FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு

அமெரிக்க அரசமைப்புச் சட்டம் வரிகளை விதிக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கே (காங்கிரஸ்) வழங்கியுள்ளது என்றும், நாடாளுமன்றத்தின் உரிய அனுமதியின்றி, அமெரிக்க அதிபரால் அந்த அதிகாரத்தைச் செயல்படுத்த முடியாது என்றும் அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

10 அக்டோபர் 2026, 7:01 am IST
அமெரிக்கா அதிபர் டிரம்ப்
பகிர்:

- பாறப்புறத் இராதாகிருஷ்ணன்

கடந்த செப்.18-ஆம் தேதி அமெரிக்கா அதிபர் டிரம்ப், ரஷியா மற்றும் ஈரானிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் வாங்கும் நாடுகளுக்கு எதிராக 100 சதவீத வரை இறக்குமதி வரி விதிக்க, 'லிண்ட்சே ஓ. கிரஹாம் ரஷியா மற்றும் ஈரான் தடைகள் சட்டம், 2026' என்ற சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார். உக்ரைன் போருக்குப் பிறகும் ரஷியாவிடமிருந்து தொடர்ந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்தி வாங்கும் நாடுகளைப் பொருளாதார ரீதியாகக் கட்டுப்படுத்துவதே இந்தச் சட்டத்தின் நோக்கம்.

அமெரிக்க அரசமைப்புச் சட்டம் வரிகளை விதிக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கே (காங்கிரஸ்) வழங்கியுள்ளது என்றும், நாடாளுமன்றத்தின் உரிய அனுமதியின்றி, அமெரிக்க அதிபரால் அந்த அதிகாரத்தைச் செயல்படுத்த முடியாது என்றும் அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்கப் பொருளாதாரத்தை வெளிநாட்டு வர்த்தகப் போட்டிகளிலிருந்து காப்பதாகக் கூறி கடுமையான இறக்குமதி வரி விதிப்புகளை அதிபர் டிரம்ப் 02.04.2025 அன்று அறிவித்த "விடுதலை நாள்' வரிகள் சட்டவிரோதமானவை என அறிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இருப்பினும், விதிவிலக்குகள் மற்றும் கொள்கை மாற்றங்கள் அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டாலும்கூட, டிரம்ப்பின் இரண்டாவது நிர்வாகத்தின் கீழ் சராசரி நடைமுறை இறக்குமதி வரி விகிதமானது 2024-ஆம் ஆண்டிலிருந்த சுமார் 2.4 சதவீதத்திலிருந்து சுமார் 11 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்தியா போன்ற நட்பு நாடுகளுக்கு அதிக அளவில் வரி விதிக்கும் அச்சுறுத்தல்களை விடுப்பது, வர்த்தகக் கூட்டாளிகளை மிரட்டுவது, பன்னெடுங்காலமாக உலகளாவிய வர்த்தகத்துக்கு அடித்தளமாக விளங்கிய விதிகளை மதிக்காமலிருப்பது போன்ற அமெரிக்காவின் நடவடிக்கைகள் உலக அளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, அத்தியாவசியப் பொருள்களின் விலையைப் பன்மடங்கு உயர்த்தியுள்ளன.

எனினும், உலக வர்த்தகம் கடந்த பத்தாண்டுகளைவிட மிக அதிக வேகத்தில் வளர்ந்து வருகிறது என்பதே உண்மை. 2025-ஆம் ஆண்டு உலக வர்த்தகம் சுமார் எட்டு சதவீதம் அதிகரித்துள்ளது. இது உலகப் பொருளாதார வளர்ச்சியைவிட ஐந்து சதவீதப் புள்ளிகள் அதிகம் என்பதுடன், 2024-ஆம் ஆண்டின் வர்த்தக வளர்ச்சி விகிதத்தில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்த வர்த்தக வளர்ச்சி நிகழாண்டிலும் தொடர்கிறது என்பதுதான் வியப்பான செய்தி.

அதிபர் டிரம்ப் இந்தியாவின் மீது மிக உயர்ந்த அளவிலான இறக்குமதி வரிகளை விதித்தாலும், ஓரளவு ரூபாய் மதிப்பின் சரிவின் காரணமாக அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி பெருமளவு அதிகரித்துள்ளது.

2025-2026-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் அமெரிக்காவுக்கான சரக்கு ஏற்றுமதி 19 சதவீதமும், சேவை ஏற்றுமதி 10 சதவீதமும் அதிகரித்துள்ளன.

இப்போது சீனா, இந்தியாவின் முக்கிய வர்த்தக கேந்திரமாக மாறி வருகிறது. 2025-2026 நிதியாண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வர்த்தகம் 150 பில்லியன் டாலர்களாக உள்ளது. உலகம் முழுவதும் 151 நாடுகளுக்குச் சீனா மிகப் பெரிய வர்த்தக நாடாகத் திகழ்கிறது. ஆனால், அமெரிக்கா 57 நாடுகளுடன் மட்டுமே இணக்கமான வர்த்தக உறவைக் கொண்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், ரஷியாவின் நெருங்கிய நட்பு நாடான, கிழக்கு ஐரோப்பா கண்டத்திலுள்ள பெலாரஸýடன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த 21.09.2026 அன்று பொட்டாஷ் உரம் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளார். இதன்மூலம், டிரம்ப் நிர்வாகத்தின் இரட்டை நிலைப்பாடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அமெரிக்காவுக்குத் தேவையான முக்கிய விவசாய உள்ளீடான பொட்டாஷ் உரத்தை 85 சதவீத அளவுக்கு வழங்கும் கனடாவுடன் அமெரிக்கா அண்மைக்காலமாக மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. அதனால், வாஷிங்டன் தற்போது ஒட்டாவாவுக்குக் கொடுக்கும் விலையைவிட, கணிசமாகக் குறைவான விலையில் பெலாரஸிடமிருந்து பொட்டாஷை வாங்குவதற்கான ஓர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

உலக அளவில் கனடாவுக்கு அடுத்தப்படியாக பெலாரஸ் மற்றும் ரஷியா ஆகிய நாடுகள்தான் பொட்டாஷ் உற்பத்தியாளர்களாகத் திகழ்கின்றன. உலகளாவிய விநியோகத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கை கனடா மட்டுமே கொண்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் போருக்கு ஆதரவளிக்கும் பெலாராஸ் மீது கனடா உள்பட நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் தடைகளை விதித்துள்ளன. இந்நிலையில், பெலாரஸிடமிருந்து பொட்டாஷ் வாங்குவது ரஷியாவின் அத்துமீறலுக்கு நிதியுதவி செய்வதற்கு சமம் என்றும், அது 'ரத்தப் பொட்டாஷ்' என்றும் கனடாவின் சஸ்காட்வான் மாகாண முதல் ஸ்காட் மோ விமர்சித்துள்ளார்.

அமெரிக்கா- கனடா வர்த்தகப் போரில், கனடாவின் பொட்டாஷ் இதுவரை வரிகளிலிருந்து விலக்குப் பெற்றிருந்தாலும், டிரம்ப்பின் இந்த முயற்சி இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

பொட்டாஷ் என்பது எண்ணெய் அல்லது எரிவாயு அல்ல. ஆனால், விவசாயத்தில் அதற்கென ஒரு முக்கியத்துவம் உண்டு. பயிர் விளைச்சலுக்குத் தேவைப்படும் மூன்று முக்கிய ஊட்டச்சத்துகளான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் இதில் அடங்கியுள்ளது.

இது நீர் உறிஞ்சுதல், ஒளிச்சேர்க்கை மற்றும் நொதிச் செயல்பாடுகளை ஒழுங்குப்படுத்துவதுடன், பயிரின் தரம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் விளைச்சலையும் அதிகப்படுத்துகிறது. குறிப்பாக கரும்பு, உருளைக்கிழங்கு, வாழை போன்ற வணிகப் பயிர்களின் விளைச்சலுக்கு பொட்டாஷ் மிக முக்கியம்.

இந்தியாவில் விவசாயத் தேவைகளுக்காக ஆண்டுக்கு சுமார் 25 லட்சம் முதல் 40 லட்சம் மெட்ரிக் டன் பொட்டாஷ் உரம் தேவைப்படுகிறது. இந்தியாவின் விநியோகம் தற்போது கனடா, ரஷியா, இஸ்ரேல், ஜோர்டன் மற்றும் பிற நாடுகளுக்கிடையே பரவலாக்கப்பட்டிருந்தாலும், பெலாரஸ் ஒரு முக்கியமான ஆதாரமாக விளங்குகிறது.

இந்திய விவசாயச் சந்தைக்கு பொட்டாஷை வழங்கும் ஒரு முக்கிய நாடாக பெலாராஸ் இருப்பதால், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை புது தில்லியைப் பெருமளவில் பாதிக்கும். அமெரிக்கா போன்ற பெரிய நாடுகள் பெலாரஸிடமிருந்து பொட்டாஷை இறக்குமதி செய்தால், அதன் விலை விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்டிருக்கும் நாடுகளில் இன்னும் கடுமையாக உயரும் என புது தில்லி நம்புகிறது.

அமெரிக்காவின் வெளிப்படையான இந்த இரட்டை நிலைப்பாடு, தூதரக வட்டாரங்களில் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது. முன்னாள் அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரியும், தெற்காசிய ஆய்வாளருமான இவான் ஃபைஜென்பாம், ரஷிய எரிசக்தி விவகாரத்தில் இந்தியா மீது வாஷிங்டன் கொடுக்கும் அழுத்தத்துக்கும், பெலாரஸிடமிருந்து பொட்டாஷைப் பெறுவதில் டிரம்ப் காட்டும் விருப்பத்துக்கும் இடையேவுள்ள முரண்பாட்டைச் சுட்டிக்காட்டி, இந்தியாவின் மீதான அமெரிக்காவின் அழுத்தமும், பெலாரஸ் உடனான வர்த்தகமும் அமெரிக்காவின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகின்றன' என்றார்.

டிரம்ப்பின் பல அறிவிப்புகளைப் போலவே இந்த விஷயத்திலும் அவர் அவசரப்பட்டுவிட்டதாகவே பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். ஏனெனில், மேற்கத்திய சந்தைகளுக்கு வழங்குவதற்கு உபரி பொட்டாஷ் மிகக் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருப்பதாகவும், தனது நாட்டின் உற்பத்தி ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டதாகவும் பெலாரஸ் அதிபர் அலெக்ஸôண்டர் லுகாஷென்கோ கூறினார். "நாங்கள் மற்ற சந்தைகளுக்கு வழங்க விரும்பினாலும், எங்களிடம் அந்த அளவு இல்லை' என லுகாஷென்கோ கைவிரித்ததாக மின்ஸ்கிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

புதுதில்லியைப் பொருத்தவரை, டிரம்ப்பால் அமெரிக்க விவசாயிகளுக்கு மலிவான பொட்டாஷை பெற்றுத் தர முடியுமா என்பது மட்டுமல்ல கேள்வி; மாறாக, கனடாவுடனான உறவுகள் சீர்குலைந்து வரும் நிலையில், வாஷிங்டன் தனது விவசாய உற்பத்தியை அதிகரிக்க, உலகளாவிய உரச் சந்தையை மறுசீரமைத்துள்ளது. இது, இந்திய விவசாயிகளை எந்த அளவுக்குப் பாதிக்கப் போகிறது என்பதுதான் புது தில்லியின் முன்னுள்ள மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

எனவே, டிரம்ப்பின் இந்த சூழ்ச்சியானது, ஒரு முக்கிய விநியோகஸ்தருடன் வர்த்தகப் போரைத் தொடுத்து, அதன் மூலம் மற்றொரு விநியோகஸ்தர் வழியாக ஒரு சாதகத்தைப் பெறுவதாகவும், அந்த மற்றொரு விநியோகஸ்தர், அடிக்கடி மறைமுகமாக உதவி பெறும் ஒரு பெயரளவிலான புவிசார் அரசியல் எதிரியுடன் கூட்டணி வைத்துள்ளார். தேவை ஏற்படும்போது 'எதிரிக்கு நண்பன் தனக்கும் நண்பன்தான்' என்ற புது வியாக்கியானத்தைப் படைத்துள்ளார் டிரம்ப்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, "மற்ற நாடுகள் தன் நாட்டு மக்களின் தேவைக்காக, ரஷியாவுடன் வர்த்தகம் செய்யக் கூடாது. ஆனால், அமெரிக்கா தனது தேவைக்காக ரஷியாவின் நட்பு நாடுகளுடன் வர்த்தகம் செய்யலாம்' என்ற சுயநலப் போக்கைக் காட்டுவதாக இந்தியா கருதுகிறது.

கட்டுரையாளர்:

எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments