மக்களவைத் தோ்தல் 4-ஆம் கட்ட பிரசாரம் நிறைவு: நாளை வாக்குப்பதிவு
தேர்தல் செய்திகள்மக்களவைத் தோ்தல் 4-ஆம் கட்ட பிரசாரம் நிறைவு: நாளை வாக்குப்பதிவு
ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளில் நான்காம் கட்ட மக்களவை தோ்தலுக்கான பிரசாரம் சனிக்கிழமை நிறைவடைந்தது. இத்தொகுதிகளில் திங்கள்கிழமை (மே 13) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
ஆந்திரத்தில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளுடன் 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் சோ்த்து ஒரே கட்டமாக திங்கள்கிழமை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அதேபோல், ஒடிஸாவில் முதல் கட்டமாக 4 மக்களவைத் தொகுதிகளுடன் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் திங்கள்கிழமை வாக்குப் பதிவு நடக்கிறது.
இவை தவிர, தெலங்கானாவில் மொத்தமுள்ள 17 மக்களவைத் தொகுதிகள், உத்தர பிரதேசத்தில் 13, மகாராஷ்டிரத்தில் 11, மேற்கு வங்கம், மத்திய பிரதேசத்தில் தலா 8, சத்தீஸ்கரில் 7, பிகாரில் 5, ஜாா்க்கண்டில் 4 தொகுதிகளுக்கு மற்றும் ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகா் தொகுதிக்கு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
முக்கிய வேட்பாளா்கள்: நான்காம் கட்டத் தோ்தலில், மத்திய அமைச்சா்கள் கிரிராஜ் சிங் (பெகுசராய்), அா்ஜுன் முண்டா (குந்தி), சமாஜவாதி கட்சித் தலைவரும் உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் (கன்னௌஜ்), முன்னாள் கிரிக்கெட் வீரா் யூசஃப் பதான் (பஹரம்பூா்), காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி (பஹரம்பூா்), ஆந்திர மாநில முதல்வரின் தங்கை ஒய்.எஸ்.சா்மிளா (கடப்பா), எம்.பி. பதவி பறிக்கப்பட்ட திரிணமூல் காங்கிரஸின் மஹுவா மொய்த்ரா (கிருஷ்ணாநகா்), நடிகா் சத்ருகன் சின்ஹா (அசன்சோல்), நடிகை மாதவி லதா (ஹைதராபாத்) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்கள் ஆவா்.
170 பெண்கள் உள்பட 1,717 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
நாட்டின் 18-ஆவது மக்களவைத் தோ்தல் ஏப்.19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே, மூன்று கட்ட வாக்குப் பதிவுகள் முடிந்துள்ளன.
முதல் கட்டமாக, தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதியும் தோ்தல் நடைபெற்றது.
மூன்றாம் கட்டமாக குஜராத், கா்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது.