இடியாப்ப சிக்கலில் இந்தியா!
காலநிலை மாநாடுகளில் கலந்து கொள்ளும் இந்தியா, நிலக்கரி சாரா மின் உற்பத்தியைப் பெருக்குவதற்கு ஒப்புதல் அளித்து வருகின்ற நிலையில், இப்போது நிலக்கரி சுரங்கத்துக்கு அனுமதி அளிப்பது ஏன்?
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சத்ரா மாவட்டத்தின் அடர்வனப் பகுதியில் 928 ஹெக்டேர் பரப்பில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாறுதல் துறை அமைச்சகம் அனுமதித்துள்ளது.
இங்கே ஏற்கெனவே உள்ள நிலக்கரி சுரங்கத்தின் விரிவாக்கம்தான் இந்தத் திட்டம். இதற்கு மாநில அரசு ஒப்புதல் தேவை. மாநில அரசு நிச்சயமாக ஒப்புதல் வழங்கும். ஏனெனில், உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பின்படி, ஒரு மாநிலத்தின் கனிமப் பொருள்களை வெட்டியெடுக்கும்போது, அந்தக் கனிமப்பொருள்களின் விலைமதிப்பில் ஒரு தொகையைப் பெற மாநிலத்துக்கு உரிமை உள்ளது.
Advertisement
Advertisement
அதனால், மாநில அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை இழக்க விரும்பாது. அந்தப் பணத்தில் புதிய திட்டங்கள் அறிவிக்கலாம். மக்கள் நல்வாழ்வு என்கிற பெயரில் இலவசங்களை அள்ளி வழங்கலாம்.
இந்தத் திட்டம் அமலாகும் என்றால், இந்த அடர்வனத்தின் 5.6 லட்சம் மரங்களை வெட்டி அகற்ற வேண்டியிருக்கும். இவற்றில் சுமார் 2.40 லட்சம் மரங்கள் சால் (குங்கிலிய) மரங்கள். இது திறந்தவெளிச் சுரங்கம் என்பதால், இந்த மரங்களை வெட்டி அகற்றாமல் சுரங்கம் தோண்ட முடியாது.
இந்த அடர்வனப் பகுதியில் ஏற்கெனவே யானைகள்-மனிதர்கள் மோதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் சுமார் 1,340 பேர் யானைகள் தாக்கி உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டில் மட்டும், இதுவரை 20 பேர் பலியாகியுள்ளதாக மாநில வனத் துறை கூறுகிறது.
இந்தப் பகுதியில் யானைப் பாதைகள் மறிக்கப்பட்டதாலும், அதன் வாழ்விடம் சுருங்கியதால் உணவு தேடி யானைகள் வெளியிடங்களுக்கு தடம் மாறி வருவதாலும் இந்தச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இப்போது, மேலும் 928 ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டால், யானைகள் வாழ்விடம் மேலும் குறுகிவிடும். அவற்றின் தேடல் பரப்பும், மனிதர்களின் மீதான வெறித் தாக்குதலும் மேலும் அதிகரிக்கும்.
மரங்கள் அழிக்கப்பட்டால் யானைகள் மட்டுமின்றி, அந்தப் பகுதியில் வாழும் அனைத்து உயிரினங்களின் வாழ்விடங்களும் குறுகிவிடும். இங்கு வங்க நரிகள், கழுதைப்புலி, அரிய வகை மலைப் பாம்புகள் பல அரிய வகை பறவை இனங்களும் வாழ்விடம் தேடி, பிற இடங்களுக்குச் செல்லும்; மேலும், பல்லுயிர்ப் பெருக்கம் பாதிக்கப்பட்டு, இனஅழிப்பு அரங்கேறும்.
கரியமில வாயு அதிகரிப்பால் பனிப்பாறைகள் உருகும்போது புவிவெப்பம் அதிகரிக்கிறது என்று நாம் கதறுவதைப் போல, அந்தப் பகுதியை சார்ந்துள்ள வடதுருவக் கரடிகளும் கதறுகின்றன. ஆனால், அது நம் காதில் விழுவதில்லை. பனிக்கரடிகள் வாழ்விடம் இல்லாமல், இனப்பெருக்கம் குறைந்து, மெல்ல மெல்ல அருகிவரும் உயிரினமாக மாறுகின்றன. 2025-ஆம் ஆண்டில் நடைபெற்ற 'பல்வகை உயிர்களின் பரவல்' என்ற தலைப்பிலான ஆய்வுகளின் முடிவின்படி, 196 வகையான நிலம் மற்றும் நீர்வாழ் உயிரினங்களில் 91 சதவீதம் தங்கள் வாழ்விடத்துக்கு வெளியே புதிய இடங்களைத் தேடிச் சென்று வாழ்கின்றன என்று தெரியவந்துள்ளது.
இவ்வாறு வன உயிரினங்கள் தங்கள் வாழ்விடத்தை இழந்து, புதிய பரப்புக்கு மாறிச் செல்லும் நிலை விலங்குகளிடம் 17 கி.மீ. தொலைவு வரை நடைபெறுகிறது; பறவை இனங்களில் இது 11 கி.மீ. ஆக உள்ளது.
2030-ஆம் ஆண்டு மின் உற்பத்தியில் 50 சதவீத தேவையை நிலக்கரி சாராத மின்திட்டங்களில் இருந்து உற்பத்தி செய்யும் இலக்கை 2025-ஆம் ஆண்டில், அதாவது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே அடைந்துவிட்டோம் என்று பெருமை பேசினாலும், அனல்மின் நிலையத் தேவைக்கான நிலக்கரி பயன்பாடு குறையவில்லை; 0.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
அனல்மின் நிலையங்களில் நிலக்கரி பயன்பாடு மற்றும் கரியமில வாயு வெளிப்பாட்டில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்து வருகிறது. சீனா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாம் இடத்திலும் உள்ளன.
அனல்மின் நிலையங்களில் இந்தியா 3.4 பில்லியன் டன் நிலக்கரியைப் பயன்படுத்தி வருகிறது. உலக அளவில் கரியமில வாயு வெளிப்பாட்டில் இந்தியாவின் பங்கு 8.4 சதவீதமாக உள்ளது.
நிலக்கரி பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று எல்லாரும் பேசும் சூழ்நிலையில், நிலக்கரி தொழில்நுட்பத்தில் மின்சாரம் தயாரிக்க, நிலக்கரி சுரங்கத்தை புதிதாக தோண்டுவதற்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது.
காலநிலை மாநாடுகளில் கலந்து கொள்ளும் இந்தியா, நிலக்கரி சாரா மின் உற்பத்தியைப் பெருக்குவதற்கு ஒப்புதல் அளித்து வருகின்ற நிலையில், இப்போது நிலக்கரி சுரங்கத்துக்கு அனுமதி அளிப்பது ஏன்?
மரபுசாரா மின்உற்பத்தி முறைகளுக்கு மாறுவதில் சிரமங்கள் உள்ளன. புதிய அணைகள் கட்டி புனல் மின்சாரம் தயாரிப்பது, சுற்றுச்சூழலைப் பாதிக்காது என்றாலும், சூழலியலைப் பாதிக்கும். அதற்கும் பல ஏக்கர் வனப் பரப்பை அழித்தாக வேண்டும். அதில் வாழும் உயிரினங்கள் அனைத்துமே அழிவின் விளிம்புக்கு நகரும்; பல்லுயிர்ப் பெருக்கம் பாதிக்கக் கூடும்.
அனல்மின் நிலையங்களை உடனடியாகக் கைவிட முடியாதுதான். இந்தியாவுக்குத் தேவையான நிலக்கரியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யலாம் என்றால், அந்நியச் செலாவணிக்கு எங்கே போவது? இடியாப்பச் சிக்கலை நாம் எதிர்கொள்கிறோம்.
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.
நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.
திருக்குறள் (எண் 511) அதிகாரம்: தெரிந்து வினையாடல்