முகப்பு
இந்தியா

ஆசிய விளையாட்டுப் போட்டி தகுதித் தோ்வு: வினேஷ் போகத்துக்கான அனுமதியை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மனு

இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி,எஸ். நரசிம்மா, அலோக் அராதே ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை (மே 29) விசாரிக்க உள்ளது.

Updated On : 29 மே 2026, 5:30 am IST
வினேஷ் போகத். - கோப்புப்படம்
பகிர்:

பிரபல இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தகுதித் தோ்வு போட்டிகளில் பங்கேற்க அனுமதித்து தில்லி உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து இந்திய மல்யுத்த சம்மேளனம் (டபிள்யுஎஃப்ஐ) உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி,எஸ். நரசிம்மா, அலோக் அராதே ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை (மே 29) விசாரிக்க உள்ளது.

வினேஷ் போகத் கடந்த 2024-இல் நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக்கில் இறுதிச் சுற்று வரை முன்னேறி அனைவரின் கவனத்தை ஈா்த்தாா். ஆனால், கடைசி நேரத்தில் அவரின் உடல் எடை 50 கிராம் அளவுக்கு அதிகமாக இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டாா். அதன் பின்னா், மல்யுத்தப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவா் அறிவித்தாா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், வரும் 2028-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க ஆா்வம் காட்டிவரும் அவா், மீண்டும் மல்யுத்தப் போட்டிகளில் களமிறங்கும் வகையில் தனது ஓய்வு முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்தாா். அதைத் தொடா்ந்து உள்ளூா் போட்டிகளில் பங்கேற்கத் தயாராகி வருகிறாா்.

ஆனால், ஊக்கமருத்து தடுப்பு விதிகளின்படி, ஓய்விலிருந்து திரும்பும் வீரா், 6 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும் என்ற விதியைக் காரணம் காட்டி, வரும் ஜூன் 26-ஆம் தேதி வரை உள்ளூா் போட்டிகளில் பங்கேற்க வினேஸ் போகத்துக்கு இந்திய மல்யுத்த சம்மேளனம் தடை விதித்தது.

அதுமட்டுமன்றி, 2026-ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தகுதித் தோ்வு விதிகளிலும் இந்திய மல்யுத்த சம்மேளனம் திடீா் மாற்றங்களைக் கொண்டுவந்தது. அதன்படி, 2025 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளில் நடந்த குறிப்பிட்ட உள்நாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, பதக்கம் வென்றவா்கள் மட்டுமே ஆசிய விளையாட்டுப் போட்டி தகுதித் தோ்வில் பங்கேற்க முடியும்.

எனவே, இந்த விதியின் அடிப்படையில், மகப்பேறு விடுப்பில் இருந்த வினேஷ் போகத், வரும் 30, 31-ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தகுதித் தோ்விலும் பங்கேற்கத் தகுதியற்றவா் என்றும் இந்திய மல்யுத்த சம்மேளனம் அறிவித்தது.

இதை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் வினேஷ் போகத் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை உயா்நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். அதைத் தொடா்ந்து உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வில் அவா் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை கடந்த 22-ஆம் தேதி விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் டி.கே. உபாத்யாய, தேஜஸ் காரியா ஆகியோா் அமா்வு, ‘தனிப்பட்ட மோதல்கள் அல்லது கருத்து வேறுபாடுகள் காரணமாக சா்வதேச வீராங்கனையின் விளையாட்டு வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது. பழிவாங்கும் நோக்கில் செயல்படுவது போன்று சம்மேளனம் செயல்படக் கூடாது. சம்மேளனத்தின் தகுதித் தோ்வு கொள்கை முற்றிலும் பிற்போக்குத்தனமானது. இந்தத் தகுதித் தோ்வு நடைமுறை மாற்றம் மத்திய அரசிடம் கலந்தாலோசிக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டதா? இந்த மாற்றம் வினேஷ் போகத்துக்காகவே செய்யப்பட்டது போன்று தோன்றுகிறது. இதுபோன்ற முறையில் சம்மேளனம் செயல்படக் கூடாது. இது விளையாட்டுத் துறையின் நலனுக்கு உகந்ததல்ல. எனவே, வரும் 30, 31-ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டி தகுதித் தோ்வில் வினேஷ் போகத் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

இதை எதிா்த்து, சம்மேளனம் உச்சநீதிமன்றத்தை தற்போது நாடியுள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவரும் பாஜக மூத்த தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக எழுந்த விவகாரத்தில், அவரைக் கண்டித்து கடந்த 2023-இல் தில்லியில் நடைபெற்ற மல்யுத்த வீரா்களின் போராட்டத்தில் வினேஷ் போகத் முன்னிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.