FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

துஷ்பிரயோகத்துக்கான கடவுச்சிட்டை!

ஜிஎஸ்டியில் நிகழும் மோசடிகள் பற்றிய தலையங்கம்....

7 October 2026, 4:08 am IST
ஜிஎஸ்டி - கோப்புப் படம்
பகிர்:

நாளை கூட இருக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலின் 57-ஆவது கூட்டத்தில் ஒரு முக்கியமான முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒன்பது ஆண்டு அனுபவத்தின் அடிப்படையில் அந்த முடிவு பரிசீலிக்கப்பட்டு, ஜிஎஸ்டி நடைமுறையில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்கிற நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள் உற்பத்தியாளர்களும், வர்த்தகர்களும், நுகர்வோரும்.

இப்போது இருக்கும் ஜிஎஸ்டி நடைமுறையில், போலி விற்பனைச் சீட்டுகள்(ஃப்ராடுலன் இன்வாய்ஸஸ்), தவறான உள்ளீட்டு வரிக் கேட்பு (இன்புட் டாக்ஸ் க்ரெடிட்), பிடித்தம் செய்த வரியைச் செலுத்தாமல் ஏமாற்றுதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோரைக் கைது செய்யும் அதிகாரம் ஜிஎஸ்டி அதிகாரிகளுக்குத் தரப்பட்டிருக்கிறது. முக்கியமான குற்றங்களில் பயன்படுத்தப்பட வேண்டிய கைது செய்யும் அதிகாரம், பல அதிகாரிகளால் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்கிற குற்றச்சாட்டு நீண்டகாலமாக நிலவுகிறது.

அதிகாரிகளின் நேர்முக விசாரணை, வாடிக்கையாளரின் விளக்கங்கள், மதிப்பீடு செய்தல், வரி செலுத்துவதில் ஏற்பட்ட தாமதத்துக்கு வட்டி வசூலித்தல், அபராதம் விதித்தல் உள்ளிட்டவற்றின் மூலம் ஜிஎஸ்டி வசூல் தொடர்பான பிரச்னைகள் தீர்த்து வைக்கப்படுகின்றன. மிகவும் அதிக மதிப்புள்ள ஜிஎஸ்டி மோசடிகள் நடைபெறும்போதுதான், அவற்றின் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்வது அவசியமாகிறது.

Advertisement

Advertisement

ஜிஎஸ்டி வசூலில் கண்டிப்புக் காட்ட வேண்டியதிலும், முறையாக வரி வசூல் செய்து அடைக்கப்படுகிறதா என்பதைக் கண்டுபிடிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. 2025-26 நிதியாண்டின் உள்ளீட்டு வரிக் கேட்பு மோசடியின் மொத்த மதிப்பு ரூ. 74,782 கோடி. 358 பேர் வரி செலுத்துவதில் முறைகேடு, மோசடி, வசூலிப்பதை அடைக்காமல் ஏமாற்றியது உள்ளிட்டவற்றுக்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

எந்த அளவுக்கு திட்டமிட்டு வரி ஏய்ப்பு நடைபெறுகிறது என்பதை மேலே குறிப்பிட்ட உள்ளீட்டு வரிக் கேட்பின் மதிப்பு தெளிவுபடுத்துகிறது. அதே நேரத்தில், நடைமுறைத் தவறுகளுக்காகவும், தவறான கணக்கு தாக்கல் செய்ததற்காகவும் வாடிக்கையளர்கள் மீது கடுமையான கைது நடவடிக்கை பாய்வது என்பது ஏற்புடைய வழிமுறை அல்ல. தவறு செய்தவர்களைக் கண்டுபிடித்துத் தண்டிப்பதை உறுதிப்படுத்தும் அதே நேரத்தில், வாடிக்கையாளர்கள் மீதான அதிகார அத்துமீறல்கள் தடுக்கப்படுவதும் அவசியம்.

ஜிஎஸ்டி சட்டத்தின் பிரிவு 69-இன் கீழ், ரூ. 2 கோடிக்கும் அதிகமான வரிவசூல் தொடர்பான 132-ஆவது பிரிவுக்கு உட்பட்ட குற்றங்களில் ஆணையர், அந்த ஜிஎஸ்டி கணக்குதாரரைக் கைது செய்ய அதிகாரம் தரப்பட்டிருக்கிறது. ரூ. 5 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான வரி ஏய்ப்பு அல்லது மோசடியாக இருந்தால், பிணையில் வெளியே வர முடியாத கிரிமினல் குற்றமாக அதைப் பதிவு செய்யவும் அந்த ஆணையருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

கணக்குத் தாக்கல் செய்வதிலேயே போதிய பாதுகாப்புகள் உட்படுத்தப்பட்டிருப்பதால், தவறுகள் கண்டறியப்பட்டு மோசடிகளைத் தடுத்துவிட முடியும் என்று ஒரு கருத்து நிலவுகிறது. ஆணையருக்குத் தரப்பட்டிருக்கும் அதிகாரங்களைக் குறைப்பதாலோ அல்லது அகற்றுவதாலோ, வரிவசூல் பாதிக்கப்படும் என்பதுடன் வாடிக்கையாளர்களில் ஒருசிலர் துணிந்து ஏமாற்ற முற்படுவார்கள் என்று எச்சரிப்பவர்களும் இருக்கிறார்கள்.

கைது செய்யும் அதிகாரத்தை விதிவிலக்காக மட்டுமே கையாள வேண்டும் என்றும், அதை அன்றாட நடைமுறையாக்குவது தவறு என்றும் நீதிமன்றங்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. சிபிஐசி எனப்படும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கவரி வாரியத்தின் 2022 ஆகஸ்ட் 17சி அறிவுறுத்தல் அந்தக் கருத்தை உறுதி செய்கிறது. எந்தவொரு கைதும், அதற்கான காரணமும் அடுத்த 24 மணி நேரத்தில் ஆணையத்துக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்கிறது அந்த உத்தரவு அல்லது அறிவுறுத்தல்.

ஜிஎஸ்டி தொடர்பான இரண்டு முக்கியமான வழக்குகளில் கைது குறித்து இதே கருத்து வலியுறுத்தப்பட்டிருக்கிறது. "மேக் மை ட்ரிப்' வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஜனவரி 2019-இல் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது. அதேபோல, அகில் கிஷன் மக்கு வழக்கில் பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றம், கைது நடவடிக்கை அரிதான, அவசியமான வழக்குகளில் மட்டுமே கையாளப்பட வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

வருமான வரி உள்ளிட்ட நேரடி வரிகள் மூலம் ஜிஎஸ்டியைவிட அதிக அளவிலான வரி வருவாய் பெறப்படுகிறது. ஆனால், மதிப்பீடு செய்யும் அதிகாரிகளுக்குக் கைது செய்யும் அதிகாரம் வழங்கப்படவில்லை. குற்றங்களுக்கு நீதிமன்றங்களில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இணையவழியில் ஜிஎஸ்டி கையாளப்படும் நிலையில், மோசடிகளை எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும். ஜிஎஸ்டி வழிமுறை கடந்த ஒன்பது ஆண்டுகளில் தேவைக்கேற்ப மாற்றங்களையும், நடைமுறை வழிமுறைகளையும் உள்வாங்கி எளிமைப்படுத்தப்பட்டிருக்கிறது. திட்டமிட்ட மோசடிகளும், வரிஏய்ப்புகளும் தடுக்கப்படும் அதே நேரத்தில் நேர்மையான வர்த்தகர்கள், அதிகாரிகளால் அச்சுறுத்தப்படுவது, பொருளாதாரத்தை பாதிப்பதுடன் ஊழலுக்கும் வழிகோலும்.

அதிகாரிகளின் கையில் கைது செய்யும் அதிகாரம், துஷ்பிரயோகத்துக்கு வழிகோலும். நேர்மையான வர்த்தகர்களை அரசு நம்ப வேண்டும். தவறு செய்பவர்களைத் தொழில்நுட்பம் அடையாளம் காண வேண்டும்; மோசடியாளர்கள் முறைப்படி தண்டிக்கப்பட வேண்டும்; அதிகார துஷ்பிரயோகமும் தண்டனைக்குரிய குற்றமாக வேண்டும்!

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை

ஆராய்வான் செய்க வினை.

பொருள் வரும் வழிகளைப் பெருகச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.

திருக்குறள் (எண் 512) அதிகாரம்: தெரிந்து வினையாடல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments