FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஈரடிச் செய்யுள் மரபு, திருக்குறளுக்குப் பின்...

ஈரடியில் குறள் வடிவில் உள்ள தமிழ்ப் படைப்புகளான ஒளவை குறள், அருங்கலச் செப்பு, திருவருட் பயன் ஆகிய நூல்கள் பற்றி...

20 அக்டோபர் 2026, 3:49 pm IST
குறளுக்குப் பின்... - AI Gemini
பகிர்:

தமிழில் ஈரடிச் செய்யுள் (குறள்) வடிவத்தின் ‘தனித்த பிரதிநிதி’  திருக்குறளே என்றும், அந்த நுட்பமான பா வகையை லாவகமாகக் கையாண்ட ஒரே புலவர் திருவள்ளுவர்தான் என்றும் தமிழ் இலக்கிய வரலாறு, பாரம்பரியமாகப் போற்றுதலை வழங்கி வருகிறது. வள்ளுவரது படைப்பின் சிறப்பும், செழுமையும், குன்றாத அதன் இலக்கிய மகத்துவமும், ’உலகப் பொதுமறை’ எனும் உயர்ந்தேற்பும் கேள்விக்கிடம் ஏதுமின்றித் தொடர்வது யாரும் மறுக்கத் துணியாத உண்மையே. இருப்பினும், வள்ளுவருக்குப் பின் குறட்பா வடிவம், புலவர்களால் கையாளப்படாமல் அருகி மறைந்துவிட்டதா? எனுங் கேள்விக்குத் தமிழ் இலக்கிய ஆய்வுக் களம், பரந்து அறியப்படும் வகையில் வெளிப்படையான விடைகள் தந்திருப்பதாகத் தெரியவில்லை. வள்ளுவருக்குப் பிந்தைய காலத்து ஈரடிச் செய்யுள் படைப்புகளைப் பற்றி குறிப்பான, விரிவான, ஆய்வுகளேதும் மேற்கொள்ளப்படாமலிருப்பது அவற்றின் இருப்பே மறைந்தது போன்ற பொது எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆறுதலளிக்கும் வண்ணம், வள்ளுவருக்குப் பின், குறள் வடிவில் - சுருக்கமான ஈரடிகளில் - இயற்றப்பட்டு மறைந்து கிடக்கும் தமிழ்ப் படைப்புகள் உள்ளன என்பது தெரியக் கிடைக்கிறது.

திருக்குறளின் எண்ணளவை (1330), பிற்காலங்களில் வந்த ஈரடி / குறள் வடிவ நூல்களெதுவும் கருதுமளவிற்கு எட்டவில்லை. ஆனாலும், 310 குறள்கள் கொண்ட ஔவை குறள் (ஞானக் குறள்); பெயர் அறியப்படாத, சமண சமயத்தவரென யூகிக்க வாய்ப்புள்ள புலவரால் எழுதப்பட்டிருக்கும், 179 குறள்கள் கொண்ட ‘அருங்கலச்செப்பு’ (6ஆம் நூற்றாண்டு?); சைவ சமயத்தவரான  கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் எழுதிய 100 குறள்கள் உள்ள ‘திருவருட் பயன்’ (14ஆம் நூற்றாண்டு) ஆகிய நூல்களின் இருப்பு திருக்குறளுக்குப் பின்னரும், தமிழ் இலக்கியப் பரப்பில் ஈரடிச் செய்யுள் (குறள்) பாரம்பரியம் தொடர முயன்று வந்திருப்பதற்கான எடுத்துக்காட்டுகளாக நிற்கின்றன. 

Advertisement

Advertisement

இம்மூன்று படைப்புகள் போக, குறைவான எண்ணிக்கையுள்ள மற்றுமொரு குறள் முயற்சி, காகபுசுண்டர் செய்துள்ளதாக அறிகிறோம். மயிலாடுதுறையில் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் சித்தரான காகபுசுண்டர் குறித்து ‘’வசிஷ்ட மகரிஷிக்கு ஞானோபதேசம் செய்தவர்‌’’ எனும் தொன்மம் நிலவியுள்ளது! இதனால், இவர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று யூகிப்பதே சிரமமாகிறது. இவரது 1000 செய்யுள்கள் கொண்ட ‘காகபுசண்டர் பெருநூல் காவியம் 1000’ உள்படப் பல செய்யுள்கள் / நூல்கள் கிடைத்துள்ள போதும், இவர் இயற்றியதாகத் தனியே 16 ஞானக் குறள்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இவர் தமது பிற நூல்களிலும் ஈரடிச் செய்யுள் வடிவத்தை அதிகம் கையாண்டுள்ளார் என்பதும் அறிகிறோம். 

எ.கா:- காணாத காட்சியெல்லாம்‌ கண்ணில்‌ கண்டு / காகமடா புசுண்டரென்று பேரும்‌ பெற்றேன்‌  - ‘காகபுசுண்டர் ஞானம்’‌, பாடல்‌ 64.) 

முற்சொன்னவற்றுடன் கூடுதலாக, ‘’சிதம்பரம் கண்கட்டி மடம் மறைஞான சம்பந்தர் என்பார், சைவ சமயநெறி, மகா சிவராத்திரி கற்பம், சோமவார கற்பம், வருத்தமற உய்யும்வழி, பரமோபதேசம், பதி, பசு பாசப் பனுவல், சங்கற்ப நிராகரணம் முதலிய நூல்களைக் குறள் வெண்பாக்களால் இயற்றியுள்ளார்’’ என வெள்ளைவாரணர் எழுதிய திருவருட்பயன் விளக்க உரையில் (1976) குறிப்பிட்டுள்ளதை நோக்கும்போது, குறள் வடிவ - ஈரடிப்பா வகை - பிற்காலங்களிலும் படைப்புகளில் கையாளப்பட்டு வந்திருப்பதற்குச் சான்றாகிறது.

திருவள்ளுவருக்குப் பின் தோன்றிய பிற்காலப் புலவர்களால் குறள்பா வடிவில் இயற்றப்பட்டு, அச்சேறிக் கைகளிற் கிடைக்கும் நூல்களுள் குறிப்பிட உரியனவான ஔவை குறள், அருங்கலச்செப்பு, திருவருட்பயன் ஆகிய மூன்று குறள் நூல்கள் குறித்த ஒரு சுருக்கப் பொதுப் பார்வையையும், இம்மூன்று நூல்களையும் திருக்குறளுடன் ஒரு தொடக்கநிலை ஒப்பீடும் மேற்கொண்டு வழங்குவதே இங்கு நோக்கம். 

மூன்று குறள் நூல்கள் குறித்த சுருக்கப் பொதுப்பார்வை

1. ஔவை குறள் (ஞானக்குறள்): திருக்குறளைப் பின்பற்றிக் குறள்வெண்பா யாப்பில் பிற்காலத்தில் தோன்றிய நூல் ஒளவை குறள். இந்நூல், வீட்டுநெறிப் பால், திருவருட்பால், தன்பால் என முப்பாலமைப்புக் கொண்டது ஔவை குறள் (ஞானக்குறள்) என்றழைக்கப்படும் நூலின் படைப்பாளர் ஔவை என்பது யூகிக்க முடிகிறது. ஆனால், இவர் எந்தக் காலத்தில் வாழ்ந்த ஔவையார் என அறிய இயலவில்லை. 

ஔவையார் அருளிச் செய்த குறள் மூலம் (ஔவை குறள்) என்ற பெயரில், பதிப்புரை, முன்னுரை ஏதுமின்றி, ஆனூர் சுப்பராய முதலியார் குமாரர் எதிராஜ முதலியார் 1902 இல் பதிப்பித்த நூல் (A Theosophical Aphorism in Tamil 310 Poems by Avyar) 38 பக்கங்கள் கொண்டதாக முதலில் பதிப்பானது. பொருளடக்கம், ‘சுசீபத்திரம்’ எனக் குறிக்கப்பட்டு, மூன்று அதிகாரங்கள்  உள்ள நூலின் முதலிரண்டில் 10 உட்பிரிவுகளும், மூன்றாவதில் 11 உட்பிரிவுகளும், ஒவ்வொரு உட்பிரிவிலும் 10 குறள்கள் என (10X31) மொத்தம் 310 குறள்கள். 

முதற்குறள், ஆதியாய் நின்ற வறிவு முதலெழுத் / தோதிய நூலின் பயன் எனத் தொடங்கி 310 ஆவது குறள் கற்கிலுங் கேட்கிலும் ஞானக் கருத்துற / நிற்கிற் பரமமை வீடு என முடிகிறது.  

அதன் பின், 1902 ஆம் ஆண்டுப் பதிப்பில் மட்டும் முத்திக்கௌவையார்சொல் முந்நூற்றுப்பத்துமுன் / சித்தத்தில் வைத்துத்தெளி என்ற தனிக்குறளோடு நூல் முற்றுப் பெற்றதாகிறது. 

இந்நூலிலுள்ள "நல்லன நூல்பல கற்கினுங் காண்பரிதே /எல்லை யிலாத சிவம்" (ஒளவை குறள் -206)  என்ற குறள் வெண்பாவை சிவப்பிரகாசம் 80-ஆம் செய்யுளுரையில் மதுரைச் சிவப்பிரகாசர் எடுத்துக்காட்டியுள்ளார்.  

ஔவை குறள் நூல், குறிப்பிட உரிய மற்றொரு விரிவான பதிப்பாக, ‘ஔவையார் திருவாய் மலர்ந்த குறள் மூலமும் உரையும், மா. வடிவேலு முதலியார் எழுதிய பொழிப்புரையும்’ என 113 பக்கங்களுடன் 1915 இல் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

2. அருங்கலச்செப்பு

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றிய கால வட்டத்திலேயே (கி.பி. 2 முதல் 6 ஆம் நூற்றாண்டு வரை) வெண்பா யாப்பு, செல்வாக்குப் பெற்றிருந்தது என்பது நினைவிற் கொள்ளஉரியது. அறவுரை நூல்களில், வெண்பா யாப்பே மிகவும் பயன்படுத்தப்பட்டது. ‘’குறள் வெண்பாவில் இயற்றப்பட்ட அருங்கலச் செப்பும் இக்கால எல்லையில் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும்’’ எனக் கருதலாம் (க.ப. அறவாணன்,1977). இந்நூலை ஆக்கியவர் பெயர் தெரியவில்லை. சமந்த பத்திர ஆச்சாரியார் ஆக்கிய 'இரத்தின கரண்டகம்' நூலுக்கும் அருங்கலச்செப்பு நூலுக்கும் இடையே உள்ள ஒற்றுமை கண்டு, இந்நூலை அதன் வழி நூல் என்று கருதுவருண்டு.

கருதக் கைக்கொண்டுள்ள மூன்று நூல்களில், அருங்கலச்செப்பு மிகவும் வெளிப்படையாக துறவற ஒழுக்கத்தை முன்னிலைப் படுத்துகிறது. நூலில் பேசப்பட்டிருக்கும் ஒழுக்கங்கள் எல்லோர்க்கும் பொருந்துவன என்றாலும், குறிப்பாக அவை சமண சமயத்தார்க்கே, அவருள்ளும் இல்லறத்தில் ஈடுபட்டவர்களுக்கே (ஸ்ராவகர்கள்) முற்றும் பொருந்துவனவாகச் சொல்லப்பட்டுள்ளன. இல்லறத்தில் ஈடுபட்டவர்கள் சரி, நெறிப் பாதையில் செல்ல, நூலாசிரியர் அமைத்துக் காட்டியுள்ள வாழ்க்கைத் தடம்தான் அருங்கலச்செப்பு. நூலைக் கற்போர் நூற்கருத்தை உள்வாங்கி மனத்தில் இறுத்திக் கொள்ள இலகுவாக இருப்பதற்காகவே, நூலாசிரியரால் குறள் யாப்புப் பின்பற்றப்பட்டதெனலாம். 

நூல், 179 குறட்பாக்கள் உடையது; உட்பிரிவுகள் எதுவும் இல்லாதிருப்பினும் நிரலான அமைப்பில் நூல் இயல்பாக இயங்குகிறது. அறமே அனைத்திற்கும் அடிப்படை என்றும். அவ்வறத்திற்கு இரத்தினத் திரயங்கள் - நற்காட்சி, நல்லறிவு, நல்லொழுக்கம் – அடிப்படை என்றும் கூறிப் பின்னர் அம்மூன்றையும் முறையே விரிவாக நூல் எடுத்துரைக்கிறது.

அருங்கலச்செப்பு சைனர்கள் போற்றும் நூலாயினும் பெரிதும் காலம் தாழ்ந்தே 1883 இல் முதலில் அச்சாகியுள்ளது. அதற்கு முன்பே, ஐரோப்பிய அறிஞர் எல்லீஸ் தமது நூலில் (‘Tirukkural on Virtue', 1812) அருங்கலச்செப்பின் ஏழு குறள்களை (30, 32, 33, 66, 87, 134, 147) எடுத்துக் காட்டியதன் மூலம், அச்சுலகில் முதன் முதல் அருங்கலச் செப்பை அறிமுகப்படுத்தியதாகச் சொல்லலாம். மேலும், ‘இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் / நல்லாற்றின் நின்ற துணை' என்ற குறளுக்கு 'On Domestic virtue' எனும் தலைப்பில் விளக்கம் எழுதும்போது' (The observations of the Sraavaca என்று குறிப்பிட்டு)  அருங்கலச்செப்பில் கூறப்பெற்ற செய்திகளை ஆங்கிலத்தில் வடித்து வழங்கியுள்ளதும் அறியத்தக்கது.

சமண “மதசம்பந்தமான நீதியுரைகள், ஆசார முறைகள் என்பன அனைவர்க்கும் செவ்வனே விளங்குவனவல்ல. அவ் விளங்காதனவற்றை இந்த அருங்கலச்செப்பு இனிது விளக்கத் துணை செய்யக்கூடியது. தொடங்கிய பொருளைச் சுருங்கிய முறையில் விளக்கக் கருதிய ஆசிரியர் தமது கொள்கைக்கேற்ப முதற்பாவால் (குறள் வெண்பா) இந்நூலை அமைத்திருப்பது மிகவும் போற்றத்தக்கது. ”(வீடூர் ஸ்ரீ ஏ. தர்மஸாம் ராஜ்ய நயினார், அருங்கலச்செப்பு பதிப்புரை,1941)

3. திருவருட்பயன்

கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் இயற்றிய நூல்களாக சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி. நெஞ்சுவிடுதூது, உண்மைநெறி விளக்கம், சங்கர்ப திராகரணம் என்னும் எட்டு சித்தாந்த நூல்களும் ('சித்தாந்த அஷ்டகம்'), கோயிற் புராணம், திருமுறைகண்ட புராணம், சேக்கிழார் புராணம், திருத்தொண்டர் புராணசாரம், திருப்பதிக்கோவை என்பனவும், வடமொழியில் பவுட்கரம் என்னும் உபாகமத்திற்கு எழுதிய விருத்தியுரையும் என அறியக் கிடைக்கிறது. 

இவற்றுள் ஒருநூலான திருவருட்பயன், “சைவ சித்தாந்த நூல்களை முறையே பயில எண்ணுபவர்கள் முதற்கண் திருவருட்பயனையும் பின்னர் சிவப்பிரகாசத்தையும் பயிலுதல் இன்றியமையாதது” எனப் போற்றப்படுகிறது. நூல், திருக்குறள் போன்று குறட்பாக்களால் இயற்றப்பட்டுள்ளது. பத்து அதிகாரங்கள்; ஒவ்வோரதிகாரமும் பத்துக் குறள்களையுடையன; மொத்தம் 100 குறட்பாக்கள் உள்ளன. 

“இறைவனது திருவருள் ஞானம் பெற்ற சிவநெறிச் செல்வர்கள் திருவாய் மலர்ந்தருளிய அருள் நூல்களாகிய திருமுறைகளிலே சிறப்பாக விளக்கப்பெறும் திருவருளுண்மையாகிய நற்பொருட் பயன்களைச் சிறப்புடைப் பொருள்களாகக் கொண்டு இதனை இயற்றியுள்ளாராதலின் இந்நூல் திருவருட்பயன் என்னும் பெயர்த்தாயிற்று’’ (க. வெள்ளைவாரணனார்,1976).

'அற முதலாகிய மும்முதற் பொருள்' எனத் தொல்காப்பியர் குறித்ததற்கேற்ப திருவள்ளுவர், தம் நூலை முப்பாலாக இயற்றி வழங்கியுள்ளார். தொல்காப்பியருக்கும் திருவள்ளுவருக்கும் பின்வந்த புலவர்கள் சிலர் உறுதிப் பொருள்களுள் மூன்றாவதாகிய இன்பத்தைச் சிற்றின்பம், பேரின்பம் என இரண்டாகப் பகுத்து, முன்னதனை இன்பம் என்றும், பின்னதனை வீடு என்றும் பெயரிட்டு, உறுதிப்பொருள்கள் அறம், பொருள், இன்பம், வீடு என நான்காகக் கொண்டனர். அவ்வகையிலமைந்து திருவருட்பயன் வீடடைதலை முதன்மைப்படுத்துகிறது. நூலின் தலை நோக்கு, ‘’ அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கினுள் வீட்டுநெறி’’ காட்டுவதே என உரையாசிரியர் உறுதிப்படுத்துகிறார்.

அகர வுயிர்போ லறிவாகி யெங்கும் / நிகரிலிறை நிற்கும் நிறைந்து எனும் இந்நூலின் முதற்குறள், 'அகரமுதல எழுத்தெல்லாம்' என்னும் திருக்குறளை அடியொற்றியே அமைந்திருப்பதைக் காணலாம்.  

நூலிறுதி (நூறாவது) குறள், கள்ளத் தலைவர் துயர்கருதித் தங்கருணை / வெள்ளத் தலைவர் மிக என முடிகிறது. இப்பிறப்பிலேயே முதல்வனை அணைந்தோராகிய சீவன்முத்தர்கள் தம் முதல்வனையொப்ப எல்லாவுயிர்களிடத்தும் அருளுடையராய்த் திகழ்வர் என்பது பொருள்.

திருவருட்பயன் எனும் நூல், ‘வள்ளுவனுக்கு நற்றுணை’ எனக் குறள் வகைச் செய்யுள் பாரம்பரியத்தைப் பரவச் செய்யும் நூல் என்பதாக,

தெள்ளு சீர்ப் புலமை வள்ளுவன் றனக்கோர் / நற்றுணை யுடைத்தெனக் கற்றவர் களிப்ப /அருட்பய னென்னா வதற்கொரு நாமந் /தெருட்படப் புனைந்து செந்தமிழ் யாப்பிற் / குறளடி வெள்ளை யொருநூ றியம்பினன் 

என்று அந்நூலுக்கு உரையெழுதிய நிரம்ப அழகிய தேசிகர் இயற்றியுள்ள சிறப்புப்பாயிரம் போற்றுவது அறியத்தக்கது.

திருவருட்பயன் நூலிலுள்ள பத்து அதிகாரங்களும் உலகப் பொதுமறையாகிய திருக்குறளை அடியொற்றிச் சிவநெறிச் செல்வர்கள் அருளிய திருமுறைகளில் அமைந்த திருவருள் உண்மைகளைச் சிறப்பு முறையில் எடுத்துரைக்குமுகமாக இந்நூல் இயற்றப் பெற்றதெனக் கருதப்படுகிறது. குறள் வெண்பாக்களால் இயன்ற நூல்களுள் திருக்குறளை அடுத்து எண்ணத் தக்கவாறு சொற்பொருள் நலங்களால் தெளிவும் செறிவும் பெற்றுச் சிறப்புடன் திகழ்வது, உமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன் நூல். இந்நூல், ‘சிவஞான போதத்தின் சார்பு நூலாக இயற்றப்பட்ட சிவப்பிரகாசத்தினைப் பயிலுதற்கு வாய்ப்பாக அந்நூற் பொருளைச் சுருங்க விளக்கும் சுருக்க நூலாகவும் தெய்வப்புலமைத் திருவள்ளுவர் அருளிய திருக்குறளின் அங்கமாகவும் இயற்றப் பெற்றது’ எனக் கருத்துரைகள் உள்ளன.

திருக்குறளுடன் மூன்று குறள் நூல்கள்: தொடக்க நிலை ஒப்பீடு

திருக்குறள் போலவே, குறிப்பிடப்பட்டுள்ள ஔவை குறள், அருங்கலச் செப்பு, திருவருட்பயன் ஆகிய மூன்று பிற்கால நூல்களும் -  தளை, சீர் எனும் கடினமான இலக்கண வரம்புகளுக்குள்பட்ட, ஏழு சீர் கொண்ட, ஈரடிகளாக, முதலடி நாற்சீரும், ஈற்றடி முச்சீராக முடியும் வகைக் - குறள் வெண்பாக்களால் கட்டமைக்கப்பட்டுள்ன. இது ஈரடிக் குறள் பாரம்பரியம் இற்றுப்போகாமல் பிற்காலங்களிலும், தமது கருத்துகளை இறுக்கமான எளிதான சொற்கட்டமைப்பில் மனதிற் பதியும் வண்ணம் சுருக்கமாக மக்களுக்கு வழங்கவிழைந்த புலவர்களின் பா வாகனமாகியுள்ளதைக் காட்டுகிறது.

நான்கு நூல்களிடையே பா வகை ஒற்றுமை காண முடிகிறதேயன்றி, நூல் நோக்கங்கள் முற்றிலும் வேறுபாடானவை. ஔவை குறள் முப்பால் பகுப்புடையதாயினும் ‘’நான்கு வேதங்களை முதலாகக் கொண்டு இந்நூலைச் சொல்லுகின்றேன்’’ (ஔ. குறள் 1) என்று தொடங்கும் ஔவை, இறுதியில் மோட்சவீடு (பரமமை வீடு) கைகூடும் என - பதிப்பாளர் சேர்க்கைக் (?) குறள் கூறுவதற்கேற்ப –  ‘’முக்தி’’யை முதன்மைப்படுத்தி முடிக்கிறார். சமண நூலான அருங்கலச்செப்பும், சைவரது நூலான திருவருட்பயனும் தத்தமது சமய நெறிகளுக்கிசையும் வழியிலேயே சமய அறத்தை முன்மொழிவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. குறள் கூறும் ‘அறம்’ மானுடப் பொதுமைக்கானது. ஆனால் இம்மூன்று நூல்களும் தத்தமது மதஞ்சார்ந்தே அறத்தை அணுகுகின்றன.

அறம், பொருள், இன்பம் எனும் குறள் பகுப்பு, ஔவை குறளில் (வீட்டுநெறிப்பால், குறள் 4) ‘’தருமம் பொருள் காமம் வீடெனு நான்கு’’ என விரிகிறது. அருங்கலச்செப்பில், நற்காட்சி, நல்லறிவு, நல்லொழுக்கம் என்ற மூன்றும் ஒருங்குகூடியது அறம் எனச் சொல்லப்படுகிறது. திருவருட்பயன், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கினுள் வீட்டுநெறி காட்டவே விளைந்ததென அறிவிக்கப்படுகிறது. வீடு (மோட்சம், முக்தி) குறித்துப் பேசும் பிற்காலக் குறள் நூல்கள் தத்தமது நெறி, இறைவழியே அதனை அடைவதைப் பற்றி நிற்கின்றன; அவற்றிடையே  வழிப் பொதுமை இல்லை.

அதனிலும் குறிப்பாக அருங்கலச்செப்பு, வேற்று மதத் தெய்வங்களை விலக்குதல் (அ.செ. குறள் 41); வைதீகச் சடங்குகளை ‘உலகமயக்கு’ (அ.செ. குறள் 30); வேற்றுமத தெய்வ வணக்கம், ‘தெய்வ மயக்கு’ (அ.செ. குறள் 31); பிற மதத்தாரைப் போற்றுதல் ‘பாசண்டி மூடம்’ (அ.செ. குறள் 33) என வெளிப்படையாகப் பழித்து அவை விலக்கப்படத் தமது நெறியாரை (சமணரை) வலியுறுத்துகிறது.

இரண்டு வரிகள்தான் என்றாலும், தத்துவ ஆழங்களைத் தியாகம் செய்யாமல் ஆழ்ந்த அறநெறிகளைப் பொதித்துச் சொல்ல முடியும் என்பது திருவள்ளுவர் காட்டிய நிரூபணம். ஆனால், அதே வடிவத்தைக் கைக்கொண்ட பிற்காலக் குறள்களின் படைப்பாளிகள், உட்பொருள்வைப்பில், உரையில், திருக்குறள் போன்ற பொதுமையிலாது குறுகிய சமயவட்டங்களுக்குள் நின்று குறள்பாக்கள் வழங்கியுள்ளனர்.

திருக்குறளுக்குப் பின்னர் குறள் இலக்கியத்திற்கான சாத்தியக் கூறுகள் இருந்துள்ளதையும்; அவ்வகை இலக்கியத்திற்குள் பல கருத்தியல் நீரோடைகள் - சமணம், சைவம், யோகம் போன்றவை – உருவாகியிருப்பதையும், சமய மரபுகளும் குறள் பா ஊடகத்தை ஆர்வமுடன் கைக்கொண்டிருப்பதும் அறிகிறோம். ஒப்பிலக்கிய அடிப்படைகள் ஊன்றி, இங்கு பேசப்பட்ட நூல்கள் பற்றி விரிவான ஒப்பீடுகளுக்குக் களம் உள்ளது, உலகோரே!

பி.கு; ஈரடி வடிவில் ஆனால், 7 சீர்களுக்கு மேற்பட்டு ஒவ்வொரு ஈரடியின் இறுதியிலும், ‘எக்காலம்?’  (எ.கா:- ‘இன்றுளோர் நாளை இருப்பதுவும் பொய்யெனவே மன்றுளோர் சொல்லும் வகையறிவது எக்காலம்? -– மெ.பு.-34 ) என வினவுகிற  பத்ரகிரியார் எழுதியுள்ள 231 ஈரடிச் செய்யுள்கள் கொண்ட "மெய்ஞ் ஞானப் புலம்பல்" நூலும், தமிழின் ஈரடிச் செய்யுள் வகைப் பாரம்பரியத்தில் சேர்த்தற்குரியதே!

[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]

summary

Tamil literature books like after Thirukkural

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments