FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தலையங்கம்

அதிகரிக்கும் எண்ம மோசடி!

சிபிஐ அதிகாரிகள், வருமான வரித் துறை அதிகாரிகள் போன்றவர்களின் பெயர்களைக் கூறி பொதுமக்களை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறிக்கும் செயல்களில் பல்வேறு கும்பல்கள் நாடு முழுவதும் ஈடுபட்டு வருகின்றன.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 6:00 am IST
டிஜிட்டல் கைது - file photo
பகிர்:

தொழில்நுட்ப வளர்ச்சி கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையை எளிமையாக்கி இருந்தாலும், அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிது புதிதாக மோசடி செயல்களும் அரங்கேறி வருகின்றன. சிபிஐ அதிகாரிகள், வருமான வரித் துறை அதிகாரிகள் போன்றவர்களின் பெயர்களைக் கூறி பொதுமக்களை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறிக்கும் செயல்களில் பல்வேறு கும்பல்கள் நாடு முழுவதும் ஈடுபட்டு வருகின்றன.

கட்செவி அஞ்சல் (வாட்ஸ்ஆப்) விடியோ அழைப்பில் அரசு அதிகாரிக்கான சீருடையுடன் பேசும் மோசடி நபர், "உங்கள் ஆதார், பான் எண்களைப் பயன்படுத்தி போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளன. சட்ட விரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இதற்காக உங்களைக் கைது செய்யப் போகிறோம்' என்று மிரட்டி அவர் சொல்லும் வங்கிக் கணக்குக்குப் பணத்தை அனுப்பச் சொல்லி இணைப்பைத் துண்டித்துவிடுவார்.

இதே பாணியில், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட நீதிபதி கண்பத் சிங் பண்டாரி (90) ரூ.2.50 கோடியை கடந்த சில நாள்களுக்கு முன்பு இழந்துள்ளார்.

Advertisement

Advertisement

இதே போன்று பணத்தை அனுப்பிய பின்னரே தாங்கள் ஏமாற்றப்பட்டதை பொதுமக்கள் உணர்கின்றனர். இதில் பாதிக்கப்படுவது பெரும்பாலும் பெரும் வசதி படைத்தவர்களும், பணி ஓய்வுபெற்ற முதியவர்களும்தான். இதில் பலரும் தங்கள் வாழ்நாள் சேமிப்பையே இழந்து கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதேபோன்று, தாங்கள் சொல்லும் செயலி, இணைய முகவரிகளில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாகக் கூறியும் கோடிக்கணக்கில் பணம் சுருட்டுவதும் அதிகரித்துவருகிறது.

எண்ம மோசடிகளைத் தடுக்க, உள்துறை அமைச்சகத்தின் கீழ் "ஐ4சி' எனப்படும் தேசிய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் இணைய நிதி மோசடி புகார் மற்றும் மேலாண்மை அமைப்பு கடந்த 2021-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதில் கடந்த 5 ஆண்டுகளில் 32.80 லட்சத்துக்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளன. உரிய நடவடிக்கையால் ரூ. 11,158 கோடி இணைய குற்றவாளிகளுக்குச் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 30 வரை இணைய மோசடிக்காக உருவாக்கப்பட்ட 3,718 கைப்பேசி செயலிகள், 15.75 லட்சம் சிம்கார்டுகள், 5.77 லட்சம் கைப்பேசிகளின் ஐ.எம்.இ.ஐ. எண்கள் முடக்கப்பட்டுள்ளன.

எண்ம மோசடி தொடர்பாக கைப்பேசியில் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்), கைப்பேசி அழைப்பின்போது குரல் பிரசாரம், சமூக வலைதளங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இருப்பினும், இந்தப் பிரசாரங்கள் யாருக்குச் சென்று சேர வேண்டுமோ அவர்களுக்கு முழுமையாகச் சென்று சேரவில்லை என்பதையே அதிகரித்து வரும் மோசடிகள் வெளிச்சம்போட்டு காட்டுகின்றன.

இந்த எண்ம மோசடியில் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருப்பது, மோசடி செய்து சம்பாதிக்கும் பணத்தை இடைத்தரகர்கள் மூலம் பெறப்படும் பொதுமக்களின் வங்கிக் கணக்குகளுக்கு அடுத்தடுத்து பல முறை மாற்றி பின்னர் அதை தங்களுக்கு மாற்றிக் கொள்வதாகும். இதற்காகவே, எண்ம மோசடியில் ஈடுபடும் கும்பல்கள் தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை இடைத்தரகர்களாகப் பயன்படுத்தி வருகின்றன.

எந்த உழைப்பும் இல்லாமல் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் இளைஞர்களும், கடும் வறுமையில் உழலும் ஏழைகளும் தங்கள் வங்கிக் கணக்குகளை மோசடி கும்பலுக்கு தாரை வார்க்கின்றனர். இதற்காக ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கணிசமான தொகை அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த வலையமைப்பைத் துண்டிப்பதற்காக தமிழகம் முழுவதும் கடந்த ஆக. 6, 7-ஆம் தேதிகளில் சிறப்பு அதிரடி நடவடிக்கையை தமிழக காவல் துறை மேற்கொண்டது. இதில் இணைய மோசடிக்கு உதவிய 837 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 114 வங்கிக் கணக்குப் புத்தகங்கள், 204 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மட்டுமல்ல, கேரளத்தின் வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்களும் பெண்களும் வங்கிக் கணக்குகளை அளித்துவிட்டு கடும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். இணைய மோசடியில் ஈடுபட்டவர்கள் நாகாலாந்து, உத்தரகண்ட் போன்ற வெகுதொலைவில் உள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் கேரளத்தில் வங்கிக் கணக்கு அளித்தவர்களை அந்த மாநில போலீஸார் கைது செய்து அழைத்துச் செல்வது அதிகரித்துள்ளது.

உழைக்காமல் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற சிலரது மனப்பான்மையே இதுபோன்ற மோசடிகளுக்கு முக்கியக் காரணம். எண்ம மோசடிகள் குறித்து மத்திய, மாநில அரசுகள்

விழிப்புணர்வு மட்டுமே ஏற்படுத்த முடியும். அத்துடன், இழந்த பணத்தை மீட்க ஓரளவு நடவடிக்கைகள் எடுக்க முடியும். எளிதில் கிடைக்கும் பணத்துக்கு ஆசைப்பட்டு சட்டவிரோத நடவடிக்கைகளுக்குத் துணை போனால் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்பதை உணர்ந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக செயல்பட்டால் மட்டுமே இதுபோன்ற எண்ம மோசடிகளைத் தடுக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments