FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வேகமெடுக்கும் நிர்வாகம்!

தமிழகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, வெளிப்படையான நிர்வாகம் என்ற நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

4 செப்டம்பர் 2026, 4:42 am IST
முதல்வர் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, வெளிப்படையான நிர்வாகம் என்ற நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 2026-27-ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் பல முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டு வருகிறார்.

அதன்படி, போக்குவரத்துத் துறையில் வாகனப் பதிவுச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் போன்றவை பதிவு நாளன்றே எண்ம வடிவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை (செப். 2) முதல்வர் ஜோசப் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்தப் புதிய நடைமுறை செப்டம்பர் 15-ஆம் தேதிமுதல் மாநிலத்திலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நடைமுறைக்கு வரவுள்ளது.

சாலைப் போக்குவரத்து அலுவலகங்களை கணினிமயமாக்கி மத்திய சாலைப் போக்குவரத்து- நெடுஞ்சாலைத் துறை பதிவுச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் குறித்த தரவுகளை 'பரிவாகன் சேவை' இணையதளம் மூலம் மத்திய அரசு பகிர்கிறது. வாகனப் பதிவில் தேசிய அளவில் மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இவற்றுக்கு அடுத்தபடியாக தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. மின்சார வாகனங்கள் பதிவில் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது.

Advertisement

Advertisement

தமிழகத்தில் 91 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், 56 பகுதி அலுவலகங்கள் என மொத்தம் 147 அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினமும் சராசரியாக 8,000 வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. ஓட்டுநர் உரிமங்கள், புதுப்பித்தல் போன்ற பணிகளும் நடைபெற்று வருகின்றன. காலத்துக்கேற்றபடி போக்குவரத்துத் துறையும் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது.

ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் (ரிஜிஸ்ட்ரேஷன் சர்டிபிகேட்) பெறுவதற்கு கட்டணமாக ரூ.250 விண்ணப்பதாரர்களால் செலுத்தப்பட்டு, 'சிப்' பொருத்தப்பட்ட அட்டைகளாக அஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களின் முகவரிக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை கடந்த 2015-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு கிடைப்பதற்கு ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை ஆவதால், பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.

மேலும், வாகனம் தொடர்பான சேவைகளைப் பெற வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் காலதாமதமும், பணம் கொடுக்காமல் வேலை நடக்காது என்ற குற்றச்சாட்டும் நிலவும் நிலையில், வாகனப் பதிவுச் சான்றிதழ்கள், ஓட்டுநர் உரிமங்களை எண்ம முறையில் பொதுமக்கள் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தரகர்கள் மற்றும் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி நிர்வாகங்கள் தங்களுக்கு விண்ணப்பதாரர்கள் முழுக் கட்டணத்தையும் செலுத்தும் வரை அசல் சான்றிதழ்களை வழங்காமல் வைத்துக் கொள்ளும் செயலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த வெளிப்படையான விரைவான நடைமுறை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

எண்ம வாகனப் பதிவுச் சான்றிதழ் முறை (எண்ம ஆர்சி) அறிமுகம் செய்வதன் மூலம் புதிய வாகனம் வாங்குவோர் வாகனப் பதிவை அதாவது எண்ம ஆர்சி-ஐ இணையம் வழியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதேபோல, ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே ஓட்டுநர் உரிமம் எண்ம முறையில் வழங்கப்படும். இந்த எண்ம ஆவணங்களை அதில் இடம்பெற்றுள்ள 'க்யூ ஆர் கோடை' ஸ்கேன் செய்து அரசு அலுவலர்கள், போக்குவரத்து போலீஸார் மற்றும் பிற அதிகாரபூர்வ அமைப்புகள் மின்னணு முறையில் சரிபார்க்க முடியும். இதன்மூலம் போலி ஆவணங்கள் தவிர்க்கப்படும்.

இந்த முறையால் ஆவணங்கள் தொலைந்தாலோ, சேதம் அடைந்தாலோ மீண்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், அச்சிட்டுக் கொள்ளவும் முடியும். ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும், வாகனத்தைப் பதிவு செய்வதற்கும் வாகனப் பதிவு புதுப்பித்தல் மற்றும் படிப்படியாக போக்குவரத்துத் துறை சம்பந்தமான அனைத்து அலுவலக சேவைகளுக்கும் தமிழ்நாட்டில் எந்த ஒரு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் விண்ணப்பித்து, 'எனிவேர் ரிஜிஸ்ட்ரேஷன் லைசன்ஸ்' எனும் முறை படிப்படியாகச் செயல்படுத்தப்படும் என்றும் முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது ஆண்டுதோறும் 'சிப்' பொருத்தப்பட்ட சுமார் 30 லட்சம் ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 20 லட்சம் புதிய வாகனப் பதிவுச் சான்றிதழ்களும், சுமார் 9 லட்சம் புதிய வாகன ஓட்டுநர் உரிமங்களும் அடங்கும். மேலும், 45,000 ஓட்டுநர் உரிமங்கள் புதுப்பித்தல், வாகனப் பதிவில் பெயர் மாற்றம் மற்றும் பிற திருத்தங்கள் தொடர்பாக 15,000 விண்ணப்பங்களும் பெறப்பட்டு அதுதொடர்பாக ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

முதல்வரின் இந்த அறிவிப்பால் ஸ்மார்ட் அட்டைகள் வழங்கும் நடைமுறை படிப்படியாக முடிவுக்கு வரும். மேலும், வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஊழியர்களின் பணிச்சுமை குறைவதுடன் ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்துக்கு அரசுத் துறைகளை அழைத்துச் செல்லும் முன்னோடித் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இது அமையும். அதற்கு இந்தப் புதிய நடைமுறை குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி, வெற்றி பெறச் செய்வதில் அரசு ஊழியர்களின் ஒத்துழைப்பும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்

துன்பம் துடைத்துஊன்றும் தூண்.

தன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்கொண்ட செயலை முடிக்க விரும்புகின்றவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கி தாங்குகின்ற தூண் ஆவான்.

திருக்குறள் (எண் 615) அதிகாரம்: ஆள்வினை உடைமை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments