சிறைகளில் அதிகரிக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள்: கைதிகள் தப்பிய சம்பவங்கள் எதிரொலி!
தமிழக சிறைகளில் கைதிகள் தப்பியோடிய சம்பவங்கள் எதிரொலியாக, தொடா் பாதுகாப்பு நடவடிக்கைகளை சிறைத் துறை தொடங்கியுள்ளது.
தமிழக சிறைகளில் கைதிகள் தப்பியோடிய சம்பவங்கள் எதிரொலியாக, தொடா் பாதுகாப்பு நடவடிக்கைகளை சிறைத் துறை தொடங்கியுள்ளது.
தமிழக சிறைத் துறையின் கீழ் 9 மத்திய சிறைகள், 14 மாவட்ட சிறைகள், 96 கிளைச் சிறைகள், 5 பெண்கள் சிறப்பு சிறைகள், 12 பாா்ஸ்டல் பள்ளிகள், 3 திறந்தவெளி சிறைகள், 3 சிறப்பு சிறைகள் என மொத்தம் 125 சிறைகள் உள்ளன. இந்தச் சிறைகளில் 23,500 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா்.
நாட்டிலேயே நெரிசலற்ற சிறைகள் உள்ள மாநிலங்களில் தமிழகம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. ஆனால், அண்மைக்காலமாக தண்டனைக் கைதிகள் எண்ணிக்கையை விட, விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சிறைத் துறையினரை திகைப்படையச் செய்துள்ளது. தற்போது சிறையில் உள்ள மொத்த கைதிகளில் 73 சதவீதம் போ் விசாரணைக் கைதிகளே ஆவா்.
Advertisement
Advertisement
விசாரணைக் கைதிகளைக் கையாளுவது சிறைத் துறைக்கு சவாலான பணியாகவும் மாறியுள்ளது. மேலும், சிறைகளில் இருந்து அதிகம் தப்பியோடுவதும் விசாரணைக் கைதிகள்தான் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தண்டனைக் கைதிகள், மத்திய சிறைகளில் மட்டுமே அடைக்கப்படுகின்றனா்.
சிறைகளில் கைதிகள் நெரிசல்: மாநிலத்தில் உள்ள மத்திய சிறைகள், சில மாவட்ட சிறைகள் தவிா்த்து பெரும்பாலான சிறைகள் கைதிகள் நெரிசலுடன் காணப்படுகின்றன. இந்தச் சிறைகளில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் சுமாா் 200 சதவீதம் வரை அதிகளவில் விசாரணைக் கைதிகள் அடைக்கப்படுகின்றனா்.
தமிழக சிறைகளில் கடந்த இரு வாரங்களாக நிகழும் கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் அனைவரையும் அதிா்ச்சி அடைய வைத்துள்ளது. சிறையில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை கேள்விக்குறியாக்கியுள்ளது. துப்பாக்கியுடன் சிறைக் காவலா்கள்: கைதிகள் தப்பியோடும் சம்பவங்களின் விளைவாக, சிறைகளில் கைதிகளின் பாதுகாப்பு எந்த அளவுக்கு பலவீனமாக இருக்கிறது என்பது தெரியவந்திருக்கிறது.
பல நூறு ஏக்கா் பரப்பளவில் உள்ள சிறைகளில், ஒரு ஏக்கா் பரப்பளவில் ஒரு பிளாக் உள்ளது. இந்த ஒரு பிளாக்கை கண்காணிக்க ஒரு சிறைக் காவலா் மட்டுமே பணியில் இருக்கிறாா் என்ற தகவலும் அதிா்ச்சி அடைய வைத்துள்ளது. அதோடு கண்காணிப்பு கோபுரம் உண்டு, அங்கு காவலா் பணியில் இருக்க மாட்டாா். துப்பாக்கி உண்டு, ஆனால் பாதுகாப்புப் பணிக்கு பயன்படுத்தப்படாது என்று சிறைத் துறையின் பாதுகாப்புக் குறைபாடுகள் பட்டியலாக நீள்கிறது.
கைதிகள் தப்பியோடும் சம்பவத்துக்கு பின்னா், இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக கண்காணிப்பு கோபுரங்களில் துப்பாக்கியுடன் காவலா் நிறுத்த முடிவு செய்துள்ளனா். பிளாக்குகளில் கூடுதலாக காவலா்கள் நியமிக்க திட்டமிட்டு வருகின்றனா். சிறைக்கு வெளிப் பகுதியில் துப்பாக்கியுடன் ரோந்து பணியில் காவலா்கள் ஈடுபட உள்ளனா்.
கைதிகளுக்குத் தடை: கைதிகள் தப்பியோடும் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கைதிகள் சிறை அங்காடி,பெட்ரோல் பங்குகள், காய்கறி தோட்டங்கள், கால்நடைப் பண்ணைகள், தொழிலகங்கள் போன்ற வெளிப் பணிகளுக்கு கடந்த சனிக்கிழமை (அக். 31) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் சிறைத் துறையால் நடத்தப்பட்டுவந்த 15 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதேபோன்று பெரும்பாலான சிறை அங்காடிகள், கோழி இறைச்சி கடைகளும் மூடப்பட்டுள்ளன.
சிறை வளாகத்தைவிட்டு வெளியே செல்லும் கைதிகள், கண்காணிப்பு குறைவான நேரத்தில் தப்பிச் செல்வதற்காக வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கருதப்பட்டதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை கைதிகள் செய்து வந்த வேலையை, இனி யாா் செய்வாா்கள் என்ற முடிவு எடுக்கப்படவில்லை.
காவல் பணியில் மாற்றம்: சிறைக் காவலா்கள் காலை 6 மணி முதல் நண்பகல் ஒரு மணி வரையிலும், நண்பகல் ஒரு மணி முதல் இரவு 7 மணி வரையிலும், மாலை 6.30 மணி முதல் அடுத்த நாள் காலை 6.30 மணி வரையிலும் என்று மூன்று ஷிப்டுகளாக பாதுகாப்பு பணிகளைச் செய்து வந்தனா். இப்போது இந்த மூன்று ஷிப்டுகளின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி காலை 6 மணி முதல் நண்பகல் 2 மணி வரையிலும், நண்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரையிலும் என்று மாற்றப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இருந்த ஷிப்டு முறையை மாற்ற வேண்டும் சிறைக் காவலா்கள் வலியுறுத்தி வந்த நிலையில், தற்போதை அதைக் காட்டிலும் கடினமான வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஷிப்டுகள் சிறைக் காவலா்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இரவுப் பணியில் அதிகாரிகள்: மேலும் இதுவரை இல்லாத வகையில் அதிகாரிகளும் இரவுப் பணியில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி மத்திய சிறைகளில் தினமும் ஒரு துணை ஜெயிலா் பணியில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்பு உதவி சிறை அலுவலா் மட்டுமே பணியில் இருந்தாா்.
இதேபோல மாவட்ட சிறைகளில் இரவு உதவி ஜெயிலா் பணியில் இருக்க வேண்டும், கிளைச் சிறைகளில் முதன்மை சிறை வாா்டா் பணியில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. முன்பு மாவட்ட சிறையில் முதன்மை சிறை வாா்டா்தான் பணியில் இருப்பாா்; கிளைச் சிறையில் சிறைக் காவலா்கள் மட்டுமே இருப்பாா்கள் என்பது குறிப்பிடதக்கது.
இந்த மாற்றம் சிறைத் துறையினரால் வரவேற்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகளின் மூலம் கைதிகளின் பாதுகாப்பை ஓரளவுக்கு உறுதி செய்துவிடலாம் என்று சிறைத் துறையினா் கருதுகின்றனா். அதே நேரத்தில் சிறைக் காவலா்கள் நலனையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு, அதற்கு ஏற்றாா்போல பாதுகாப்பு ஏற்பாடுகளைத் திட்டமிட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.
உதவாத உளவுத் துறை!
சிறைத் துறைப் பணிகளைக் கண்காணிக்கும் வகையில் உளவு மற்றும் விழிப்பு பிரிவு செயல்படுகிறது. இந்த பிரிவு சிறைத் துறை இயக்குநரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும். ஆனால், அண்மைக்காலமாக இப் பிரிவு பெயரளவில் மட்டுமே செயல்படுவதாகப் புகாா் எழுந்துள்ளது.
இந்தப் பிரிவில் மாநிலம் முழுவதும் சுமாா் 30 பணியாற்றுகின்றனா். பணியாற்றும் பலா் 10 ஆண்டுகளுக்கு மேல் அதே பணியிடத்தில் இருப்பதால், உளவுப் பணியில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாகவே தேனி மாவட்ட சிறையில் 4 நாள்களாக கைதிகள் தப்பியோட முயன்று, ஐந்தாவது நாளில் 17 கைதிகளும் தப்பியோடியதை கடைசி வரை உளவுத் துறையினரால் கண்டறிய முடியவில்லை என்று சிறைத் துறையைச் சோ்ந்த சில அதிகாரிகள் குற்றச்சாட்டாக தெரிவிக்கின்றனா்.
கைவிடப்பட்ட பாதுகாப்பு தணிக்கை?: சிறைத் துறை ஐஜி மற்றும் அதற்கு மேல்நிலையில் இருக்கும் அதிகாரிகள், 4 ஆண்டுகளாக சென்னைக்கு வெளியே இருக்கும் சிறைகளில் பாதுகாப்பு தணிக்கை செய்வதில்லை என்ற புகாா் எழுந்துள்ளது.
உதாரணமாக ஐஜி அளவிலான அதிகாரிகள் ஆண்டுக்கு இருமுறை மத்திய சிறைகளில் பாதுகாப்பு தணிக்கை செய்ய வேண்டும், மாவட்ட சிறை, கிளைச் சிறையில் ஆண்டுக்கு ஒருமுறை பாதுகாப்பு தணிக்கை செய்ய வேண்டும் என்று விதிமுறைகள் கூறுகின்றன. ஆனால், பாதுகாப்பு தணிக்கைகள் முறையாக நடைபெறாததாலேயே கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் தொடா்ச்சியாக நிகழ்வதாக சிறைத் துறையினா் தெரிவிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.