இந்தியாவின் ஏஐ எதிர்காலத்தை அடித்தளத்திலிருந்து உருவாக்க வேண்டும்: ஸ்ரீதர் வேம்பு
இந்திய ஏஐ குறித்து ஸ்ரீதர் வேம்பு...
சோஹோ இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு ஏஐ-யின் இந்திய எதிர்காலம் குறித்துப் பேசியுள்ளார்.
சோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை விஞ்ஞானியான ஸ்ரீதர் வேம்பு, இந்தியா தனது சொந்த தொழில்நுட்ப அடித்தளத்தை முழுமையாக உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதில், செமிகண்டக்டர்கள், டேட்டா சென்டர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட அனைத்தும் அடங்கும் என்பதை, உணவு மற்றும் ஆற்றல் துறைகளில் இந்தியா தன்னிறைவை நோக்கி எடுத்த முயற்சிகளுடன் ஒப்பிட்டார்.
என்பிசிஐ (National Payments Corporation of India (NPCI) அமைப்பின் தலைமைச் செயலரான திலீப் அஸ்பே உடன் நடைபெற்ற “Innovators Playground” பாட்காஸ்டில் பேசிய ஸ்ரீதர் வேம்பு, தொழில்நுட்பம் இன்று உணவுப் பாதுகாப்பைப் போலவே ஒரு நாட்டின் நலனுக்கு அடிப்படையானதாக மாறிவிட்டதாகக் கூறினார். “நமது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களும் தற்போது தொழில்நுட்பத்தைச் சார்ந்துள்ளன,” என்று அவர் குறிப்பிட்டார். மேலும், கடந்த 30 ஆண்டுகளாக சோஹோ (zoho) நிறுவனத்தின் நோக்கம் இந்தியாவிற்குள் இந்த திறன்களை உருவாக்குவதே என்றும் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து பேசும்போது, மேற்கத்திய நாடுகளைப் போல மிகப்பெரிய அளவில் GPU முதலீடு செய்வதற்குப் பதிலாக, இந்தியா திறமையான மற்றும் சிக்கனமான அணுகுமுறைகளை உருவாக்க வேண்டும் என்றார். சிறிய, குறிப்பிட்ட பணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட AI மாதிரிகள், சாதனங்களிலேயே (edge computing) இயங்கும் வகையில் உருவாக்கப்பட வேண்டும் என்றும், கட்டமைக்கப்பட்ட பணிகளை நம்பகமாகச் செய்யக்கூடிய மென்பொருள் ஏஜெண்டுகளுடன் அவை இணைக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டவர், “பொறியியல் திறனில் நாம் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்,” என்றார்.
தமிழ்நாட்டின் தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நடைமுறை நிரலாக்கம் (programming) மற்றும் தொடர்புடைய திறன்களை கற்பிக்கும் Zoho-வின் கிராமப்புற திறன் மேம்பாட்டு முயற்சியையும் அவர் விளக்கினார். பல மாணவர்கள் முதன்முறையாக கணினியை பயன்படுத்தத் தொடங்கிய சில மாதங்களுக்குள்ளேயே, வணிக ரீதியாக கிடைக்கும் ஏஐ மாதிரிகளைப் பயன்படுத்தி செயல்படும் ஏஐ கருவிகளை உருவாக்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
மென்பொருளைத் தாண்டி, Zoho நிறுவனம் கிராமப்புறங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை (R&D) மையமாகக் கொண்ட உற்பத்தித் துறையிலும் விரிவடைவயைக் காணும் வகையில். மின்சார கருவிகள், சோதனை மற்றும் அளவீட்டு கருவிகள், மற்றும் பொருள் அறிவியல் (materials science) சார்ந்த திறன்கள் ஆகியவற்றை உருவாக்கி வருகிறது. இதை ஸ்ரீதர் வேம்பு “ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் மூலம் கிராமப்புற வளர்ச்சி” என்ற தத்துவமாக விவரித்தார்.
எதிர்கால மென்பொருள் தயாரிப்புகள் குறித்து அவர் கூறுகையில், வணிகப் பயனர்கள் தங்கள் தரவுகளுடன் இயல்பான மொழியில் பேசக்கூடிய ஒரு உலகம் உருவாகும் என்றார். பின்னணியில் ஏஐ கேள்விகளுக்கு பதிலளித்து, தானியக்க செயல்பாடுகளை மேற்கொள்ளும். ஆனால், இந்த எதிர்காலம் நனவாக வேண்டுமெனில், ஏஐ செயலாக்கத்தின் (inference) செலவு கணிசமாகக் குறைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த உரையாடலில், மிகப்பெரிய முதலீடுகள் மட்டுமல்லாமல், இந்தியாவின் பரந்த அளவிலான திறன் மற்றும் பொறியியல் புத்தாக்கமே நாட்டின் தொழில்நுட்ப எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியும் என்று தன் நம்பிக்கையை உறுதியாக வெளிப்படுத்தினார்.