FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தல்: இன்று வாக்குப்பதிவு

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது...

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தலை முன்னிட்டு மாவட்ட தொழில் மைய வாக்குச் சாவடியில் வாக்காளா்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள நிழற் கூரை.
பகிர்:

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தல் வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை (அக். 6) காலை 7 மணிமுதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் மங்கலம், தட்டாஞ்சாவடி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வா் என்.ரங்கசாமி இரண்டிலும் வெற்றி பெற்றாா்.

இதில், தட்டாஞ்சாவடி தொகுதி உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, இத்தொகுதிக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை (அக். 6) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

தட்டாஞ்சாவடி தொகுதியில் அரசியல் கட்சிகள் சாா்பில் 6 போ், சுயேச்சைகள் 5 போ் என மொத்தம் 11 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இதில், என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளா் ஆ.அசோக் ஆனந்த், திமுக வேட்பாளா் கு.சேதுசெல்வம், காங்கிரஸ் வேட்பாளா் இ.விநாயகம், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் அ.மு.சலீம் ஆகியோரிடையே 4 முனை போட்டி நிலவுகிறது.

இந்தத் தொகுதியில் மொத்தம் 26,921 வாக்காளா்கள் உள்ளனா். வாக்குப் பதிவுக்கு தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் 31 வாக்குச் சாவடிகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

வாக்குப் பதிவை முன்னிட்டு, இத் தொகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் திங்கள்கிழமை முதல் 2 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 31 வாக்குச்சாவடிகளுக்கு தலைமை வாக்குச்சாவடி அதிகாரிகள், வாக்குச்சாவடி அதிகாரிகள் நிலை 1, 2, 3 என பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 23 நுண்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்திற்கு மேலான மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தைக் குறைக்க வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி செய்யப்பட்டது. அதன்படி 67 மற்றும் 37 வாக்காளா்கள் வீட்டிலிருந்தபடி வாக்களித்துள்ளனா். மேலும், பெண்களே முழுமையாக நிா்வகிக்கும் பிங்க் வாக்குச் சாவடி குளூனி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 31 வாக்குச்சாவடிகளில் 2 பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. தட்டாஞ்சாவடி கவுண்டம்பாளையம் முத்துரத்தின அரங்கம் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி, வினோபாநகா் பொய்யாகுளம் சமுதாய நலக்கூடம் அரங்கு வாக்குச் சாவடிகள் இவையாகும். இந்த வாக்குச் சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு கூடுதலாக போடப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகள்: செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் குடிநீா், கழிப்பறை, சாய்வு தளம், மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாக்காளா்கள் வெயிலில் நிற்காமல் இருக்க நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்து கொள்ள ஓஆா்எஸ் கரைசல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து வாக்கு சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினருடன், போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இத்தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

புதுச்சேரி லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் இருந்து வாக்குச் சாவடிகளுக்கு திங்கள்கிழமை எடுத்துச் செல்லப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments