FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சேவை தடைபடக் கூடாது!

பெரும்பாலான ஏடிஎம் இயந்திரங்கள் பெரும்பாலான நேரத்தில் வேலை செய்வதில்லை. அப்படியே வேலை செய்தாலும் அவற்றில் பணம் இருப்பதில்லை.

24 ஜூன் 2026, 2:30 am IST
பகிர்:

எப்போது வேண்டுமானாலும் பணம் என்று பொருள்படும் 'ஏடிஎம்' என்கிற 'எனி டைம் மணி ' இயந்திரம் இப்போது நமது அன்றாட வாழ்க்கையின் பகுதியாகவே மாறி விட்டது. தானியங்கிப் பணம் வழங்கும் இயந்திரம் என்று தமிழ்ப் படுத்தப்படுகிற 'ஏடிஎம்' இப்போது பொதுமக்களின் பரவலான எரிச்சலுக்கும், கோபத்துக்கும் உள்ளாகி வருகிறது. காரணம் வேறொன்றுமில்லை; பெரும்பாலான இயந்திரங்கள் பெரும்பாலான நேரத்தில் வேலை செய்வதில்லை. அப்படியே வேலை செய்தாலும் அவற்றில் பணம் இருப்பதில்லை.

உலகின் முதல் 'ஏடிஎம்' 1967-இல் பார்க்லேஸ் வங்கியால் லண்டனில் நிறுவப்பட்டது. அது இந்தியாவுக்கு வர மேலும் 20 ஆண்டுகள் பிடித்தன. 1987-இல் ஹெச்.எஸ்.பி.சி. வங்கி மும்பையில் இந்தியாவின் முதல் 'ஏடிஎம்' மையத்தை அறிமுகப்படுத்தியபோது, அதை வேடிக்கை பார்ப்பதற்காகவே நூற்றுக்கணக்கானவர்கள் அன்றாடம் கூடினார்கள். அந்த வங்கியில் புதிதாகக் கணக்குத் தொடங்கினார்கள்.

வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களும், கடன் அட்டை பயன்படுத்துவோரும் 'ஏடிஎம்' மூலம் பல்வேறு பரிவர்த்தனைகளை நடத்துபவர்களாகவே இருக்கிறார்கள். இந்தியாவில் இப்போது 2.51 லட்சம் ஏடிஎம் மையங்கள் செயல்படுகின்றன. அதாவது பத்தாயிரம் பேருக்கு 24 'ஏடிஎம்' இயந்திரங்கள் இருக்கின்றன. உலக சராசரி 44 'ஏடிஎம்' எனும்போது, இன்னும் அதிகமான 'ஏடிஎம்' மையங்கள் நிறுவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

Advertisement

Advertisement

அப்படி இருக்கும்போது, அண்மைக்காலமாக 'ஏடிஎம்' மையங்களில் 'பணமில்லை' என்கிற அறிவிப்பும், 'சேவைத் தடை' என்கிற அறிவிப்பும் வாடிக்கையாளர்களை ஆத்திரமூட்டுகின்றன. புழக்கத்தில் இருக்கும் ரொக்கத்தின் அளவு ஆண்டொன்றுக்கு 12% அதிகரிப்பதாகவும், இதுவரையில் இல்லாத அளவிலான ரூ. 42.56 லட்சம் கோடியைக் கடந்திருப்பதாகவும் ரிசர்வ் வங்கி அறிவிக்கும்போது, 'ஏடிஎம்' மையங்களில் ரொக்கப் பணத்துக்கான வறட்சி ஏற்பட என்னதான் காரணமாக இருக்க முடியும்?

ரொக்கப் பணமல்ல பிரச்னை; பணத்தை 'ஏடிஎம்' மையங்களுக்கு எடுத்துச் சென்று நிரப்புவதும், 'ஏடிஎம்' மையங்களைப் பராமரிப்பதும்தான் பிரச்னை. 'ஏடிஎம்' மையங்களை நிறுவுவது போலவே, அதைப் பராமரித்து செயல்படுத்துவதும் கடுமையான செலவை எதிர்கொள்வதுதான் அதற்குக் காரணம்.

'ஏடிஎம்' மையங்களில் 'ஏ.சி.' வசதி இருக்க வேண்டும்; தொடர்ந்து 24 மணி நேரமும் அந்த மையத்தைக் கண்காணிக்கக் காவலாளி இருக்க வேண்டும்; அவ்வப்போது, தொடர்ந்து 'ஏடிஎம்' இயந்திரத்துக்குப் பணம் கொண்டு செல்லப்பட்டுநிரப்பப்பட வேண்டும். இதற்கான செலவுகள் ஆண்டாண்டுக்கு அதிகரித்து வருகின்றன.

2008 வரையில் வங்கிகள் ஏடிஎம் பயன்பாட்டுக்கான கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டன. அதில் வங்கிக்கு வங்கி, கட்டண வேறுபாடு காணப்பட்டதைத் தொடர்ந்து ஏனைய வங்கியின் அட்டைகளில் பணம் வழங்குவதற்கு ரூ. 18 கட்டணம் நிர்ணயித்தது ரிசர்வ் வங்கி. 2012-இல் அந்தக் கட்டணம் ரூ. 15 -ஆகக் குறைக்கப்பட்டு, பணப்பரிமாற்றம் அல்லாத தகவல்களுக்கு ரூ. 5 என நிர்ணயிக்கப்பட்டது.

2014-இல் ஏடிஎம் அமைத்திருக்கும் வங்கி அட்டைதாரர்களின் பரிமாற்றங்கள் ஐந்துக்கும், அவர்கள் ஏனைய வங்கி ஏடிஎம்-இல் நடத்தும் பரிமாற்றங்கள் மூன்றுக்கும் மட்டுமே கட்டண விலக்கு வழங்கப்பட்டது. அதற்கு மேலான பரிமாற்றங்களுக்கு ரூ. 20 வசூலிக்கப்பட்டது. 2019-இல் இந்தக் கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரையின் அடிப்படையில், பத்தாண்டுகளுக்குப் பிறகு நிதிப் பரிமாற்றக் கட்டணம் ரூ. 17 என்றும், தகவல்களுக்கு ரூ. 6 எனவும் நிர்ணயிக்கப்பட்டன.

2025-இல் அந்தக் கட்டணங்களை ரூ. 19, ரூ. 7 என்று நிர்ணயிக்க ரிசர்வ் வங்கி அனுமதித்தது. இலவசமல்லாத பரிமாற்றங்களுக்கான அதிகரித்த கட்டணம் ரூ.23 என்று நிர்ணயிக்கப்பட்டது. விலைவாசி உயர்வைக் கணக்கில் கொண்டு பார்த்தால், குறைந்தபட்சம் ரூ. 30 வசூலித்தால்தான் 'ஏடிஎம்' சேவையை வங்கிகள் நஷ்டமில்லாமல் தொடர முடியும்.

அதனால்தான் வங்கிகள் ஏடிஎம்-இல் தொடர்ந்து பணம் நிரப்புவதில் அக்கறை செலுத்துவதில்லை என்று தெரிகிறது. 2025 நவம்பரில் தேவையில் 80% பணமும், 2026 மார்ச்சில் 64%, மே மாதத்தில் 57% என்ற அளவில்தான் ஏடிஎம் மையங்களுக்கு ரொக்கம் அனுப்பப்பட்டிருக்கிறது. தேசிய அளவில் 'ஏடிஎம்' மையங்கள் செயல்பட மாதமொன்றுக்கு ரூ. 8,94,000 கோடி ரொக்கம் தேவைப்படும் நிலையில், ரூ. 54,000 கோடி வழங்கப்பட்டிருப்பதால்தான் பல ஏடிஎம்களில் பணமில்லாத நிலைமை காணப்படுகிறது.

யுபிஐ எனப்படும் எண்மப் பரிவர்த்தனை என்றாகிவிட்ட நிலையில் 'ஏடிஎம்' என்பது தேவையற்றது என்று வங்கிகள் நினைத்தால் தவறு. மின் தூக்கிகளும் (லிஃப்ட்), நகரும் படிக்கட்டுகளும் (எஸ்கலேட்டர்கள்) வந்து விட்டன என்பதற்காக மாடிப்படிகள் அமைக்காமல் இருக்க முடியாது.

அருகருகிலேயே அமைந்திருக்கும் வங்கி ஏடிஎம்களின் எண்ணிக்கையைக் குறைத்து, பரவலாக எல்லா இடங்களிலும் செயல்படும் ஏடிஎம்களை, சற்று அதிகரித்த சேவைக் கட்டணத்துடன் உறுதிப்படுத்துவதுதான் இதற்கான தீர்வு.

அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்.

இது செய்வதற்கு அருமையானது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும்; அதைச் செய்வதற்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.

திருக்குறள் (எண் 611) அதிகாரம்: ஆள்வினை உடைமை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments