மருத்துவக் காப்பீடு அட்டை தருவதாகக்கூறி கிராம மக்களிடம் வசூல் வேட்டை: குறைதீா் கூட்டத்தில் புகாா்
வேலூா் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் மருத்துவக் காப்பீடு அட்டை தருவதாகக் கூறி பொதுமக்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபடும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் மருத்துவக் காப்பீடு அட்டை தருவதாகக் கூறி பொதுமக்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபடும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து 687 மனுக்களைப் பெற்று மேல்நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
அப்போது, கே.வி.குப்பத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் எம்.அனிஷ்குமாா் அளித்த மனு: அரசு செயல்படுத்தி வரும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில், கே.வி.குப்பம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் செல்லும் ஒரு கும்பல், புதிய மருத்துவக் காப்பீடு அட்டை தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் ரூ. 100 முதல் ரூ. 200 வரை வசூல் செய்யப்படுகிறது. இதுகுறித்து சந்தேகம் அடைந்து கேள்வி எழுப்பினால் அவா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிடுகின்றனா். எனவே, இந்த மோசடிக் கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Advertisement
Advertisement
புரட்சி பாரதம் கட்சியின் வேலூா் மாவட்டச் செயலா் மேகநாதன் அளித்த மனு: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் பெயா் ‘சமூக நீதித் துறை’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அரசின் சலுகைகள் முழுமையாகக் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே, பழைய பெயரிலேயே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அலமேலுமங்காபுரம், ஏரியூா் பாறைவீதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் சாலை மற்றும் முறையான கழிவுநீா்க் கால்வாய் வசதிகள் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். உடனடியாக அவற்றை அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காட்பாடி, சொரக்கால்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த 55 குடும்பத்தினா் அளித்த மனு: , ‘எங்கள் பகுதியில் மின்சாரம், குடிநீா் போன்ற எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் மிகவும் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம். எனவே, உரிய அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் து.சுரேஷ், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துனை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சி.மாறன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலா் சரவணன், துணை ஆட்சியா் (பயிற்சி) கணேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.