நிதி மோசடியின் பரிணாமம்!
பிட்காயின் மோசடி பற்றிய தலையங்கம்......
நிதி மோசடிகள் குறித்து மத்திய, மாநில அரசுகளும், காவல் துறையினரும் எவ்வளவுதான் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் மோசடியாளர்களின் நூதன திட்டமிடுதலுக்கும், குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்கிற பேராசைக்கும் பொதுமக்கள் இரையாவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வரிசையில் சேர்ந்திருக்கிறது மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களை அதிரவைத்துள்ள பிட்காயின் மோசடி.
"எஃப்க்யூஎல் எக்ஸ்சேஞ்ச்', "வி.ஜி.' ஆகிய செயலிகள் மூலம் நடந்துள்ள இந்த மோசடி தொடர்பாக ஆக. 31-ஆம் தேதி வரை 40,000 புகார்கள் காவல் துறைக்கு வரப்பெற்றுள்ளன. இதையடுத்து, இந்த வழக்கை பொருளாதாரக் குற்றப் பிரிவுக்கு மாற்றி தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டிருக்கிறார். இதுவரை இந்த மோசடி தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சில வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கின்றன.
எஃப்க்யூஎல் செயலி மோசடி தொடர்பாக வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. 2025- ஆம் ஆண்டு இறுதியில் எஃப்க்யூஎல் செயலி தொடங்கப்பட்டது. இந்தச் செயலியில் இணைந்த முதலீட்டாளர்களுக்கு, 40 முதல் 50 நாள்களில் முதலீட்டுத் தொகை இரட்டிப்பாக வழங்கப்படும் என விளம்பரப்படுத்தப்பட்டது. ரூ.54,000 கொடுத்து இணைந்த உறுப்பினர்களுக்கு தனி இணையதள முகவரியை அணுக வசதி ஏற்படுத்தித் தரப்பட்டது.
Advertisement
Advertisement
முதலீடாக வழங்கப்பட்ட 54,000 ரூபாய் 500 அமெரிக்க டாலராக வரவு வைக்கப்பட்டதாக செயலி மூலம் தகவல் அனுப்பப்பட்டது. முதலீட்டாளரின் கணக்குக்கு நாள்தோறும் அனுப்பப்படும் மூன்று சங்கேத குறியீடுகளை ஏற்று புள்ளிகளைச் சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த அறிவுறுத்தலைப் பின்பற்றியவர்களுக்கு 45 நாள்களில் கூடுதலாக 500 அமெரிக்க டாலர் வரவு வைக்கப்பட்டதாக செயலியில் பதிவு செய்யப்பட்டது.
ஏற்கெனவே உறுப்பினர்களாக இருந்தவர்கள் இதில் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கு ஏற்ப, முகவர்களுக்கான டாலரின் எண்ணிக்கையும் அதிகரித்தது. முதலீட்டுத் தொகையிலிருந்து பணத்தை எடுக்காமல் அதிகமாக இருப்பு வைக்கும்போது, கூடுதல் ஊக்கத் தொகை கிடைக்கும் என மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் மிகச் சிலருக்கு முதலீட்டுத் தொகை இரட்டிப்பானதாக வெளியான தகவலைத் தொடர்ந்து ஏராளமானோர் வாட்ஸ்ஆப் "லிங்க்' மூலம் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து இணைந்தனர்.
அடுத்ததாக, எஃப்க்யூஎல் செயலியைப் போன்றே வி.ஜி. என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் புதிய உறுப்பினர்களாகச் சேர ரூ.1 லட்சம் முதலீடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஒரு உறுப்பினரைச் சேர்த்துவிட்டால் தலா ரூ.25,000 வீதம் முகவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. கிராமப்புற மக்களை மட்டுமே குறிவைத்து இந்த பிட்காயின் மோசடி செயலிகள் இயக்கப்பட்டன. இதை நம்பி கிராமப்புற மக்கள் ஏராளமானோர் இதில் முதலீடு செய்யத் தொடங்கினர்.
செயலியை நடத்துபவர்களால் டாலரில் வரவு வைக்கப்பட்டிருந்த தொகையை இந்திய ரூபாயாக மாற்றுவதற்கு "பினான்ஸ்' என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து இருப்புத் தொகையை அறிந்துகொள்ள வாடிக்கையாளர்கள் முயற்சித்தபோது, இருப்புத் தொகை பூஜ்ஜியமாக இருப்பதைப் பார்த்துதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர். அதன்பிறகு செயலிகளும் முடங்கின.
மோசடி செய்யப்பட்ட தொகை ரூ.2,000 கோடிக்கும் கூடுதலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. கிரிப்டோகரன்ஸி பரிமாற்றத் தொடர்புகளை வைத்துப் பார்க்கும்போது, இந்த மோசடியில் சர்வதேசத் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. முன்னர் அங்கீகாரம் இல்லாத சிட்ஃபண்ட் மோசடிகள் பரவலாக நடைபெறும். இப்போது தொழில்நுட்பத்துக்கு ஏற்ப இணையவழி மோசடியாக வந்து நிற்கிறது.
இணையவழி மோசடி, எண்மக் கைது என இணையத்தைப் பயன்படுத்தி தினமும் மோசடிகள் அரங்கேறிவரும் காலம் இது. இந்த மோசடியில் சிக்காமல் இருப்பதற்கு விழிப்புணர்வு ஒன்றுதான் வழி என காவல் துறையும், வங்கிகளும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன.
குறுகிய காலத்தில் பணத்தை இரட்டிப்பாக்குவது சாத்தியமே இல்லாதது. இருப்பினும், அதே ஆசையைக் காட்டித்தான் எஃப்க்யூஎல், வி.ஜி. செயலி மோசடிகள் நிகழ்ந்திருக்கின்றன.
ஆரம்பகட்ட முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் வருமானம் அந்த நிறுவனத்தின் உண்மையான லாபத்திலிருந்து வழங்கப்படுவதில்லை. புதிய முதலீட்டாளர்களிடமிருந்து பெறப்படும் நிதியிலிருந்தே அளிக்கப்படுகிறது. புதிய முதலீடுகள் நின்றுபோகும்போது அந்தத் திட்டமும் நின்றுவிடுகிறது. உறுதி செய்யப்பட்ட அல்லது ஆபத்து இல்லாத வருமானம் என ஆசை காட்டுதல், உடனடியாக முதலீடு செய்யுமாறு வற்புறுத்துதல்- இவற்றில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
முதலீட்டு ஆலோசகர்கள் அல்லது நிறுவனம் "செபி'யில் பதிவு செய்துள்ளனரா என்பதைச் சரிபார்க்க வேண்டும். ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்யும் முன்னர் அதன் அதிகாரபூர்வ இணையதளம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
வாட்ஸ்ஆப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்படும் எந்த இணைப்புக்குள்ளும் நுழைவது கூடாது போன்ற இணையவழி மோசடியில் சிக்காமல் இருப்பதற்கான வழிகளை அறிந்துகொள்வது அவசியம். ஏமாற்று உலகில் நாம்தான் ஏமாறாமல் இருக்க வேண்டும்!
அருளொடும் அன்பொடும் வாராப் பொருள்ஆக்கம்
புல்லார் புரள விடல்.
அருளோடும் அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத்
தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்.
திருக்குறள் (எண் 755) அதிகாரம்: பொருள் செயல்வகை
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.