11.8.1976: வோட் போடும் வயதை குறைக்க பெரும்பாலான மாநிலங்கள் எதிர்ப்பு
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
புதுடில்லி, ஆக. 10 - தேர்தல்களில் வோட்டுப் போடுவதற்கான வயதை 21-லிருந்து 18-க்குக் குறைப்பதை பெரும்பாலான மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் ஆதரிக்கவில்லை. இது சம்பந்தமாக மத்திய அரசுக்குத் தங்களுடைய கருத்துக்களை 22 மாநில, யூனியன் பிரதேச அரசுகள் தெரிவித்துள்ளன. இவற்றில் 20, அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் வாக்குரிமை வயதைக் குறைப்பதற்கான கமிட்டியின் சிபாரிசை எதிர்த்துள்ளன.
வாக்குரிமை வயதைக் குறைப்பதை குஜராத் மாநில அரசு ஆதரித்துள்ளது. தமிழ்நாடு அரசு தான் இதை எதிர்க்கவில்லை என்று கூறியிருக்கிறது. இந்த யோசனையை முதலமைச்சர்களின் மகாநாடொன்றில் விவாதிக்கலாம் என்று கூறியுள்ளது. ஆனால், இது இந்திய அரசு முடிவு செய்ய வேண்டிய கொள்கை விஷயமாகும் என்றும் கூறியுள்ளது.
பீஹார், ஜம்மு - காஷ்மீர், மகாராஷ்டிரா, மணிப்பூர், நாகாலாந்து, பஞ்சாப், அருணாசல், தாத்தரா நாகர்ஹவேலி, ஆகியவை இன்னமும் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை . வாக்குரிமை வயதைக் குறைப்பதானது, பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று இதை எதிர்க்கும் மாநிலங்கள் கூறியுள்ளன. இந்த வயதுத் தொகுதியில் உள்ளவர்கள், தங்களுடைய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை ஏற்கும் முதிர்ச்சி பெற்றவர்களாயிருக்க மாட்டார்கள் என்று கர்நாடக அரசு கூறியிருக்கிறது. வாக்குரிமை வயதைக் குறைப்பதானது. அமைதியான கல்விச் சூழ்நிலைமையில், அரசியலைப் புகுத்தி, மாணவர்களின் படிப்பில் குறுக்கிடும் என்று அநேக மாநிலங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன.
Advertisement
Advertisement
18, 21 வயது, தொகுதியிலுள்ளவர்களிடம் சிந்தனை முதிர்ச்சி, கருத்தில் உறுதி, தெளிவானக் கருத்துக்கள் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்று கேரள அரசு கூறியுள்ளது.
வாக்குரிமை வயதைக் குறைப்பதானது, செகண்டரி பள்ளிக் கூட மாணவர்களுக்குக் கூட வோட்டுரிமையை வழங்கும் என்று மத்தியப் பிரதேசம் கூறியுள்ளது. இதனால் மாணவர்களிடையே கட்சி அரசியல் புகும் அபாயம் இருப்பதாக மேகாலயா அஞ்சுகிறது. இது மாணவர்களின் கவனத்தைப் படிப்பிலிருந்து திருப்புவதுடன், வாக்காளர்களின் தொகையை அதிகமாக உயர்த்தும் என்று கூறி ஒரிஸ்ஸா ஆட்சேபித்துள்ளது. வயது வரம்பைக் குறைப்பதால், வோட்டர்களின் எண்ணிக்கை 20 முதல் 30 சதவிகிதம் அதிகரித்து, தேர்தல் செலவு ஏராளமாக அதிகரிக்கும் என்று உ.பி. கூறியுள்ளது.
பெண்ணின் கற்பைக் காக்க தன் கணவனைக் கொன்ற தாய் விடுதலை
திருச்சி. ஆக, 10 - தன் கணவன் தன்னுடைய மகளின் கற்பை அழிக்கும் முயற்சியினின்றும் தடுக்க, கணவனைக் கொன்ற பெண்மணியை திருச்சி ஜில்லா செஷன்ஸ் நீதிபதி வி. ஆஞ்சநேயலு விடுதலை செய்தார்.
இந்திய பீனல்கோட் 100-வது செக்ஷன் கீழ், தனி நபருக்குள்ள தற்காப்பு உரிமையை வழங்கி, அப்பெண்மணியை விடுதலை செய்தார்.
முசிரி தாலூக்கா கல்லுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியாண்டிமுத்துராஜா. அவர் சாராயம் காய்ச்சி விற்பவர். அவரே குடிப்பழக்கம் உள்ளவர். 11-4-76 இல் அவர் முழுக் குடிப்போதையில் வீட்டு வராந்தாவில் படுத்து கொண்டிருக்கையில் ஆபாச சம்பவம் நடந்தது. ...
11.8.1976: Most states oppose lowering the voting age.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.