முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

கர்நாடக இசையை வீதிகளில் சேர்த்த இளையராஜா!

இளையராஜா இசையமைத்த சிந்து பைரவி படத்தின் பாடல்கள் பற்றி...

Updated On : 2 ஜூன் 2026, 4:55 pm IST
இளையராஜா
பகிர்:

இளையராஜாவின் இசை மேதைமை மற்றும் நுணுக்கங்களைப் பற்றி குறிப்பிட்டு எழுத அவரின் மொத்த இசைக் களஞ்சியத்தையும் கேட்டு லயித்திருக்க வேண்டும். அவர் இசையமைத்த ஒவ்வொரு திரைப்பட ஆல்பம் மற்றும் அதிலுள்ள பாடல்களைப் பற்றியும் தனித்தனியே எழுத வேண்டுமென்றால் வற்றாத ஊற்றைப் போல அது ஊறிக்கொண்டேயிருக்கும். 

இயக்குநர் சுந்தரராஜன், ராஜாவிடம் வாங்கிய 5 பாடல்களை இடம்பெறச் செய்யவே வைதேகி காத்திருந்தாள் படக் கதையை  எழுதியதாக பேட்டி ஒன்றில் கூறியிருப்பார். இதுபோன்று, ராஜாவின் பாடல்களால் மட்டுமே உயிர்பெற்ற பல படங்கள் உண்டு. அதனை அவரைத் தவிர வேறு யாராலும் நிகழ்த்தியிருக்க முடியாது என உறுதியாகச் சொல்லலாம். 

உலகின் மேம்பட்ட இசை ரசனை கொண்ட மக்கள் கூட்டத்தை ராஜா வளர்த்தெடுத்துள்ளார் என்பதை நாமும் நம் சந்ததியினரும் பெருமையாகச் சொல்லிக் கொள்ளும்படியான காலத்தில் வாழ்கிறோம். இளையராஜா பல நூறு இயக்குநர்களுடன் பணியாற்றியுள்ளார். அதில், குறிப்பிடத்தக்க சில இயக்குநர்களில் முக்கியமானவர் பாலச்சந்தர். தனது படங்களின் இசைக்கு எம்.எஸ்.வி.-யை மட்டுமே பயன்படுத்துபவர் முதல்முறையாக இளையராஜாவுடன் இணைந்தது ‘சிந்து பைரவி’ படத்திற்காக.

Advertisement

Advertisement

சிந்து பைரவி படத்தில் கர்நாடக இசை மேதையான ஜே.கே.பி. (சிவக்குமார்) திருமண பந்தத்தை மீறி தனது ரசிகையான சிந்துவுடன் (சுஹாசினி) காதல் வயப்படுவார். இதனால், மனைவி பைரவியுடன் ஏற்படும் பிணக்குகள், அந்தப் பிறழ் உறவு காரணமாக தனது கலை வாழ்க்கையில் வீழ்ச்சியை சந்தித்து அதிலிருந்து எப்படி மீளுகிறார் என்று படத்தின் கதையை பாலச்சந்தர் அமைத்திருப்பார். 

கர்நாடக இசையில் சில மீறல்களைச் செய்து பாமர மக்களும் அதனை ரசிக்கும் விதத்தில் இளையராஜா சில மாயாஜாலங்களை இப்படத்தின் பாடல்களில் நிகழ்த்திக் காட்டியிருப்பார். கர்நாடக இசையில் அமைந்த அனைத்துப் பாடல்களின் ராகம் மூலம் அதுபற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம்.

1. மஹா கணபதிம்

இப்படத்தின் முதல் பாடலான ‘மஹா கணபதிம்’ நாட்டை ராகத்தில் பாடப்பட்டிருக்கும். படத்தில் மிருதங்கம் வித்வானான தில்லி கணேஷ் குடிபோதையில் வந்ததால் அவரைத் துரத்திவிட்டு சிவக்குமார் மிருதங்கம் இன்றி இப்பாடலைப் பாடுவார். 

இப்பாடலுக்கு வழக்கமாகப் பயன்படுத்தப்படும் மிருதங்கத்தைத் தவிர்த்து வயலினைப் பயன்படுத்தி ஜேசுதாஸ் குரலில் பாடலை மெருகேற்றியிருப்பார் ராஜா.


2. மரி மரி நின்னே 

கர்நாடக இசையின் மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் கீர்த்தனையான இப்பாடல் அதன் மூலத்தில் காம்போதி ராகத்தில் பாடப்பட்டிருக்கும். தியாகராஜரின் கீர்த்தனைகளைப் பாடும் எவரும் அது எவ்வாறு இயற்றப்பட்டதோ அந்த ராகத்தில் மட்டுமே பாடுவர். 

ஆனால், ராஜா அப்படியானவர் இல்லையே! இதில்தான் தனது இசை நுணுக்கங்களை வெளிப்படுத்தியிருப்பார் அவர். சாரமதி ராகத்தில் இந்தப் பாட்டை அமைத்து ஜேசுதாஸ் குரலில் தியாகராஜரின் கீர்த்தனைகளைத் தன் இசைக்கு ஏற்றவாறு மாற்றியமைத்திருப்பார். 

இது அப்போதை சங்கீத மேதைகளிடம் எதிர்ப்பைப் பெற்றதாகச் செய்திகள் உண்டு. இளையராஜா, இசையில் கலகக்காரனாக வெளிப்பட்ட இடங்களில் இதுவும் ஒன்று. 

3. பாடறியேன் படிப்பறியேன்

முந்தைய பாடல் மக்களுக்குப் புரியும் வகையில் இருந்தால் நன்றாக இருக்கும் என படத்தில் வரும் சிந்து (சுஹாசினி) கேட்க, அதற்கு சிந்துவையே பாடச் சொல்வார் ஜே.கே.பி. (சிவக்குமார்). 

அப்போது அவர் அதே சாரமதி ராகத்தில் ‘பாடறியேன் படிப்பறியேன்’ பாடலைப் பாடுவார். இது கர்நாடக சங்கீதத்தை நாட்டுப்புற இசையுடன் கலந்து பாடியப் பாடலாகும். இந்தப் பாடலும் சர்ச்சையை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த இடத்தில் பாடலின் மீறல் படத்தின் கதாபாத்திரங்களின் உறவு சார்ந்த மீறலுக்கான தொடக்கமாக அமையும். இப்பாடலைப் பாடியதற்காக பாடகர் சித்ராவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

4. மனதில் உறுதி வேண்டும்

கர்நாடக இசையை மக்களுக்கு புரியும் விதமாகப் பாடும்படி சிந்து கேட்டதையொட்டி பாரதியாரின் இந்தப் பாடலை கடற்கரையில் அமர்ந்து ஜே.கே.பி. கடலின் ஓசையைத் தாளமாக்கி பாடுவார். இதனை அருகிருந்து கேட்கும் ஒரு மீனவர் சங்கு மாலையை சே.கே.பி.க்கும் பரிசாக வழங்குவார். கர்நாடக இசை பாமரரைப் போய் சேர்வதாக இக்காட்சி அமைக்கப்பட்டிருக்கும். ஜேசுதாஸ் குரலில் இளையராஜா இப்பாடலை திலங் ராகத்தில் அமைத்திருப்பார். 

5. நானொரு சிந்து 

’சிந்து பைரவி’ ராகம் பொதுவாக கருணை, சோகம், உருகுதல் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒன்றாகவுள்ளது. இப்பாடல் படத்தில் பல ஆண்டுகளுக்கு முன் இழந்த தனது தாயைப் பார்த்த கனத்தில் சிந்து பாடுவதாக அமைந்திருக்கும். சோகமும், ஏக்கமும் பரவிய இப்பாடலை சித்ரா பாடியிருப்பார்.

6. மோகம் என்னும் தீயில்

ஜேசுதாஸ் குரலில் கனகாங்கி ராகத்தில் இப்பாடல் அமைக்கப்பட்டிருக்கும். விவாதி ராகங்கள் எனக் கூறப்படும் இந்த வகை ராகங்கள் பாடல்கள் அமைக்க ஏதுவானதில்லை. 

இந்த ராகத்திலும் பாடல் அமைத்து அதனை அனைவரும் கேட்டு ரசிக்கும்படி செய்ய ராஜாவால் மட்டுமே முடியும். 

படத்தில் ஜே.கே.பி. தனது ரசிகையின் மீது காதல் வயப்பட்டு அது மோகத்தை நோக்கிச் செல்கையில் அதனைத் தவிர்க்க இப்பாடலை கொந்தளிக்கும் கடலின் முன் பாடுவார்.

இளையராஜாவைத் தவிர திரையில் அவரும் இந்த ராகத்தைப் பயன்படுத்தி பாட்டு அமைத்ததில்லை.

7. பூமாலை வாங்கி வந்தான்

ஜே.கே.பி. சிந்துவின் பிரிவைத் தாங்காமல் மது அருந்திவிட்டு இசைக் கச்சேரிக்கு சென்று இப்பாடலைப் பாடுவதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும். 

ஒரு கலைஞனின் வீழ்ச்சியை தமிழ்த் திரையுலகில் இந்தப் பாடல் அளவிற்கு அழுத்தமாகக் கூறிய பாடல்கள் இல்லை எனலாம். அந்தளவுக்கு கலைஞனின் உறவு சார்ந்த மனச்சிக்கலையும், அவனின் துயரையும் இசையாலும் வரிகளாலும் இப்பாடல் உணர்த்தியிருக்கும். 

கானடா ராகத்தில் இப்பாடலை அமைத்திருப்பார் ராஜா. ஜேசுதாஸின் குரலில் மென்சோகத்தையும், இரக்கத்தையும் தூண்டும் விதத்தில் இப்பாடலின் இசை அமைந்திருக்கும். 

8. தண்ணி தொட்டி

ஜே.கே.பி. மதுபழக்கத்திற்கு அடிமையாகி, கிளப் வைத்திருக்கும் அவரது ரசிகரிடம் விஸ்கி கேட்டுச் செல்வார். பதிலுக்கு அவரோ டப்பாங்குத்து பாடல் பாடச் சொல்ல இப்பாடலை ஜே.கே.பி.  பாடுவார். பாடலின் துள்ளலை மீறி அந்தக் கலைஞனின் நிலைமை சோகத்தை தூண்டுவதாகவே இருக்கும். 

காபி ராகத்தில் இப்பாடலை ராஜா அமைத்திருப்பார். இந்த ராகத்தில் டப்பாங்குத்து பாடல் அமைத்த பெருமை இளையராஜாவையே சேரும். அனைவரும் ரசிக்கும்படி ஜேசுதாஸ் குரலில் இப்பாடல் ஒலிக்கும். படத்தின் அடையாளமாகவே இப்பாடல் மாறிப்போனது.

9. கலைவாணியே

ஜே.கே.பி. திருந்தி பழைய நிலைக்கு திரும்பி மேடையில் இப்பாடலைப் பாடுவார். நெடுநாள்கள் கழித்து அந்நிகழ்ச்சிக்கு சிந்து திரும்பி வருவாள். 

வீழ்ச்சியிலிருந்து மேலேறி வந்த கலைஞன் பாடும் பாடல் ராகத்தில் கீழிறங்காமல் இருக்க ஜேசுதாஸ் குரலில் இப்பாடலை கல்யாணி ராகத்தில் முழுக்க ஆரோகண பிரயோகத்தில் வருமாறு அமைத்திருப்பார் இளையராஜா. 

கதைப்போக்கில் இசையைக் குறியீடாகப் பயன்படுத்துவதில் அனைவருக்குமான மேதை அவர். இது மட்டுமின்றி படம் முழுவதும் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ள சின்னச்சின்ன பாடல்களும் குறியீட்டைப் போன்று கதையின் போக்கை ராகங்களின் மூலம் குறிப்பிடும். 

இப்படத்திற்காக இளையராஜா (இசை), சித்ரா (பின்னணிப் பாடகர்), சுஹாசினி (நடிப்பு) ஆகியோருக்கு தேசிய விருது கிடைத்தது. 

சிந்து பைரவி தவிர்த்து பல படங்களில் அவர் கர்நாடக இசையையும் ராகங்களையும் புதிய முயற்சிகளில் பயன்படுத்தியிருக்கிறார். அதில், மற்றொரு டப்பாங்குத்து பாடலையும் சுட்டிக்காட்ட வேண்டும். பிலஹரி ராகம் என்பது மகிழ்வைக் குறிப்பது. மென்மையாகப் பாடப்படும் இந்த ராகத்தை கமலின், ‘எல்லாம் இன்பமயம்’ படத்தில் ஒரு டப்பாங்குத்து பாடலாக மாற்றியிருப்பார் ராஜா. ‘மாமன் வீடு மச்சு வீடு’ என்ற இப்பாடலைக் கேட்டுவிட்டு பிலஹரி ராகத்தில் வரும் கீர்த்தனைகளைக் கேட்டால் இதில் இளையராஜாவின் மேதமையைத் புரிந்துகொள்ளலாம். 

இசை அறிந்தவராக இருந்தால் ஒரு மாபெரும் விருந்தைப் போல இதனை  அனுபவிக்கலாம். இசை அறியாத பாமரராக இருந்தால் அவருக்கு ராஜாவின் இசையை அனுபவிக்க காரணங்கள் வேண்டுமா என்ன? அவை உள்ளார்ந்து ஏற்படுத்தும் உணர்ச்சி மாற்றங்களே போதுமே. அறியாதவரிடத்தும் அதனைத் தருவதுதானே கலை. 

இளையராஜா இவ்வாறு பல பாடல்களின் மூலம் கர்நாடக சங்கீதத்தை நம்மிடம் சேர்த்திருக்கிறார். நம்மில் பலரும் அது கர்நாடக சங்கீதம் என்று தெரியாமலே அதனைப் பாடிக் கொண்டேயிருக்கிறோம். கலையைப் பரவலாக்கி அனைவரிடத்தும் சேர்க்கும் வேலையை அவர் தொடர்ந்து செய்துகொணடேயிருக்கிறார்.

இளையராஜாவை மக்கள் கொண்டாடுவதில் மிகவும் பிடித்தமான ஒன்றை இங்கு பகிர வேண்டும். இளையராஜா சிங்கப்பூரில் ஒரு இசைக் கச்சேரியில் இதயம் ஒரு கோவில் பாடலை சிலாகித்து பாடுவார். பாடலின் கடைசி சரணத்தில் ‘வாழ்க என்றும் வளமுடன், என்றும் வாழ்கவே’ என அவர் பாடுகையில் ரசிகர்கள் அவரை ஒரு கடவுளைப் போன்று கும்பிட்டு கண்ணில் ஒத்திக் கொள்வர். புது இசையைப் படைப்பதால், அப்படியொரு கடவுளாகவே அவர் இருக்கிறார். என்றும் இருப்பார்!

To write about Ilaiyaraaja's musical genius and nuances, one must have listened to his entire musical repertoire and immersed oneself in it.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.