FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தலையங்கம்

வாளாவிருக்கலாகாது!

அரசு மருத்துவமனைகளை நம்பாமல், தனியார் மருத்துவமனைகளை அடித்தட்டு மக்கள் நம்பத் தொடங்கி இருப்பது நமது ஆட்சி முறையின் அவலம்.

Updated On : 24 ஜூலை 2026, 5:42 am IST
கோப்புப்படம்
பகிர்:

இந்தியாவில் பட்டினி மரணங்கள் என்பது பழங்கதையாகிவிட்டது என்பதை மறுக்க இயலாது; தனி நபர் வருவாயும், வாழ்க்கைத் தரமும் அதிகரித்திருப்பது ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் மருத்துவச் செலவுகளால் குடும்பங்கள் வறுமைக்குத் தள்ளப்படுகின்றன என்பது அதிகம் பேசப்படாத உண்மை.

அரசு மருத்துவமனைகளை நம்பாமல், தனியார் மருத்துவமனைகளை அடித்தட்டு மக்கள் நம்பத் தொடங்கி இருப்பது நமது ஆட்சி முறையின் அவலம்.

மத்திய, மாநில அரசுகள் இலவச மருத்துவக் காப்பீடு வழங்குவது அடித்தட்டு, நடுத்தர வர்க்க மக்களின் மருத்துவச் செலவை ஈடுகட்டுவதற்கு என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அது உண்மையல்ல.

Advertisement

Advertisement

முதல்வர்கள் தங்கள் கட்சித் தலைவர்களின் பெயரில் மருத்துவக் காப்பீடு வழங்குவதாலும், மத்திய அரசு "ஆயுஷ்மான் பாரத்' என்ற திட்டத்தின் கீழ் பல நூறு கோடிகளை ஒதுக்கி மருத்துவக் காப்பீடு வழங்குவதும் ஆறுதல் அளிக்கின்றனவே தவிர, மருத்துவத் தேவைக்கான தீர்வாக அமையவில்லை. மாறாக, காப்பீட்டு நிறுவனங்களும் பெரும் "கார்ப்பரேட்' மருத்துவமனைகளும் பெரிய அளவில் பலனடைய வழிகோலுகின்றன.

இந்தியா எதிர்கொள்ளும் மிகப் பெரிய மருத்துவ சவால்கள் மூன்று - ஒன்று "டயபடீஸ்' எனப்படும் சர்க்கரை நோய்; இரண்டாவது "கேன்சர்' எனப்படும் புற்றுநோய்; மூன்றாவது இதயம் தொடர்பான பிரச்னைகள். இவை மூன்றுமே தொற்று நோய்கள் அல்ல என்பது ஆறுதல். ஆனால், பெரிய அளவில் இந்திய மக்களைப் பாதிக்கின்றன என்ற நிலை மிரளச் செய்கிறது.

தேசியப் புற்றுநோய் கணக்கெடுப்புத் திட்டத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்டது. 2025-இல்

இந்தியாவில் 15.7 லட்சம் புதிய புற்றுநோயாளிகள் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கிறது அந்தக் கணக்கெடுப்பு. 2040-க்குள், புதிய புற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர்கள் ஆண்டொன்றுக்கு 22.4 லட்சம் என்ற அளவில் அதிகரிக்கக் கூடும் என்றும் எச்சரிக்கிறது அந்தத் திட்ட அறிக்கை.

புற்றுநோய் பாதிப்புகள் அதிகரிக்க அதிகரிக்க, அதனால் பல குடும்பங்கள் வறுமைக்குத் தள்ளப்படுவது மட்டுமல்லாமல், நிலைகுலைந்து நடுத்தெருவுக்கு வருகின்றன. அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு புற்றுநோய்க்கான சிகிச்சைப் பிரிவுகளும், அதற்கேற்றவாறு சிகிச்சை வசதிகளும் இல்லாமல் இருப்பதால் அவர்கள் வேறு வழி இல்லாமல் தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறார்கள். தனியார் மருத்துவமனை கட்டணங்களுக்கும், அரசு வழங்கும் மருத்துவக் காப்பீடுகளுக்கும் இடையே மிகப் பெரிய இட்டு நிரப்ப முடியாத இடைவெளி காணப்படுகிறது.

புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துவச் செலவு என்பது மலைப்பை ஏற்படுத்தும். தனியார் மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கான ஒரு சுற்று "கீமோ தெரப்பி' சிகிச்சைக்கான கட்டணம் ரூ. 30,000-இல் இருந்து, மருத்துவமனைகளின் தரத்துக்கு ஏற்ப ரூ. 2 லட்சம் வரை நிர்ணயிக்கப்படுகின்றன.

கதிரியக்கச் சிகிச்சைக்கு (ரேடியேஷன் தெரப்பி) ரூ. 2 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை செலவாகும். புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கான தனியார் மருத்துவமனைச் செலவு ரூ. 3 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை;

குறிப்பிட்ட சிகிச்சைகள், இம்யூனோ தெரப்பி போன்றவற்றுக்கு ரூ. 1 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை; போன்மேரோ மாற்று சிகிச்சையாக இருந்தால் ரூ. 15 லட்சம் முதல் ரூ. 40 லட்சம் வரை-அப்பாவி ஏழை நோயாளிகள் என்ன செய்வார்கள்?

புற்றுநோய்க்கு உள்ளான 75% நோயாளிகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மேலே குறிப்பிட்ட சிகிச்சைகள் தேவைப்படுகின்றன. அரசின் மருத்துவக் காப்பீடு என்பது யானைப் பசிக்கு சோளப் பொரி என்பதாகத்தான் இருக்கும். மருத்துவத்துக்கான தனி நபர் செலவு குறைந்திருக்கிறது என்று அரசுப் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பது ஒட்டுமொத்தக் கணக்கு; அது தனியார் துறைக் காப்பீட்டு நிறுவனங்களின் உயர் வருவாய் பிரிவினர் இணைந்திருப்பதையும் சேர்த்த கணக்கீடு.

கார்ப்பரேட் மருத்துவமனைகளின் வருமானம் சுமார் 20% முதல் 25% வரை புற்றுநோய் தொடர்பான "ஆன்காலஜி' பிரிவிலிருந்து பெறப்படுகிறது. எடுத்துக்காட்டாக, புற்றுநோய் சிகிச்சையில் முன்னிலை வகிக்கும் மேக்ஸ் ஹெல்த்கேர் (25%), அப்போலோ (17%) மருத்துவமனைக் குழுமங்களின் வருவாயைக் குறிப்பிடலாம். அதனால்தான், சிறு சிறு மருத்துவமனைகள்கூடப் புற்றுநோய் சிகிச்சைக்கான பிரிவைத் தொடங்க முற்பட்டிருக்கின்றன.

மருத்துவம் தனியார் துறைக்கு விடப்படுவதில் தவறில்லை. ஆனால், சாமானியர்களுக்குத் தரமான மருத்துவத்தை அரசு மருத்துவமனைகள் வழங்குவதை உறுதிப்படுத்தாமல் இருப்பது தவறு.

தங்களுக்குப் போட்டியாக அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்படுவதை கார்ப்பரேட் மருத்துவமனைகள் தடுக்கின்றன என்ற குற்றச்சாட்டை பொய்யாக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு.

அரசு மருத்துவமனைகளை, கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு மாற்றாக மாற்ற வேண்டும். இலவசக் காப்பீடு, அரசு மருத்துவமனை மேம்பாட்டுக்கு மாற்றாகி விடாது.

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்

தம்நோய்போல் போற்றாக் கடை?

மற்ற உயிரின் துன்பத்தைத் தன் துன்பம்போல் கருதிக்

காப்பாற்றாவிட்டால், பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ?

திருக்குறள் (எண் 315) அதிகாரம்: இன்னா செய்யாமை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments