FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அவசர அவசியம்

ஐரோப்பிய ஒன்றியம் முழுமையிலும் 13 வயதுக்கு குறைந்தவர்களுக்கான சமூக ஊடகப் பயன்பாட்டை அறவே தடுக்கும் சட்டம் நிறைவேற உள்ளதைப் பற்றி...

28 செப்டம்பர் 2026, 2:14 am IST
பகிர்:

ஐரோப்பிய ஒன்றியம் முழுமையிலும் 13 வயதுக்கு குறைந்தவர்களுக்கான சமூக ஊடகப் பயன்பாட்டை அறவே தடுக்கும் சட்டம் நிறைவேற உள்ளது.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டர் லைன் அண்மையில் இதற்கான சட்டமுன்வரைவை அறிமுகப்படுத்தியுள்ளார். இதற்கு முன்னதாகவே ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பல நாடுகளும் இவ்வாறான தடைகளை தனித்தனியாக மேற்கொண்டு இருந்தாலும், ஒட்டுமொத்தமான ஐரோப்பிய ஒன்றியத்துக்குமான கட்டுப்பாடாக இந்த ஏற்பாடு வர உள்ளது. ஏற்கெனவே டிசம்பர் 2025-இல் ஆஸ்திரேலியா 16 வயதுக்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் சமூக ஊடகப் பயன்பாட்டை தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முற்காலங்களில் கிராமப்புறங்களில் குடிசை வீடுகளில் தீப்பிடிக்கும்போது தீயணைப்பு வாகனங்கள் வரக் காலதாமதமாகும். அதற்குள் உள்ளூர் மக்கள் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி நீரை வாரியிறைத்து தீயை அணைப்பர். ஒரு தரப்பினர் இவ்வாறு செய்யும்போதே மற்றொரு புத்திசாலித் தரப்பினர் அடுத்துள்ள வீடுகள் மீதும் நீரை வாரியிறைத்து நனைப்பர். அதாவது அடுத்தடுத்துள்ள வீடுகளின் வெப்பநிலை பற்றும் தன்மையைக் குறைத்து தீ பரவாமல் தடுக்கும் ஏற்பாடு இது.

Advertisement

Advertisement

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்பாட்டை இவ்வாறே பார்க்க இயலும். வயது வந்து கல்வியை முடித்தபின்னர் சமூக ஊடகங்களில் அதிகமான நேரத்தைப் போக்குவதே தவறு என்ற நிலையில் குழந்தைப் பருவம் முதலே சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவழிப்பது எவ்வாறு சரியாக இருக்கும்? எனவே, கற்கும் வயதில் கல்வியில் மட்டும் ஈடுபட இந்த ஏற்பாடு உதவும் என அவர்கள் நம்புகின்றனர். ஆனாலும், இவ்வாறான ஏற்பாடுகளால் மட்டும் சமூக ஊடகப் பயன்பாட்டை கட்டுப்படுத்த இயலுமா என்பது கேள்விக்குறியே. சாலையில் வாகனங்களை ஓட்டிச் செல்லும் இளையோரில் எத்தனை நபர்கள் வண்டிகளை ஓட்டுவதற்கான தகுதியான வயதை அடைந்திருப்பர்?, எத்தனை நபர்கள் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களாக இருப்பர் என்பதை வைத்தே இதைப் புரிந்துகொள்ள இயலும்.

ஆக, பெரியவர்களும் சமூகமும் முன்மாதிரியாக நடந்துகொள்வது என்பதுதான் தீர்வு. அப்படியானால், இந்த சட்ட முன் வரைவால் பயனேதும் விளையாதா என்ற கேள்வி எழுவது இயல்பானது. ஆனால், அப்படியல்ல, அரசு என்பது வலிமையான ஒரு நிறுவனம். அது நினைத்தால் எதையும் சாதிக்க இயலும். கரோனா காலத்தில் உலகமே இயங்காமல் நிறுத்தியதை நினைத்துப் பார்த்தால் அரசின் வலிமை புரியும். அரசின் விருப்புறுதியுடன் பொதுமக்களின் ஆர்வமும் அக்கறையும் முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்துள்ள சட்ட முன்வரைவின்படி, 13 வயதுக்கு கீழே உள்ள எவரும் எவ்வகையான சமூக ஊடகக் கணக்கையும் உருவாக்க இயலாது. 14, 15 வயது உள்ளவர்களுக்கும் தனிப்பட்ட கணக்கு கிடையாது. பெற்றோருடன் இணைந்தே உருவாக்கிக்கொள்ள இயலும். சிறு கணக்கு என்ற வகையில் அது இருக்கும். இந்தக் கணக்கையும் பெற்றோரின் மேற்பார்வையில் சிறிய அளவிலான தொடர்பு அம்சங்கள் கொண்டு இயங்குவதாக மட்டுமே இருக்கும். மேலும், இந்தக் கணக்குகள் நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் தானாகவே செயல்படும் தன்மையை இழந்து விடும். மீண்டும் அடுத்த நாளில்தான் செயல்படும்.

இது ஒரு வரவேற்கக் கூடிய அம்சம். அனைத்து சமூக ஊடக நிறுவனங்களும் தாங்கள் 13 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கு கணக்குகளைத் தொடங்க அனுமதிப்பதில்லை என்றே வாதிடுகின்றன. ஆனால், நடைமுறையில் பல பெரியவர்களின் கணக்கை நிர்வகிப்பவர்களாக குழந்தைகளே உள்ளனர்.சட்ட நிபுணர்களும் இணையதள நிபுணர்களும் இதுபோன்ற சட்டங்களை நிறைவேற்றுவது சாத்தியமா? சமூக ஊடகங்களில் உலவுவோர் அனைவருமே அவரவர் சொந்தக் கணக்கில் உலவுவதை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்ற கேள்வியை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.

அதுவும் செயற்கை நுண்ணறிவு யுகத்தில் எல்லாவிதமான கட்டுப்பாட்டு மீறலும் சாத்தியமே. குழந்தைகளுக்கான இந்தப் புதிய சட்ட முன்வரைவு சமூக ஊடக நிறுவனங்களின் பொறுப்பையும் கூட்டுகிறது. இதுவரை தனிப்பட்ட பயனாளர்கள் தங்களது வயதைக் கொண்டு சமூக ஊடகக் கணக்குகளை உருவாக்கிக் கொள்கின்றனர். எனவே, எங்களுக்கு இதில் எந்தப் பொறுப்பும் இல்லை என்று சமூக ஊடக நிறுவனங்கள் கூறி வருகின்றன. இனிமேல் இது மாறும்.

சமூக ஊடக நிறுவனங்கள் தாங்கள் இளையோர் இயங்கத் தகுதியானவர்கள்தான், பாதுகாப்பானவர்கள்தான் என்பதை நிரூபிக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட உள்ளன. சமூக ஊடக நிறுவனங்களின் செல்வாக்கால் இவை எல்லாம் நடைமுறைச் சாத்தியமாகாது என்று பலரும் வாதிடுகின்றனர். இந்த வரைவு சட்டமானது பல்வேறு விவாதங்களுக்கு பிறகுதான் சட்டமாகும் என்றாலும், இது வரவேற்கக் கூடியது.

15 வயதுக்குட்பட்டவருக்கான சமூக ஊடகப் பயன்பாட்டை ஏற்கெனவே பிரான்ஸ் தடை செய்துள்ளது. ஆனால், இந்தத் தடையானது அங்கு நிலவும் சில சட்டச் சிக்கல்களால் செயல்படுத்த முடியாததாகியுள்ளது. ஆனால் ஸ்பெயின், டென்மார்க், ஸ்வீடன் போன்ற நாடுகள் தொடர்ந்து தடையை அமல்படுத்தி வருகின்றன.

நிலவைக் காட்டி சோறூட்டிய நம் தாய்மார்கள் கைப்பேசியைக் காட்டி தொடங்கியபோதே விழித்திருக்க வேண்டிய இந்தியா போன்ற நாடுகளில் இதுபோன்ற விவாதங்கள் அதிகரிக்க வேண்டும். குடும்பங்களில் ஆளுக்கொரு வங்கிக் கணக்கு இருக்கிறதோ, இல்லையோ சமூக ஊடகக் கணக்கு இருக்கிறது. பெரியவர்களுக்கு இருப்பது சிறியவர்களுக்கும் பொதுவானதாக இருக்கிறது. இதை உணர்வது அவசர அவசியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments