெனிசுலாவின் எண்ணெய் விற்பனையை அமெரிக்கா மேலாண்மை செய்யும் என்றும் மடூரோ கைது செய்யப்பட்டபோதே அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தது கவனத்தில் கொள்ளத்தக்கது. மடூரோ அதிபராக இருந்தபோது துணை அதிபராக இருந்து இப்போது இடைக்கால அதிபராக உள்ள டெல்ஸி ரோட்ரிக்ஸ் சோஷலிச கொள்கைகளில் நம்பிக்கை கொண்டிருந்தாலும், அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடைகளில் இருந்து வெளியேறுவதற்காக டிரம்ப்பின் கண்ணசைவுக்கு ஏற்ப செயல்பட வேண்டிய நெருக்கடிக்கு உள்ளானார்.

இந்த எண்ணெய் ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும், 100 பில்லியன் டாலர் முதலீடுகளை ஈர்க்கும் என்றும், 200 பில்லியன் டாலருக்கும் அதிகமாக வரி வருவாய் வெனிசுலாவுக்கு கிடைக்கும் என்றும், டெல்ஸி ரோட்ரிக்ஸ் கூறியுள்ளார்.

வெனிசுலாவில் செயல்படும் இரண்டாவது பெரிய எண்ணெய் நிறுவனமான நார்த் அமெரிக்கன் புளூ எனர்ஜி பார்ட்னர்ஸு'டன் இணைந்து செயல்படப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குநர்களை நியமிக்கும் வீட்டோ அதிகாரம் அமெரிக்காவுக்கு உள்ளது என்பதில் இருந்தும் இயக்குநர்களில் பெரும்பான்மையினர் அமெரிக்கர்களாக இருப்பார்கள் என்பதில் இருந்தும் அமெரிக்காவின் உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

வெறும் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றுவதுடன் இது முடியவில்லை. வெனிசுலாவின் தங்கம் மற்றும் மற்ற கனிம வளங்களையும் அமெரிக்கா குறிவைத்துள்ளது. அமெரிக்காவின் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டக் பர்கம் கடந்த மார்ச்சில் வெனிசுலா சென்று 100 மில்லியன் டாலர் (ரூ. 945 கோடி) மதிப்புள்ள தங்கத்தை வசப்படுத்தியதாகவும், 'டிராஃபிகுரா' என்ற நிறுவனத்துக்கு 100 கிலோ தங்கத்தை வெனிசுலா விற்பதற்கு வழிவகை செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

எண்ணெய் வளத்தை அடகு வைத்ததன் மூலம் அமெரிக்காவின் புதிய காலனித்துவத்துக்கு கதவைத் திறந்துவிட்டதாக, ஹியூகோ சாவேஸ் அதிபராக இருந்தபோது எண்ணெய் வளத் துறை அமைச்சராக இருந்த ரஃபேல் ராமிரெஸ் விமர்சனம் செய்துள்ளார்.

'எனக்கு முன்பு இருந்த அரசுகள் நமது நாட்டின் எண்ணெய் வளத்தை அமெரிக்கா திருடுவதற்கு ஒத்துழைத்தன, அதற்கு இப்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்' என்று 2008-இல் அப்போதைய அதிபர் ஹியூகோ சாவேஸ் முழங்கினார்.

ஆனால், அவரது வழியில் வந்த டெல்ஸி ரோட்ரிக்ஸ் எண்ணெய் ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று கூறியுள்ளது நகைமுரணாகும்.

கடந்த காலத்தில் ஈரானின் எண்ணெய் வளங்களை பிரிட்டன் கட்டுப்படுத்தியதையும் இராக்கின் வளங்களை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பங்கு போட்டுக் கொண்டதையும் இந்த வெனிசுலா ஒப்பந்தம் நினைவூட்டுகிறது.

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டுவதையே வாடிக்கையாக மேற்கத்திய நாடுகள் கொண்டிருந்தன; கொண்டுள்ளன. அந்த நாடுகளின் இத்தகைய போக்குக்கு யார் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்பதுதான் புரியாத புதிராகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments