FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கல்வி

கலைத்துறையில் காத்திருக்கும் படிப்புகள்!

இன்றைய இளம் தலைமுறையினர் கல்வி, விளையாட்டு, கலைத்துறை என அனைத்து துறைகளிலும் தடம் பதித்து வருகின்றனர். + 2 முடித்த பிறகு, மருத்துவம், பொறியியல், வணிகவியல் என அவரவர்களுக்குப் பிடித்த துறைகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

Updated On : 21 மே 2016, 9:26 am IST
பகிர்:

இன்றைய இளம் தலைமுறையினர் கல்வி, விளையாட்டு, கலைத்துறை என அனைத்து துறைகளிலும் தடம் பதித்து வருகின்றனர். + 2 முடித்த பிறகு, மருத்துவம், பொறியியல், வணிகவியல் என அவரவர்களுக்குப் பிடித்த துறைகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

இசையில் ஆர்வமுள்ள மாணவர்களை பொறியியல், மருத்துவப் படிப்புகளில் கொண்டு போய் திணித்தால், அவர்கள் அதில் வெற்றி பெற முடியாமல் போய்விடலாம். இசை, கலைத்துறையில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு முறையாகப் பயிற்சி கொடுக்கும் வகையில், பயன்படும் வகையில், தமிழகத்தில் நான்கு அரசு இசைக் கல்லூரிகளும், 17 மாவட்ட இசைப் பள்ளிகளும், இரண்டு கவின் கலைக் கல்லூரிகளும், ஒரு சிற்பக் கல்லூரியும், 36 ஜவஹர் சிறுவர் மன்றங்களும் செயல்பட்டு வருகின்றன.

அரசு இசைக் கல்லூரிகள்: சென்னை, மதுரை, கோவை, திருவையாறு ஆகிய நகரங்களில் இயங்கும் அரசு இசைக் கல்லூரிகளில் தேவாரம் கற்றுத் தரப்படுவதோடு, கர்நாடக சங்கீதமும் கற்றுத் தரப்படுகிறது.

Advertisement

Advertisement

தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி நடத்தப் பெற்று வருகிறது. இசைக் கல்லூரியில் கலையியல் இளையர் (B.Music), முதுகலை (M.Music) இசைப் பட்டப் படிப்புகள் அளிக்கப்படுகின்றன. இசையியல் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பும் அளிக்கப்படுகிறது. இசை குறித்த பட்டயப் படிப்புகளும் நடத்தப்படுகின்றன.

குரலிசை, வயலின், வீணை, மிருதங்கம், புல்லாங்குழல், நாதசுரம், தவில், கடம், கஞ்சிரா, மோர்சிங், கிராமியக் கலை, பரதநாட்டியம் எனும் தலைப்பில் மூன்று ஆண்டுகள் பட்டயப் படிப்புகளும், மேல்நிலை இசைக் கலைமணி, நட்டுவாங்கக் கலைமணி எனும் தலைப்புகளில் இரண்டாண்டு பட்டயப் படிப்புகளும், இசை ஆசிரியர் பயிற்சி எனும் ஓராண்டு பட்டயப் படிப்பும் நடத்தப்பட்டு வருகின்றன.

இவை தவிர, பல்வேறு பல்கலைக்கழகங்களிலும், தனியார் அகாதெமிகளும், கல்லூரிகளும் இசை தொடர்பான இளநிலை, முதுநிலைக் கல்வியையும், பயிற்சியையும் வழங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் மாணவர்கள், தொழிலாளர்கள், இல்லத்தரசிகள் என இசையின் மீதும், கலைகளின் மீதும் ஆர்வமுடைய யார் வேண்டுமானாலும் சேர்ந்து பயின்று பயன்பெறலாம். சில பல்கலைக்கழகங்களில் தொலைதூரக் கல்வியாகவும் பயில வாய்ப்பளிக்கப்படுகிறது.

அரசு இசைப்பள்ளிகள்: 14 வயதுக்கு மேல் 25 வயதுக்குள்பட்ட இருபாலரும் அரசு இசைப் பள்ளிகளில் சேர்ந்து பயிலாம். குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக 8ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. இங்கு குரலிசை, பரதநாட்டியம், தேவாரம், தவில், நாகஸ்வரம், வயலின், மிருதங்கம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பட்டயப் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

இப்பள்ளி மாணவர்களுக்கு சாதாரண பள்ளி மாணவர்களுக்குண்டான அனைத்து அரசின் உதவிகளும் (இலவச பேருந்து பயண அட்டை, இலவச சைக்கிள், சீருடை, காலணி, தங்கும் விடுதி வசதி உள்ளிட்டவை) வழங்கப்படுகின்றன. மேலும் கூடுதலாக, இக்கல்வி பயில்வோரின் எண்ணிகையை அதிகரிக்கவும், மாணவர்களிடம் ஆர்வத்தை தூண்டவும், அரசு இசைப்பள்ளியில் பயிலும் ஓவ்வொரு மாணவருக்கும் மாதந்தோறும் ரூ. 400 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு வசூலிக்கப்படும் ஆண்டுக் கட்டணமோ, அரசு வழங்கும் ஒரு மாத உதவித்தொகையை விட மிகக் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்புகளை நிறைவு செய்தோர், இதே துறையில் ஆசிரியர் பயிற்சியையும் நிறைவு செய்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இசை, நடன ஆசிரியர்களாகவும், இந்து அறநிலையத்துறை மூலம், கோயில்களில் அரசுப் பணி பெறவும் வாய்ப்புள்ளது.

மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் விருப்பமுள்ளோர் இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள கலை பண்பாட்டு மையங்களையோ, இசைப் பள்ளி, கல்லூரிகளையோ தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments