FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தலையங்கம்

நீதிக்கான மல்யுத்தம்!

விளையாட்டு வீராங்கனைகள் சர்வதேச அரங்குகளில் பதக்கங்களை வெல்லும்போது ஆரவாரம் செய்கிறோம். அவர்களை வானளாவப் புகழ்கிறோம். ஆனால், வினேஷ் போகத்போல, விளையாட்டு சங்கங்களால் பழிவாங்கப்படும்போது, மெளனமாக இருக்கிறோம்.

Updated On : 30 மே 2026, 6:00 am IST
வினேஷ் போகத்
பகிர்:

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்குப் பெருமை தேடித்தரும் விளையாட்டு வீரர்களின் மீது தங்களது ஆதிக்கத்தை அரசியல்வாதிகள் நிலைநாட்ட முற்படுவதை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்தியாவில் உள்ள ஏறத்தாழ 60 விளையாட்டு சங்கங்களின் தலைமைப் பொறுப்பில் அரசியல்வாதிகள் இடம் பிடித்து விடுகிறார்கள். நீதிமன்றத் தலையீட்டையும் மீறி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உள்பட எல்லா விளையாட்டு சங்கங்களிலும் அவர்களது ஆதிக்கம்தான் கொடி கட்டிப் பறக்கிறது.

ஒவ்வொரு விளையாட்டுக்காகவும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் விளையாட்டு சங்கங்கள், அந்தந்த விளையாட்டை மேம்படுத்துவதிலும், அதனுடன் தொடர்புடைய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளின் நலனைப் பேணுவதிலும்தான் முனைப்புக் காட்ட வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. அது உண்மையாக இருக்குமானால், விளையாட்டு வீரர்கள் தங்களது விளையாட்டு சங்கங்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது.

பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை (மே 29) பிறப்பித்த உத்தரவு, நமது விளையாட்டு சங்கங்களில் நிலவும் அரசியல் மேலாதிக்கத்தையும், வீரர்-வீராங்கனைகளுக்கு இழைக்கப்படும் அநீதியையும் மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டிருக்கிறது. விளையாட்டுக்காக மட்டுமல்ல, நியாயத்தின் அடிப்படையிலும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தகுதித் தேர்வில் கலந்து கொள்ள வினேஷ் போகத் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

Advertisement

Advertisement

வினேஷ் போகத் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய மல்யுத்த சங்கத்துடன் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார். அவர் போராடிக் கொண்டிருக்கிறார் என்பதைவிட அவரை அந்த சங்கம் போராட வைக்கிறது என்பதுதான் உண்மை. இத்தனைக்கும் அவர் ஏதோ கத்துக்குட்டி வீராங்கனையோ அல்லது வளர்ந்து வரும் மல்யுத்த வீராங்கனையோ அல்ல.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதன்முறையாகத் தங்கப் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். மூன்று தடவை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றதுடன், மூன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்தியா சார்பாகப் பங்கேற்றவர். 2023-இல் மல்யுத்த வீராங்கனைகளுக்கு, மல்யுத்த சங்கத்தின் அன்றைய தலைவர் பிரிஜ்பூஷண் சரண்சிங் அளித்த பாலியல் தொந்தரவுகளுக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் நடத்திய போராட்டத்தில் முன்வரிசையில் இருந்தார் என்பதுதான் அவர் செய்த தவறு.

இந்திய மல்யுத்த சங்கத்தைத் தனது வீட்டு முகவரியில் இருந்து நடத்தி வந்தவர் பிரிஜ் பூஷண் சரண்சிங். அவர் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவரும்கூட. அவர் மீது வழக்கு நிலுவையில் இருப்பதால் அவரது மகன் அந்தத் தொகுதியில் எம்.பி.யாக இருக்கிறார். சங்கத்தின் அலுவலகம் இப்போது மீண்டும் அவரது முகவரியில் இருந்துதான் இயங்குகிறது.

2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில், மல்யுத்த சங்கத்துக்கு எதிராகப் போராடித்தான் வினேஷ் போகத்தால் பங்கேற்க முடிந்தது. 50 கிலோ பிரிவில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் நிலையில் போகத் இருந்தார். அந்தப் போட்டிக்கான உடல் எடை அவருக்கு 100 கிராம் அதிகம் என்றுகூறி இறுதிப் போட்டிக்கு முன்பாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டபோதும், அவருக்குப் பதக்கம் மறுக்கப்பட்டபோதும், ஒட்டுமொத்த விளையாட்டு உலகமே அதை அநீதி என்று எதிர்த்தது. அவருக்காக அணி திரண்டது.

ஆனால், அவருக்காக வாதிட வேண்டிய, உறுதுணையாக இருக்க வேண்டிய இந்திய மல்யுத்த சங்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டது. சோகத்துடன் நாடு திரும்பிய அந்த வீராங்கனைக்கு ஆறுதல் வழங்கும் வகையில் பிரம்மாண்ட வரவேற்பு வழங்கி இருக்க வேண்டும். ஆனால், அவர் தனது உடல் எடையை (100 கிராம்) குறைத்துக் காட்டி விட்டார் என்று சங்கம் விமர்சித்தது. இதிலிருந்து எந்த அளவுக்கு வினேஷ் போகத்துக்கு எதிராக இந்திய மல்யுத்த சங்கம் வன்மம் காட்டுகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

இப்போது 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்கான தகுதிப் போட்டிக்கு அவர் அனுமதிக்கப்படவில்லை. பிரசவத்துக்குப் பிறகு மீண்டும் விளையாடத் தயாரான வினேஷ் போகத், தாய்மை அடைந்துவிட்டதால் அனுமதிக்கப்படவில்லை என்பது சங்கத்தின் விசித்திரமான விளக்கம். இது எந்த அளவுக்கு வஞ்சம் தீர்க்கும் வகையிலான முடிவு என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இதற்கு முன்பு மேரி கோம் ஒலிம்பிக் உள்ளிட்ட பல சர்வதேசப் போட்டிகளில் தாய்மைக்குப் பின் பங்கேற்று பதக்கங்களை வென்றிருக்கிறார். சானியா மிர்சா டென்னிஸ் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார். செரீனா வில்லியம்ஸ், ஆலிஸன் ஃபெலிக்ஸ் உள்ளிட்ட பல வீராங்கனைகள் தாய்மைக்குப் பிறகும் தொடர்ந்து சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார்கள். அதனால், தாய்மைப் பேற்றை அடைவது என்பது ஒருவருக்கு குறையாகவோ, அவரது பங்கேற்புக்குத் தடையாகவோ இருக்க முடியாது.

நமது விளையாட்டு வீராங்கனைகள் சர்வதேச அரங்குகளில் பதக்கங்களை வெல்லும்போது ஆரவாரம் செய்கிறோம். அவர்களை வானளாவப் புகழ்கிறோம். ஆனால், வினேஷ் போகத்போல, விளையாட்டு சங்கங்களால் பழிவாங்கப்படும்போது, மெளனமாக இருக்கிறோம். நீதிமன்றங்களை அவர்கள் நாட வேண்டிய அவலத்தை வேடிக்கை பார்க்கிறோம். பொது சமூகத்தின் இந்தப் போலித்தனம்தான், விளையாட்டு சங்கங்களில் நிலவும் அரசியலுக்கும், ஆணாதிக்கத்துக்கும், அதிகார துஷ்பிரயோகத்துக்கும் வழிகோலுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments