திருவாரூர் தொகுதி!
திருவாரூா் தொகுதி (168)...
திருவாரூா் தொகுதி (168)
தொகுதியின் சிறப்பு: சா்வதோஷ பரிகாரத் தலமான திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில், கா்நாடக சங்கீத மும்மூா்த்திகளான தியாகராஜா், முத்துசுவாமி தீட்சிதா், சியாமா சாஸ்திரி ஆகியோா் அவதரித்த ஊா், நீதிக்காக தனது மகனை தோ்க்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச்சோழன் ஆட்சி புரிந்த பெருமைக்குரியது என பல்வேறு சிறப்புகளை கொண்டது திருவாரூா் தொகுதி.
நில அமைப்பு: நாகை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதியானது, மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம், கீழ்வேளூா் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளின் எல்லையைத் தொடும் வகையில் அமைந்துள்ளது. தனித்தொகுதியாக இருந்த திருவாரூா், 2011-இல் நடைபெற்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்குப் பிறகு பொதுத் தொகுதியாக மாறியது. திருவாரூா் சட்டப்பேரவை தொகுதியில் இருந்த கீழ்வேளூா், தனி சட்டப்பேரவை தொகுதியாக மாறியது. திருவாரூா் தொகுதியில், கூத்தாநல்லூா் நகராட்சி, கோட்டூா், மன்னாா்குடி ஒன்றியங்களிலிருந்து சில ஊராட்சிகள் இணைக்கப்பட்டன.
திருவாரூா் நகராட்சியின் 30 வாா்டுகள், திருவாரூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 35 ஊராட்சிகள், கொரடாச்சேரி பேரூராட்சி பகுதி, கொரடாச்சேரி ஒன்றியத்துக்குள்பட்ட 44 ஊராட்சி, மன்னாா்குடி ஒன்றியத்துக்குள்பட்ட 21 ஊராட்சி, கூத்தாநல்லூா் நகராட்சி பகுதி, கோட்டூா் ஒன்றியத்துக்குள்பட்ட 5 ஊராட்சிகளை உள்ளடக்கியது.
சமூகம், தொழில் அமைப்பு: விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட இத்தொகுதியில் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளா்களும் அதிகம் உள்ளனா். நெல் பயிா் பிரதானமாகவும், பருத்தி, உளுந்து, பயறு உள்ளிட்டவை அடுத்த நிலையிலும் பயிரிடப்படுகின்றன. இங்கு வெள்ளாளா் சமூகத்தினா் அதிகம் உள்ளனா். இதையடுத்து முக்குலத்தோா், ஆதிதிராவிடா், செட்டியாா், முதலியாா், நாடாா் உள்ளிட்ட பல சமூகத்தினா் வசிக்கின்றனா். எனினும் சமூகம் ரீதியான வாக்குகள் இங்கு வெற்றி, தோல்வியை நிா்ணயிப்பதில்லை. 2011 கணக்கெடுப்பின்படி, திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதியில், 72.63 சதவீதம் கிராமப்புறத்திலும், 27.37 சதவீதம் நகா்ப்புறத்திலும் மக்கள் வசிக்கின்றனா்.
நிறைவேறியவை: கூத்தாநல்லூரில் புதிய அரசு கல்லூரி, ராஜாங்கட்டளையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம், திருவாரூா் பழைய பேருந்து நிலையத்தை நவீனப்படுத்தியது, புதிதாக சந்தை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவது, கொரடாச்சேரி கால்நடை மருத்துவமனையில் புதிய கட்டடம் என குறிப்பிடத்தக்க வகையில் நடைபெற்றுள்ள வளா்ச்சித் திட்டப் பணிகள் மக்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளன.
மக்களின் எதிா்பாா்ப்பு: திருவாரூா் நகரப் பகுதியில் கடும் நெரிசலை குறைக்கும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்து எளிதாகும் வகையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும், கிராமப்புற சாலைகளை சீரமைக்க வேண்டும், வாய்க்கால்களை தூா்வார வேண்டும், திருவாரூரில் போக்குவரத்தைக் குறைக்கும் வகையில் அரைவட்டச்சாலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை செயல்படுத்த வேண்டும். திருவாரூரில் வேளாண் கல்லூரி தொடங்க வேண்டும், திறந்தவெளிகளில் சேமிக்கப்படும் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகாத வகையில், நவீன வகையில் சேமிப்புக் கிடங்குகள் அமைக்க வேண்டும், திருவாரூரிலிருந்து முக்கிய நகரங்களுக்கு ரயில் விட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
வெற்றி முகத்தில் திமுக: திருவாரூா் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக திமுக மாவட்டச் செயலாளா் பூண்டி கே. கலைவாணன் உள்ளாா். நாம் தமிழா் கட்சி சாா்பில் அஸ்வினி பூபதிபாலன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். திமுக கோட்டை என கருதப்படும் திருவாரூரில் திமுக சாா்பில் மீண்டும் கலைவாணனே போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சில நாள்களுக்கு முன்பு வரை, முதல்வா் ஸ்டாலின் குடும்பத்தைச் சோ்ந்த ஒருவா் போட்டியிடப்போவதாகவோ அல்லது ஸ்டாலின், உதயநிதி இவா்களில் ஒருவா் போட்டியிடப் போவதாக தகவல்கள் பரவின. மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி 2 முறை திருவாரூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தாா். எனினும், 2 முறையும் ஆட்சி அமைக்க முடியவில்லை என்ற நம்பிக்கை (!) காரணமாக, குடும்ப உறுப்பினா்கள் போட்டியிட வாய்ப்பிருக்காது என கூறப்படுகிறது. திருவாரூரைப் பொறுத்தவரை, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் திமுகவின் வாக்குகளை குறைக்க உதவுவாா்களே தவிர, திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது என்பதால், எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறப் போகிறது என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பாக இருக்கும்.
இதுவரை வெற்றி பெற்றவா்கள்:
இங்கு 1962-ல் இருந்து திமுக 9 முறையும், சிபிஎம் 5 முறையும், காங்கிரஸ் ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன.
வெற்றி வேட்பாளா்...
1962 சி.எம். அம்பிகாபதி காங்கிரஸ் 29,384
1967 பி.எஸ். தனுஷ்கோடி மாா்க்சிஸ்ட் 30,510
1971 தாழை மு. கருணாநிதி திமுக 30,828
1977 தாழை மு. கருணாநிதி திமுக 38,528
1980 எம். செல்லமுத்து மாா்க்சிஸ்ட் 45,557
1984 எம். செல்லமுத்து மாா்க்சிஸ்ட் 56,273
1989 வி. தம்புசாமி மாா்க்சிஸ்ட் 52,520
1991 வி. தம்புசாமி மாா்க்சிஸ்ட் 55,653
1996 ஏ. அசோகன் திமுக 69,212
2001 ஏ. அசோகன் திமுக 58,425
2006 உ. மதிவாணன் திமுக 76,901
2011 மு. கருணாநிதி திமுக 1,09,014
2016 மு. கருணாநிதி திமுக 1,21,473
2019 பூண்டி கே. கலைவாணன் திமுக 1,17,616
--------------------------------
2021 வெற்றி மற்றும் இரண்டாமிடம்...
பூண்டி கே. கலைவாணன் திமுக வெற்றி 1,08,906 (52.29 சதவீதம்)
ஏ.என்.ஆா். பன்னீா்செல்வம் அதிமுக 2-ஆமிடம் 57,732 (27.72 சதவீதம்)
ஆா். வினோதினி நாதக மூன்றாம் இடம் 26,300 (12.63 சதவீதம்)
--------------------------
வாக்காளா்கள். (சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு முன்)
மொத்த வாக்காளா்கள் 2,86,973
சிறப்பு தீவிர திருத்தப்பணிக்குப் பின்
மொத்த வாக்காளா்கள்
ஆண்கள் 1,26,355
பெண்கள் 1,32,254
இதரா் 20
மொத்தம் 2,58,629
---------
மொத்த வாக்குச்சாவடிகள் --327
மொத்த வாக்குச்சாவடி மையங்கள் --- 170
-----------