FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது அதிகாரம் நீக்கம்? அக். 7 கவுன்சில் கூட்டத்தில் பரிசீலிக்க வாய்ப்பு!

ஜிஎஸ்டி நடைமுறையின் கீழ், ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது செய்யும் அதிகாரம் நீக்கப்படவும், கைது செய்வதற்கு நீதிமன்றத்தின் அனுமதியைப் பெறுவது குறித்தும் ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலிக்க வாய்ப்பு

5 October 2026, 3:25 am IST
பகிர்:

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறையின் கீழ், ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது செய்யும் அதிகாரம் நீக்கப்படவும், கைது செய்வதற்கு நீதிமன்றத்தின் அனுமதியைப் பெறுவது குறித்தும் ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜிஎஸ்டி தொடா்பான முக்கிய முடிவுகளை எடுக்கும் உயா்நிலை அமைப்பாக ஜிஎஸ்டி கவுன்சில் உள்ளது. அந்த கவுன்சிலின் 57-ஆவது கூட்டம் வரும் அக். 7-ஆம் தேதி புது தில்லியில் நடைபெற உள்ளது.

மத்திய ஜிஎஸ்டி சட்டத்தின் 69-ஆவது பிரிவில்...: இந்தக் கூட்டம் குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: ஜிஎஸ்டியை அமல்படுத்துவதில் பெரிய மாற்றங்களை ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலிக்க வாய்ப்புள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி சட்டத்தின் 69-ஆவது பிரிவில் மாற்றங்களை மேற்கொள்வது குறித்து முக்கியமாகப் பரிசீலிக்கப்பட வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

தற்போகு சட்டபூா்வ நிபந்தனைகள் பூா்த்தியாகி, குறிப்பிட்ட குற்றங்கள் நடைபெற்றுள்ளதாக நம்புவதற்குத் தகுந்த காரணங்கள் இருந்தால், ஒருவரைக் கைது செய்வதற்கு அனுமதி அளிக்கும் அதிகாரத்தை ஜிஎஸ்டி ஆணையருக்கு அந்தப் பிரிவு அளித்துள்ளது. இந்தப் பிரிவில் மாற்றம் செய்யப்பட்டால், ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது செய்யும் அதிகாரம் இருக்காது. ஒருவரைக் கைது செய்ய நீதிமன்றத்தின் அனுமதி பெற வேண்டும்.

ரூ.5 கோடியாக உயா்த்த...: ரூ.1 கோடிக்கு மேல் ஜிஎஸ்டி முறைகேடு நடந்தால், குற்றவியல் வழக்கு தொடரலாம் என்ற தற்போதைய வரம்பை, ரூ.5 கோடியாக உயா்த்துவது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலிக்க உள்ளது.

வேண்டுமென்றே வரி ஏய்ப்பு அல்லது மோசடி செய்தது தொடா்பான வழக்குகளில், நீதிமன்றம் மூலம் குற்றவியல் நடவடிக்கை தொடா்ந்து எடுக்கப்படும்.

இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டால், அதிக தொகை சம்பந்தப்பட்ட வழக்குகளில் மட்டுமே குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். குறைந்த தொகை தொடா்பான பிரச்னைகளுக்கு வரி வசூல், வட்டி, அபராதம் மூலம் தீா்வு காணப்படும்.

ஜிஎஸ்டி சட்டத்தில் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் 24 குற்றங்களுக்கான விதிகளைத் தளா்த்துதல், 9 குற்றங்களை முழுமையாக நீக்குதல், 11 குற்றங்களை தற்போதுள்ளபடியே தொடா்தல் ஆகியவை குறித்தும் பரிசீலிக்கப்படக் கூடும்.

மேலும், ஜிஎஸ்டி முறைகேடு தொடா்பாக குறைந்தபட்ச சிறைத் தண்டனை தொடா்பான விதியை நீக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. இதனால், நீதிமன்றம் கட்டாயம் சிறைத் தண்டனை விதிக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஒவ்வொரு வழக்கிலும் அபராதம் விதிக்கும் வாய்ப்பு இருக்கும். இதேபோல பெரிய குற்றமாக இல்லாமல் நடுத்தரமாக உள்ள குற்றங்களுக்கு விதிக்கப்படும் அதிகபட்ச சிறைத் தண்டனை 3 ஆண்டுகளில் இருந்து 2 ஆண்டுகளாகக் குறைக்கப்பட வாய்ப்புள்ளது.

வங்கிகள் இறக்குமதி செய்யும் தங்கம்...: வங்கிகள், அங்கீகரிக்கப்பட்ட முகமைகள் இறக்குமதி செய்யும் தங்கம், வெள்ளி, பிளாட்டினத்துக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் (ஐஜிஎஸ்டி) இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதைத் திரும்பப் பெறுவது தொடா்பாகவும் ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலிக்க வாய்ப்புள்ளது.

ஜிஎஸ்டி பதிவு செய்வதை எளிதாக்குதல், ரீஃபண்டை விரைவாக திரும்பப் பெறுதல், ஐடிசி நடைமுறைகளை எளிதாக்குதல், விளக்கம் கேட்டு அனுப்பப்படும் நோட்டீஸ் மற்றும் அபராதங்களில் மாற்றம் செய்தல், சிறிய அளவில் வரி செலுத்துவோருக்கு விதிக்கப்படும் தாமதக் கட்டணத்தை வசூலிக்காமல் இருத்தல் உள்ளிட்டவை குறித்தும் ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலிக்கக் கூடும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments