முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

அறிவியல் ஆயிரம்: முதுமை - உடலில் நிகழும் மாற்றங்கள் என்ன? உடல் வலிமை ஏன் குறைகிறது?

முதுமையில் உடலில் நிகழும் மாற்றங்கள், முதுமையிலும் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி...

Updated On : 6 ஜூலை 2026, 5:45 pm IST
கோப்புப் படம் - ENS
பகிர்:

வயதாவது என்றால் என்ன?

வயதாவது என்பது உடலின் செல்கள், உறுப்புகளின் செயல்திறன் காலப்போக்கில் குறைவதைக் குறிக்கிறது. இது ஓர் இயற்கையான உயிரியல் செயல்முறை ஆகும்.

மனிதர்களில் முதுமை என்பது உடலியல் செயல்பாடுகளின் படிப்படியான, காலப்போக்கில் ஏற்படும் சிதைவு ஆகும். இது காலப்போக்கில் மூலக்கூறு, மரபணு, செல் சேதங்கள் குவிவதால் ஏற்படும் ஓர் இயற்கையான வாழ்க்கைச் செயல்முறை. இது உடல், மனத் திறனைக் குறைத்து, நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது

Advertisement

Advertisement

உடலுக்குள் புதுப்பிக்கப்படும் செல்கள் என்ன?

மனித உடல் தினமும் சுமார் 330 பில்லியன் செல்களைப் புதுப்பிக்கிறது. இதன் மூலம் சராசரியாக ஒவ்வொரு 7-10 வருடங்களுக்குள், ஒரு முழுமையான செல் புதுப்பித்தல் /மாற்றம் நடைபெறுகிறது. இருப்பினும், அவை ஒவ்வொன்றின் ஆயுள்காலமும், புதுப்பித்தல் விகிதமும், தன்மையும் பெருமளவில் வேறுபடுகின்றன. சில செல்கள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் அதே வேளையில், மற்ற செல்கள்தொடர்ச்சியான மாற்றத்திற்கு உள்ளாகின்றன.

மனித உடலில் உள்ள செல்கள் தொடர்ந்து இறந்து, புதிய செல்களால் மாற்றப்படுகின்றன (செல் புதுப்பித்தல்). ஒவ்வொரு வகை செல்லும் வெவ்வேறு வாழ்நாளைக் கொண்டுள்ளது. சராசரியாக, ஒரு மனிதனின் உடலிலுள்ள அனைத்து செல்களும் முழுமையாகப் புதுப்பிக்கப்பட 7 முதல் 10 ஆண்டுகள் ஆகலாம்.

உடலின் முக்கிய செல்கள், உத்தேச வாழ்நாள் விவரங்கள்:

1. இரைப்பை / குடல் உட்சுவர் - 5 முதல் 7 நாள்கள்

உணவைச் செரிக்கும் திசுக்கள் மிகவும் வேகமாகத் தேய்ந்து புதுப்பிக்கப்படுகின்றன.

2. தோல் - 2 முதல் 4 வாரங்கள்

உடலின் வெளிப்புறப் பாதுகாப்பு அடுக்கு தொடர்ந்து ,தினமும் உதிர்ந்து புதிய செல்கள் உருவாகின்றன.

3. சுவை மொட்டுகள் (Taste Buds) - 10 முதல் 14 நாள்கள்

சுவையை அறிய உதவும் செல்கள் விரைவாக மாறும்.

4. சிவப்பு ரத்த அணுக்கள் (RBCs) - சுமார் 120 நாள்கள்

ஆக்சிஜனை உடலின் பாகங்களுக்கு எடுத்துச் செல்லும்.

5. வெள்ளை ரத்த அணுக்கள் (WBC) - சில மணி நேரங்கள் முதல் 7 நாள்கள் வரை

நோய்க்கிருமிகளுடன் போராடும் செல்கள் ஆவதால், அடிக்கடி இறந்து போகின்றன.

6. கல்லீரல் - 300 முதல் 500 நாள்கள் வரை (1 - 1.5 ஆண்டுகள்)

உடலின் நச்சுக்களை நீக்கும் உறுப்பு தன்னைத் தானே புதுப்பிக்கும் திறன் கொண்டது.

7. எலும்பு செல்கள் - சுமார் 10 ஆண்டுகள்

எலும்புகள் பழைய செல்களை அகற்றிவிட்டு புதிய செல்களை உருவாக்கும்.

எவை எவை புதுப்பிக்கப்படுவதில்லை?

மூளை செல்கள் (Neurons): பிறக்கும்போது இருக்கும் மூளை செல்கள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கிறது. பொதுவாக இவை புதுப்பிக்கப்படுவதில்லை.

 கண் லென்ஸ்: கண்களின் லென்ஸ்கள் ஒருமுறை உருவானால் அவை வாழ்நாள் முழுவதும் மாற்றப்படுவதில்லை.

 ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு ஆகியவை இந்த செல்கள் தொடர்ந்து ஆரோக்கியமாகப் புதுப்பிக்கப்பட பெரிதும் உதவுகின்றன.

முதுமையின் முக்கிய பரிமாணங்கள்

முதுமை என்பது ஒரு வயது வந்தவரின் வாழ்நாளில் நிகழும் மூன்று முதன்மை மாற்றங்களை உள்ளடக்கியது.

உடல் ரீதியானவை: உறுப்புகளின் செயல்பாடு குறைதல், எலும்பு அடர்த்தி குறைதல், தசை நிறை இழப்பு, மற்றும் சுருக்கங்கள், நரை முடி போன்ற புலப்படும் அறிகுறிகள்.

மூலக்கூறுகள், நுண்ணுயிரிகளில் ஏற்படும் முக்கிய உயிரியல் மாற்றங்கள், குறிப்பாக 44 முதல் 60 வயது வரையிலான காலகட்டத்தில், திடீரென நிகழ்கின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

உளவியல் ரீதியாக: எதிர்வினை புரியும் நேரம் குறைதல், செயலாக்க வேகத்தில் மாற்றங்கள் ஏற்படுதல்; இருப்பினும், ஞானம், பொது அறிவு,சொல்லறிவு பொதுவாக மேம்படுகின்றன.

சமூகம்: ஓய்வு பெறுதல், வசிப்பிட மாற்றங்கள், உறவுகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற முக்கிய வாழ்க்கை மாற்றங்கள்

உயிரியல் காரணங்கள்

நுண்ணிய மட்டத்தில், விஞ்ஞானிகள் முதுமையடைவதற்குக் காரணமான பல காரணிகளைக் குறிப்பிடுகின்றனர். இவை பெரும்பாலும் "முதுமையின் அடையாளங்கள்" என்று அழைக்கப்படுகின்றன. அவையாவன:

உயிரணு முதுமை: செல்கள் பிரிவதையும் அல்லது உகந்த முறையில் செயல்படுவதையும் நிறுத்திவிடுகின்றன, மேலும் தண்டு செல்களை மீளுருவாக்கம் செய்யும் உடலின் திறனும் குறைகிறது.

புரதங்கள், டி.என்.ஏ-விற்கு வாழ்நாள் முழுவதும் ஏற்படும் சேதங்களின் திரட்சி (புரதச் சமநிலை இழப்பு).

வயது தொடர்பான நோய்களுடன் தொடர்புடைய ஒரு நாள்பட்ட, மிதமான அழற்சி நிலை ஏற்படுகிறது.இது சில சமயங்களில் 'அழற்சி முதுமை' (inflammaging)என்றும் அழைக்கப்படுகிறது

மாறுபடும் முதுமை நிலை

சுருக்கங்கள் அல்லது செயல்திறன் வீழ்ச்சி போன்ற முதுமையின் பொதுவான அறிகுறிகள், சுமார் 20 வயதிலேயே தென்படத் தொடங்கலாம் 'நமது உடல்களில் வயதாகும்போது என்ன நிகழ்கிறது?' ஒவ்வொருவரின் முதிர்வு விகிதமும் சுற்றுச்சூழல் காரணிகள் மற்றும் மரபியல் முன்னேற்பாட்டால் மாறுபடும்.

நாம் வயதாகும்போது உடலில் மாற்றங்கள்..:

முதுமையின் வெளிப்படையான அடையாளங்கள் பரிச்சயமானவை...

 முகத்தில், உடலில் தோன்றும் சுருக்கங்கள்.

 நரைமுடிகள்.

 பார்வை மெல்ல மங்கும்

 முதுமை என்பது தோலில் மட்டும் நிகழ்வதல்ல.

 நமது உடலின் உள்புற உறுப்புகளும் அமைதியாக மாற்றமடைந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் செயல்திறன் படிப்படியாகக் குறைகிறது.

 மனித உடலில் முதுமையின் முதல் அடையாளங்கள் இருபது வயதிலேயே தோன்ற ஆரம்பிக்கலாம்.

முடி ஏன் நரைக்கிறது?

முடிக்கு நிறம் அளிக்கும் மெலனின் (Melanin) என்ற நிறமிப் பொருளின் உற்பத்தி, வயது ஆக ஆகக் குறைந்து, இறுதியில் முற்றிலும் நின்றுவிடுகிறது. இதன் விளைவாக முடி தனது இயல்பான நிறத்தை இழந்து நரைக்கத் தொடங்குகிறது.

போகப் போகத் தெரியும்? தோலில் சுருக்கங்கள்?

இளமையான தோலின் நெகிழ்வுத் தன்மைக்கு காரணமானவை:

 கொலாஜன் (Collagen)

 எலாஸ்டின் (Elastin)

 ஹயலுரோனிக் அமிலம் (Hyaluronic Acid) ஆகிய பொருள்களின் அளவு வயதுடன் குறைகிறது. இதனால் தோல் தனது இழுவைத் தன்மையை இழந்து, சுருக்கங்கள் தென்பட ஆரம்பிக்கின்றன.

கேட்கும் திறன் பாதிக்கப்படுவது எவ்வாறு? உள் காதின் ஒரு பகுதியாக இருக்கும் க்ளியா (Cochlea)வில் உள்ள நுண்ணிய முடி உயிரணுக்களின் எண்ணிக்கை, வயதாவதால் குறைகிறது. இதனால் குறிப்பாக உயர்ந்த அதிர்வெண் கொண்ட ஒலிகளைக் கேட்பது கடினமாகிறது.

பார்வையில் மாற்றங்கள்

வயது அதிகரிக்கும்போது கண் லென்ஸ் தடிமனாகி அதன் நெகிழ்வுத் தன்மையை இழக்கிறது. இதனால் கண் அருகிலுள்ள பொருள்களுக்குத் தன்னைச் சரிசெய்துக் கொள்ளும் திறன் (Accommodation) குறைகிறது. இதுவே முதுமைப் பார்வைக் குறைபாடு (Presbyopia) எனப்படுகிறது. இதன் காரணமாக சிறிய எழுத்துக்களை வாசிப்பது சிரமமாகிறது.

மூட்டுகள் எலும்புகளில் மாற்றங்கள்

முப்பது வயதிற்குப் பிறகு:

• குருத்தெலும்புகளின் நெகிழ்வுத் தன்மை குறைகிறது.

• மூட்டுகள் விறைப்பாகின்றன.

• சில அசைவுகள் சிரமமாகின்றன.

அதே நேரத்தில், முதுகெலும்புகளுக்கு இடையில் இருக்கும் இடைமுதுகுத் தட்டுகள் (Intervertebral Discs) மெல்ல மெல்ல மெலிதாகின்றன. எலும்புகளை உருவாக்கும் வேகத்தைவிட அவை சிதைவடையும் வேகம் அதிகரிக்கிறது.

இதனால் எலும்பு அடர்த்தி குறைகிறது. எலும்பு முறிவுகளுக்கான அபாயம் அதிகரிக்கிறது.

மூளையில் நிகழ்வு மாற்றம்...

 40- 50 வயதிற்குள் மூளை, தனது நிறையை மெல்ல இழக்கத் தொடங்குகிறது.

 இதனால் நரம்புச் செய்தி பரிமாற்றம் மந்தமாகிறது. நினைவாற்றல், சிந்தனைத் திறனில் படிப்படியான வீழ்ச்சி ஏற்படலாம்.

உடல் சக்தி ஏன் குறைகிறது?

நுரையீரல்களில் உள்ள ஆல்வியோலை (Alveoli) எனப்படும் காற்றுப் பைகளின் எண்ணிக்கை குறைகிறது.

இதன் விளைவாக:

 நுரையீரல் கொள்ளளவு குறைகிறது.

 ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைகிறது.

 உடல் சக்தி மற்றும் சகிப்புத்தன்மை குறைகிறது.

 தசைகள், இதயம்,ஆகியவை நாற்பது வயதிற்கு அருகில் தசை நிறை குறையத் தொடங்குகிறது.

 உடலில் கொழுப்பு விகிதம் அதிகரிக்கிறது.

 ரத்த நாளங்களில் கால்சியம் படிவதால் அவை கடினமடைகின்றன. இதனால் ரத்த அழுத்தம் உயரும். இதயத்தின் வேலைப்பளு அதிகரிக்கும்.

 இதயத் தசை உயிரணுக்களின் எண்ணிக்கை குறைந்து, இணைப்புத் திசுக்கள் அதிகரிப்பதால் இதயத்தின் செயல்திறனும் குறைகிறது.

கல்லீரல், சிறுநீரகங்கள்

வயதாவதுடன, கல்லீரல், சிறுநீரகங்கள்ஆகிய உறுப்புகளின் செயல்திறன் குறைகிறது. இதனால் உடலில் உருவாகும் கழிவுப் பொருள்கள் மற்றும் நச்சுப் பொருள்களை அகற்றும் செயல்முறை மெதுவாகிறது.

சிறுநீர்ப்பை, இனப்பெருக்க திறன்

சிறுநீர்ப்பை தனது நெகிழ்வுத் தன்மையை இழக்கிறது. இதனால்:

 அதிகமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது.

 சிறுநீர்ப்பை முழுமையாக காலியாகாமல் மீதமிருக்கும்.

 பெண்களில் இருபதுகளின் இறுதிப் பகுதியில் இருந்தே கருவுறும் திறன் குறையத் தொடங்குகிறது.

 முப்பத்தைந்து வயதிற்குப் பிறகு இந்த வீழ்ச்சி வேகமாகிறது.

 ஆண்களில் நாற்பது வயதிலிருந்து டெஸ்டோஸ்டிரோன் அளவு குறையத் தொடங்குகிறது.

 விந்தணுக்களின் இயக்கத் திறன் குறைகிறது.

நோய் எதிர்ப்புத் திறன்:

வயதுடன் குறிப்பிட்ட நோய் எதிர்ப்பு உயிரணுக்களின் உற்பத்தி குறைகிறது. இதனால் தொற்றுநோய்களை எதிர்க்கும் திறன் குறைகிறது. உடல் மீளும் வேகம் மந்தமாகிறது.

வயது தொடர்பான நோய்கள்:

உறுப்புகளின் செயல்திறன் குறைவதால் பல நோய்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. அவற்றில் முக்கியமானவை:

 அல்சைமர் உள்ளிட்ட மறதி நோய்கள்

 பார்கின்சன் நோய்

 இதய, ரத்த நாள நோய்கள்

 புற்றுநோய்

முதுமையிலும் ஆரோக்கியமாக இருப்பது எப்படி? எது?

முதுமையை முழுமையாகத் தடுக்க முடியாது. ஆனால் ஆரோக்கியமான முதுமையை உருவாக்க முடியும்.

பல அறிவியல் ஆய்வுகள் கூறுவதாவது: முதுமையில் ஆரோக்கியமாக இருக்க செய்ய வேண்டியவை

 சமநிலையான உணவு

 போதுமான தூக்கம்

 வழக்கமான உடற்பயிற்சி (இதய பாதுகாப்பு )

 போதுமான நடைபயிற்சி (இதய பாதுகாப்பு )

 தாய்சி பயிற்சி (இதய பாதுகாப்பு )

 சமூக உறவுகள்

 குடும்ப ஆதரவு

மேலே குறிப்பிடப்பட்ட செயல்களைத் தொடர்ந்து விடாமல் செய்தால், ஒருவர் முதுமை ஏற்பட்ட நிலையிலும், பிரச்னை இன்றி மகிழ்வாக வாழ்க்கையை நடத்தத் முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கினறன. இது நிதர்சனமான உண்மை என்பதை பலர் வாழ்க்கையில் கண்கூடாகக் காண்கிறோம். (உதாரணம்: எனக்கு 79 வயது ஆனாலும், நல்ல ஆரோக்கியமான நிலையில் சோர்வின்றி இருக்கிறேன். உடற்பயிற்சி, நடைபயிற்சி, தாய்சிப் பயிற்சி செய்வதால் ஆரோக்கிய உணவு உண்பதால் தொடர்ந்து செயல்படுவதால் ஆரோக்கியமாக இருக்க முடிகிறது)

தீங்கு விளைவிப்பவை

நீடித்த மனஅழுத்தம், புகைப்பிடித்தல், மது அருந்துதல்

மத்திய தரைக் கடல் உணவு முறை – ஆரோக்கியமான முதுமைக்கான ஒரு வழிகாட்டி மத்திய தரைக் கடல் உணவு முறை (Mediterranean Diet) ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்கான ஒரு சிறந்த முன்திரியாக உள்ளது.

அவையாவன:

 குறைந்த அளவு இறைச்சி

 அதிகளவு பழங்கள்

 காய்கறிகள்

 பருப்புகள் மற்றும் நட்ஸ் (கொட்டைகள்)

 மீன்

 ஆலிவ் எண்ணெய்

ஆய்வுகள் காட்டுவது

 இந்த உணவு முறை குடலில் வாழும் நுண்ணுயிரிகளின் அமைப்பை ஆரோக்கியமான திசையில் மாற்றுகிறது.

 இதனால் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் குறைகின்றன. நன்மை பயக்கும்பாக்டீரியாக்கள் அதிகரிக்கின்றன.

 மேலும் செல்பிரிதலின்போது குரோமோசோமில் உருவாகும் லோமியர்கள் நீளமாகவும் சீராகவும் இருக்கும். உடலின் அழற்சி குறியீடுகள் குறைகின்றன.

 அதோடு நீரிழிவு, இதய நோய்கள் போன்ற நீடித்த நோய்களின் அபாயமும் குறைகிறது.

மறக்கப்பட்ட ஓர் உறுப்பு: ஆயுளைக் கணிக்கும் தைமஸ்

பல பத்தாண்டுகளாக அறிவியல் உலகின் கவனம் முழுமையாகச் செலுத்தப்படாத ஒரு சிறிய உறுப்பு தைமஸ். இது இப்போது மீண்டும் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒரு காலத்தில் குழந்தைப் பருவத்திற்குப் பிறகு பெரிதாகப் பயன்படாத உறுப்பாகக் கருதப்பட்ட தைமஸ், உண்மையில் மனிதனின் ஆயுள், நோய் அபாயம் மற்றும் புற்றுநோய் சிகிச்சை வெற்றி ஆகியவற்றை முன்னறிவிக்கும் முக்கியக் குறியீடாக இருக்கக் கூடும் என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2026 ஆம் ஆண்டு ஜூன் 1 அன்று வெளியிடப்பட்ட ஆய்வுகளில், ஆயிரக்கணக்கான மக்களின் சிடி ஸ்கேன்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆய்வு செய்த விஞ்ஞானிகள், ஆரோக்கியமான தைமஸ் கொண்டவர்கள்:

• நீண்ட காலம் வாழ்ந்தனர்.

• இதய நோய் அபாயம் குறைவாக இருந்தது.

• புற்றுநோய் அபாயம் குறைவாக இருந்தது.

• புற்றுநோய் எதிர்ப்பு நோய் எதிர்ப்பு சிகிச்சைகளுக்கு (Immunotherapy) சிறப்பாகப் பதிலளித்தனர்.

தைமஸின் பணி

 மார்புப் பகுதியில் அமைந்துள்ள தைமஸ், டி -செல்கள் எனப்படும் நோய் எதிர்ப்பு உயிரணுக்களைப் பயிற்றுவிக்கும் மையமாக செயல்படுகிறது.

 இந்த டி-செல்கள்,தொற்றுகளை எதிர்க்கின்றன. புற்றுநோய் உயிரணுக்களை அடையாளம் காண்கின்றன. உடலைப் பாதுகாக்கின்றன.

டி-செல்கள்:

• தொற்றுகளை எதிர்க்கின்றன.

• புற்றுநோய் உயிரணுக்களை அடையாளம் காண்கின்றன.

• உடலைப் பாதுகாக்கின்றன.

பாலியல் முதிர்ச்சிக்குப் பிறகு தைமஸ் சுருங்கத் தொடங்குவதால், அது முக்கியமற்றதாகக் கருதப்பட்டது. ஆனால் புதிய ஆய்வுகள் அந்த நம்பிக்கையை சவாலுக்கு உட்படுத்துகின்றன.

ஆய்வின் அதிர்ச்சி தரும் கண்டுபிடிப்புகள்:

ஆரோக்கியமான தைமஸ் கொண்டவர்களில்:

• அனைத்து காரணங்களாலும் ஏற்படும் இறப்பு அபாயம் சுமார் 50% குறைவாக இருந்தது.

• இதய நோயால் மரணமடையும் அபாயம் 63% குறைவாக இருந்தது.

• நுரையீரல் புற்றுநோய் அபாயம் 36% குறைவாக இருந்தது.

தைமஸை பாதிக்கும் காரணிகள்: ஆய்வாளர்கள் கண்டறிந்த காரணிகள்:

• நீடித்த அழற்சி

• புகைப்பிடித்தல்

• அதிக உடல் எடை இவை அனைத்தும் தைமஸ் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடும்.

எதிர்காலத்தின் புதிய வாயில்:

"ஏன் சிலர் மற்றவர்களை விட ஆரோக்கியமாக முதுமையடைகிறார்கள்?" என்ற கேள்விக்கான விடையில் தைமஸ் முக்கியப் பங்காற்றக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

தைமஸின் ஆரோக்கியத்தைப் புரிந்துகொள்வதும், கண்காணிப்பதும், எதிர்காலத்தில்:

• நோய் அபாயத்தை மதிப்பிட,

• புற்றுநோய் சிகிச்சைகளைத் தேர்வு செய்ய,

• ஆரோக்கியமான முதுமையை ஊக்குவிக்க

மருத்துவர்களுக்கு புதிய கருவியாக அமையக் கூடும்.

மனித வாழ்வு ஒரு நதியைப் போன்றது. பிறப்பில் பெருக்கெடுத்து ஓடும் அந்த நதி, காலத்தின் கரைகளை மெதுவாகத் தொட்டு மாற்றமடைந்து செல்லும். முதுமை என்பது அந்த நதியின் முடிவு அல்ல; அது அதன் இயல்பான பயணம். ஆனால் அறிவியல் நமக்குக் கற்றுத் தருவது என்னவெனில், அந்தப் பயணம் எவ்வளவு ஆரோக்கியமாகவும், நீண்டதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்பதைக் தீர்மானிப்பதில் நமது வாழ்க்கை முறைக்கும் உடலின் மறைந்துள்ள உயிரியல் அமைப்புகளுக்கும் மிகப் பெரிய பங்கு உண்டு.

[கட்டுரையாளர் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் மாநிலத் தலைவர்]

summary

Science: Aging – What changes occur in the body, what to do for healthy aging

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments